பெரும் மாற்றங்களை நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம். தகவல் தொடர்புகள் பெரிய அளவில் அதிகரித்துள்ள போதும் பல துறைகளிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களைத் தொகுத்துப் புரிந்துகொள்வதற்கான சாத்தியங்களும் முயற்சிகளும் குறைவாகவே உள்ளன. தமிழர்கள் இன்று உலகெங்கிலும் பரந்து வாழும் நிலை உள்ளது. இதன் துன்பியல் சார்ந்த அரசியல் பின்னணி ஒருபுறம் இருந்தபோதும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆங்காங்கு உருவாகிவரும் மாற்றங்கள், அரசு கொள்கைகள், மக்கள் எதிர்வினைகள் ஆகியன குறித்து ஒரு பரஸ்பர பகிர்வு சாத்தியமா என்கிற கேள்வியின் விளைபொருளே ‘இன்மை’.

பெரும் பிரகடனங்கள் எதுவுமின்றி இதழைத் தொடங்கியுள்ளோம். அரசியல், பொருளாதார, கலாச்சாரப் பிரச்சினைகள் மீதான கட்டுரைகள், கதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன. ஒரு அகன்ற மார்க்சிய சாய்வு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, மனித உரிமைகள், மக்களின் உரிமைப் போராட்டங்கள் மற்றும் விளிம்பு நிலை மனிதர்கள் குறித்த கரிசனம் ஆகியவற்றைத் தாண்டிய இறுக்கமான அரசியல் கோட்பாடு எதுவும் எங்களுக்கு இல்லை. இந்த வகையில் ஈடுபாடுடைய யாரும் ‘இன்மை’யைத் தம் இதழாகப் பாவித்து எழுதலாம்.

Pin It