நிசப்தத்தில் உறையும் ஒரு கோயிலுக்கு முன் அமர்ந்து
மன்றாடுதலுக்காக யாரும் உள்ளே வராதபடி
குழந்தைமையின் முகத்துடன் காவல் காக்கும்
ஓர் ஆந்தையை நான் பார்த்தேன்
இளம் இரவில் இந்த உலகைக் காத்தபடி வாழும் அது
அதே இடத்தில் இக்காலைவேளையில்
செத்துக்கிடப்பது துர்சகுனம்தான்
இன்று மட்டும் ஏன்
சாலைகள் சயான மனோநிலையில் இல்லை
ஏன் தென்னங்கீற்று இன்று பழுப்பேறிக்கிடக்கிறது
வயலில் நாரைகள் ஏன் இரை உண்ண வரவில்லை
ஏன் இப்போது மட்டும்
நான் அமரும் வேம்பு
துக்கத்தில் அசைவதாகத் தோன்றுகிறது
நான் பார்க்கும் முன்பகல்
ஏன் வெறுமையில் அலைகிறது
நான் அமர்ந்திருக்கும் மரத்தின் நிழல்
என் இதயத்தைப்போல் ஏன் சுருங்கிச் சுருங்கி விரிகிறது
நான் கண்ணைமூடி மௌனமாக அமர்ந்திருக்கிறேன்
மென்மையான சப்தங்கள் சில
தூறியபடி என் முன்னால் விழ
திறக்கிறேன் கண்களை
வேம்பின் பழுத்த இலைகள் உதிர்கின்றன
என் துயரத்தின்மீது செத்துக்கிடக்கும்
ஆந்தையின் மஞ்சள் நட்சத்திரமுகத்தை நினைத்து
ஓர் பழுத்த இலையை எடுத்து சுவைக்கிறேன்
அதில் அவ்வளவு கசப்பு இல்லை
எல்லா துக்கங்களையும் இதுபோல் தூக்கி எறியவே முயல்கிறேன்
துரதிர்ஷ்டமான அது
நம் நிழலுடன் சேர்ந்தேவிடுகிறது.
Pin It