சினையுறாதப் பறவையாகிப் பறக்கின்றேன்
இடவலமெங்கும் தேகத்தின் பெருவெளி
துயரத்தின் கயிறு பிணைக்காத
கால்கள் காற்றை வலிக்கின்றன
இமையற்ற விழியசைவுகளில்
புவியின் வளைக்கோணம்
நெடிய இறக்கைகளின் நிழல்கள்
வாழ்வின் புகைநிலங்களைப் போர்த்துகின்றன.
மயிரின் கதகதப்புக்குள் ஒளிந்திருக்கும்
வெளிர்தசையின் இரத்தம்
புயல்கண்ணாய் சுழல்கிறது
விரலிடைகளில் வனச்சஞ்சாரமும்
மனிதர்கள் கடந்து திரியும் பரப்பும்
சட்டமிட்ட சித்திரமாய் நகர்கின்றன.
என் கூரிய அலகால்
உடலைக் கோதுகின்றேன்
இறகுகள் உதிர்ந்துன்
நீர்நிலைகளில் சொட்டுகிறது இரத்தம்
உன்னிருப்பிடத்தின் உத்திரங்கள்
கரைந்தமிழ
கூடலசைவில் புரண்டுபடுக்கும்
உன் முதுகினில் உறுத்துகிறது,
நானற்ற கூண்டின் பெரும்சாவி.



ஒருவேளை

தோலினால் அடி தைக்கப்பட்டக்
கூடையுடன் அவள் கிளம்புகிறாள்
முனைமழுங்கிய இரும்புத்தகடும்
சேகரிக்கப்பட்ட சாம்பலும்
அவள் கைகளில் கனக்கின்றன.
மனித நெரிசலில் திணறும்
வீடொன்றின் பின்புறம் வந்து நிற்கிறாள்
பார்வையில் படுகிறது.
ஆணியில் சுழலும் சதுரத்தகடு.
ஒற்றைக்கையால் அதை உயர்த்தியபடி
சாம்பலையள்ளி உள்ளே வீசுகிறாள்
பின்
துளையின் முரட்டுப் பக்கங்களில்
முழங்கை சிராய்க்க
இடவலமாய் கூட்டிக் கூட்டி
கூடையில் சரிக்கிறாள்.
நிரம்பிய கூடை தலையில் கனக்க
நெற்றியில் வழியும் மஞ்சள்நீரை
புறங்கையால் வழித்தபடி
வெகுஇயல்பாய் கடந்து போகிறாள்,
அவளுக்காக என்னால் முடிந்தது
ஒருவேளை மலங்கழிக்காமலிருப்பது



புகையும் சாம்பல்

பனைகள் நிரம்பிய முரட்டுவெளியில்
பூஉதிர பிஞ்சுதிர
ஒலித்தடங்குகிறது குரல்.
புதுமொந்தையின் நிறச்சோறு தீர
துக்கத்தைக் கடந்தவன் போல்
விறைத்த சடலத்திற்குத் தீயிடுகிறான்.
நெருப்பின் காமம் தோலாடையை உரிக்க
வெண்தசைகள் பளிச்சிடுகின்றன.
சூட்டின் வலிமை நரம்புகளைச் சுண்ட
உறுப்புகளை உயர்த்துகிறது சுட்ட உருவம்.
நீண்ட கோலினால் தட்டுகிறான்
முகத்தில் தெறிக்கின்றன நெருப்புத் துளிகள்.
சிதையின் பக்கங்களைக்
குத்திக் கிளறுகிறான்.
வண்டல் நிறத்தில் உருகுகிறது உடல்நெய்.
ஆகாயக் கழுகின் வட்டமிடல்போல்
இராமுழுவதும் சுற்றிச் சுழல்கிறான்.
மதுவின் கிறுகிறுப்பும் காற்றின் நெடியும்
அவனைக் கீழே தள்ளுகின்றன
ஆறடி நீளத்திற்குப்
புகைந்து கொண்டிருக்கிறது சாம்பல்.
Pin It