மாய வித்தைக்காரன்
நம் கண்ணெதிரே ஒவ்வொன்றாக
மறைய வைக்கிறான்
எங்கே என்று கேட்கச் சொல்லி
புருவம் உயர்த்துகிறான்
நாம் கேட்கிறோம்
எங்கே? எல்லாமும் எங்கே?
மேகமும் நாமும் உருவானது
பழங்கதை
வெள்ளை வெயிலில்நாரும் இலையும் தேடியலைகிறது
மஞ்சள் குருவி

கடுகு விதையாய்
உள்நாக்கில் கசந்து
தடம் புரண்ட இரயிலாகி
கனவு மிருகமாய்
குழந்தையை மிரட்டும்
கடவுளின் ஆவி

அகலத் திறந்த ஆகாயத்தில்
சுற்றுப்பாதை விலகாத
மணல்மேட்டில்
குரைத்துக் குரைத்துச் சாகிறது
வெறிநாய்

வேரில் நீர் தேடி மலரில்
மணம் தேக்கி
உலோகத்தில் இறுகி,
காகிதத்தில் உலர்ந்து
காற்றாய் சுவாசம் நிறைத்து
கழுத்தில் உச்சந்தலையில்
உதிரம் பாய்ந்து
உள்ளே நுரையீரல்
வெளியே விரல்களென
உடல் அசையும்

பிறகு நான் மனிதர்களிடம்
பேசத் தொடங்கினேன்
‘‘ஒருவேளை நீங்கள் என்னைப்
பெற்றெடுத்திருக்கலாம். ஆனால்
நான் ஆகாயத்தின் மகள்.”
அவர்கள் என்னிடம் சொன்னார்கள்
‘‘ஒருவேளை நாங்கள் உன்னைப்
பெற்றெடுத்திருக்கலாம். ஆனால்
நாங்களும் ஆகாயத்தின் மக்களே”

நமது நம்பிக்கை ஆதாரபூர்வமானது
நமது சந்தேகம் நியாயமானது
உறுதியாக நம்புகிறோம்
ஆழமாகச் சந்தேகிக்கிறோம்
பறவையின் இந்த எச்சத்தை
இந்த விடியலை இந்த
உறக்கத்தை

ஆழ்கடலின் தரை மணலில்
கோரப்பல் வெண்சுறா விழி பிதுங்கி
புரண்டு நெளிந்து குட்டி ஈன
பாறையிடுக்கில் பதுங்கும் பாம்பென
உடல் நழுவிக் கொடி அறுந்து
அறையில் அமைதியாகத் தூங்குகிறது
குழந்தை

பிரிக்கப்பட்ட கடிதமாய்
கம்பியில் உலரும் பட்டுத் துணியாய்
பெருநகரின் மேம்பாலமாய்
உலக அழகியின் உதட்டுச் சாயமாய்
நாயின் கழுத்துச் சங்கிலியாய்
இறந்த உடலின் நுரையீரலாய்
கைமீறிப் போயிருக்கிறது காரியம்.

தூர்ந்துபோன கிணற்றில்
எட்டிப் பார்க்க என்ன இருக்கிறது.
பாம்பும் பாம்பாட்டியும்
செத்தொழிந்துவிட்டனர்
பட்ட மரத்தின் கிளைகளில்
பழங்களைத் தேடுகிறது அணில்
நம்மால் அழவும் முடியவில்லை
சிரிக்கவும் முடியவில்லை
நாம் சொல்லாவிட்டாலென்ன
கோடு போட்டது புலியென்றும்
புள்ளி போட்டது சிறுத்தையென்றும்
நம் குழந்தைகள் தாமாகவே
தெரிந்துகொள்வார்கள்.
Pin It