“கூகையின் கண்கள் இரவிலும் மின்னும் காந்தம் தானே இலை உதிர்த்து மரம் தளிர்க்கும் காலச் சுழற்சியின் காலண்டரா, இந்தக் கூகைச்சாமியின் கண்கள்?''

ஏப்ரல் முதல் வாரம் வெள்ளிக்கிழமை காலையில் சோ. தர்மனின் "கூகை' (காலச்சுவடு பதிப்பகம், 2005) நாவலைப் படிக்கத் தொடங்கினேன். அலுவலக ஆய்வுக்கூட்டம் இருந்ததால், ஆரணியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துப் பயணத்தின் போதும் வாசிப்பைத் தொடர்ந்தேன். இடையில் போளூரில் கிடைத்த சிறிது நேரத்திலும் ஆரணி திரும்பும் பயணத்திலும் வாசித்து முடித்து விட்டேன். 320 பக்கங்கள் கொண்ட இந்நாவலை இவ்வளவு ஈர்ப்புடன் வாசிக்கச் செய்தது எது?

ஆந்தை நமது தொன்மங்களிலும் நாட்டார் கதைகளிலும் எப்படிப் பிரதிநிதித்துவப்படுகின்றது என்பது இன்றளவும் எனக்கு வசீகரம் குறையாத விஷயம். நவராத்தி கொண்டாட்டங்களுக்கு முக்கிய இடம் வகிக்கும் மேற்கு வங்காளத்தில் ஒருநாள் பண்டிகையின் போது சரஸ்வதி, ஆந்தை வாகனத்தில் வருவதுண்டு. அறிவின் அடையாளமான ஆந்தையை, கல்விக்கடவுள் இங்கே வாகனமாகக் கொண்டுள்ளது. இது புராண தொன்மச்சித்தரிப்பு.

திசைமாறி வழி தவறித் தவிப்போருக்கு திசைகாட்டி உதவும் ஜீவனாக நாட்டார் கதைகளில் ஆந்தை காட்டப்படும். ஆனால் நடைமுறை வாழ்வில் ஆந்தை அலறுதல் அபசகுனம், ஆந்தை, சாவுக்குருவி என்றுள்ளது. ஏன் இந்த முரண்பாடு? ஒன்றின் இயல்பை யதார்த்தத்தை உணரத் தவறி, வேறொன்றாக அடையாளங்காணத் தொடங்குதல் என்பதால். காலப்போக்கில் மக்களிடையே இத்தகைய மாறுதல் உண்டாகியுள்ளது என்றுதான் புந்து கொள்ள வேண்டியுள்ளது. ஒரு காலத்தில் ஊர்களுக்கே ஆந்தைகுடி, கூகையூர் என்று மக்கள் பெயர் வைத்துள்ளனர்.

ஆந்தைகுடி திருவாரூக்கு அருகிலும், கூகையூர் கள்ளக்குறிச்சி வட்டத்திலும் உள்ளன. கூகை தெய்வமாகவும் வழிபடப்பட்டிருக்க வேண்டும். கூகையினைத் தெய்வமாகக் கருதி வழிபடும் சீனிக்கிழவன், உப்பத்திரார் தீங்கானதாகக் கருதியதால், தன்னுடன் சித்திரம்பட்டிக்கு எடுத்து வந்து கோயில் கட்டி வாழும் போது, அங்கு காளி கோயில் கட்டுவதற்கு மக்கள் விரும்புகையில், வேற்றூருக்கு எடுத்துச் செல்லும் நிர்ப்பந்தத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது ‘கூகை’.

“கூகையை இரவில் யாராலும் பிடிக்க முடியாது. சூரியனைக் கண்ணாக்கிக் கொண்டு இரவில் மட்டுமே தலைகாட்டும் பறவையிது. சூரியனே கண்ணாக இருப்பதால் சாமானியமாக யாரும் கிட்டத்தில் நெருங்கிவிட முடியாது. பச்சைப்பிள்ளைக் கூட பகலில் கூகையைப் பிடித்து விடலாம். ஏனெனில் இந்த அண்டத்திற்கே ஒளிவழங்கும் சூரியக்கண்ணை பகலில் கடனாகக் கொடுத்துவிடும். இரவில் இரைதேட வாங்கிக் கொள்ளும்'' (பக்.134/35)

பகற்பொழுதில் பார்வை இல்லாததால் பலவீனமாகவும், இரவுப்பொழுதில் தீட்சண்யம் கொண்டிருப்பதால் பலமிக்கதாகவும் உள்ளது கூகை. வரலாற்றின் நேற்றைய பக்கங்கள் வரையும் அவலத்தில் உழன்ற தலித்துகள் இன்று விழிப்புணர்வு பெற்றுள்ளதையும் எழுச்சி கொண்டுள்ளதையும் ஒருவகையில் இத்துடன் அடையாளப்படுத்தலாம். நாவலின் தீவரம் மிக்க பகுதிகளை இரவில் நிகழ்வதாக முன் வைத்திருப்தையும் இங்கே சுட்டிக்காட்டலாம். இது பற்றி முன்னுரையில் ஆசியர் குறிப்பிடுவது “ஒவ்வொரு தடவை கூகையைப் பார்க்கும்போதும், நானும் ஒரு கூகை என்பதையும் என் கண்ணுக்குப் புலப்படாத ஆனால் எல்லோர் கண்களுக்குப் புலப்படும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அழிக்க முடியாத ஒரு அடையாளத்தை நான் சுமந்து திகிறேன் என்பதையும் உணர்கிறேன். இரவுப் பறவையான கூகைகளின் வாழ்வின் இரவுப் பொழுதுகளே முக்கிய நிகழ்வுகள், சந்தோஷங்கள், சோகங்கள் நிகழும் நேரங்களாகும். கூகை நாவலில் இரவு என்பதை மையப்படுத்தியே முக்கிய நிகழ்வுகள் சாத்தியமாகும்'' (பக்.10)

கூலி உழைப்பாளிகளாக, மேல்சாதியினருக்குச் சேவகம் ஊழியம் செய்பவர்களாக, வாரத்தில் ஒரு நாள் ஜமீன் நிலத்தில் கூலி இல்லாது உழைப்பவர்களாக, பாலியல் ரீதியில், பொருளாதார ரீதியில், சமூகரீதியில் சுரண்டப்படுபவர்களாக, ஒரு கட்டத்தில் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் குடிபெரியர்ந்து உதித் தொழிலாளிகளாக திரிய நேர்பவர்களாக, இப்படியாக ஒவ்வொரு நிலையிலும் வஞ்சிக்கப்படுபவர்களாக இருந்து வரும் தலித்மக்கள் வாழ்க்கை கோவில்பட்டி சார்ந்தும் அந்நகரை ஒட்டிய கிராமங்கள் சார்ந்தும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது வெறும் ஆவணப் பதிவாக நின்று போகவில்லை. திரு அ. ராமசாமி தன் விமர்சனத்தில் குறிப்பிடுவதுபோல வகை மாதியான சித்திப்பு இங்கு நிகழவில்லை. எந்தச் சமூகமானாலும், எந்தப் பண்பு நலன் ஆனாலும் அதன் சகல அம்சங்களுடனும் நிறைகுறைகளுடனும் சாதக பாதக அம்சங்களுடனும் விவக்கப்பட்டுள்ளது.

பெண்மைக்குரிய முழு அம்சமும் இல்லாது பிறக்கும் ஆண்டாளம்மாள், பிறந்தமேனியாகத்திரிவதும் அதன் காரணமாக அவளது தந்தை கெங்கையா நாயக்கர் கூனிக்குறுக நேர்வதும், அவள் அடக்கம் செய்யப்பட்ட நந்தவனத்தைக் காணும் சீனிக்கிழவன், கெங்கையா நாயக்கர் வம்சம் வேறுந்து தூர்ந்து போய்விட்டதா என்று வினவுகையில், கெங்கையாவின் தம்பி அக்கையா நாயக்கர் குறிப்பிடுவது, ஏதோ சித்தர்கள் ஞானம் போன்றதாக அமைந்துள்ளது.

“இத்தனை மரஞ்செடிகளும் கொடிகளும் மருந்து மூலிகைகளும் யார்? ஆண்டாளம்மாள். இத்தனைப் பறவையினங்களும் யார்? ஆண்டாளம்மாள் அவை எழுப்பும் விதவிதமான சத்தங்கள் வெவ்வேறல்ல ஆண்டாளம்மாளின் பேச்சு. ஆண்டாளம்மாளின் சிரிப்பு. ஆண்டாம்மாளின் அழுகை, ஆண்டாளம்மாளின் ஓலம்... வாடிக் கருகிய நாலைந்து மாலைகள் தொங்கும் கோயிலிலா ஆண்டாளம்மாள் குடியிருப்பாள்? உலோகங்கள் உருக்கி ஓசையிடும் மணியோசை யாருக்கு வேணும்? விலங்குத்தோல் ஒலி வித்தைக்காரனுக்குச் சொந்தம். கிளிகளின், குயில்களின், காகங்களின், மயில்களின், மைனாக்களின், சிட்டுக்குருவிகளின், செம்போத்தின், வாலாட்டிக் குருவியின், புறாவின், பருந்தின் கூச்சலில், சங்கீத தாளலய ஒலியில் சயனித்திருக்கிறாள் ஆண்டாளம்மாள் கனிவர்க்கமாய், மூலிகை மருந்தாய், நிழல்தரும் வனமாய், தாகம் தீர்க்கும் தண்ணீராய், பாசம் தரும் மலராய் நித்தம் பூக்கிறாள், சிரிக்கிறாள் ஆண்டாளம்மாள்.... (பக்.125/26)

ஆண்டாளம்மாள் இப்படியென்றால், இந்நாவலில் ஒரு பிரதானப் பாத்திரமாக, பிருமாண்டமான ஆகிருதியாக வரும் பேச்சி துடுக்கும் தையமும் மிக்கவள். பட்டவர்த்தனமாகப் பேசுபவள். எதற்கும் சளைக்காமல் பேராடுபவள், தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்காக கை கொடுப்பவள். எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளத் தயங்காதவள் இன்னொரு பெரிய பாத்திரமான சீனிக்கிழவன் அளவுக்கு அழுத்தமாக தீவிரத்துடன் உருவாக்கப்பட்டிருப்பவள்.

பெண்மையினையும் கூகையினையும் இணைத்து இடம் பெறும் சொல்லாமல், விளிம்பு நிலை வாழ்க்கைக்குப் பொருந்துவதாக அமையும்: “இரவில் அமைதி பெண்மை; பொறுமையின் லட்சணம் பெண்மை; காத்திருத்தலின் மகத்துவம் பெண்மை. பெண்ணின் வாழ்க்கையே முழுமையடையும் இடம் காத்திருத்தலில் கூகை பெண்மை பிணம் எரியும் வெளிச்சத்தில் பேயோடு பேயாய் நிற்கும் இரவு. மனிதன் கூகை கிடைத்தது போதுமென்று தேடியலையாமல் கிடைத்ததைத் தின்று வாழும் இனம் கூகை இனம் நட்சத்திரங்கள் ஜொலிக்கும் கும்மிருட்டில் காடுகளில் காவல்காத்து நிற்கும் மனித இனம் கூகை இனம்....'' (பக்.127)

பிரச்னைகளை, நடப்புகளை, நிகழ்வுகளைப் பதிவு செய்யவே யதார்த்தவாதம் இடம் தரும். அவற்றுக்குப் பின்னுள்ள இரகசியங்களை, சூதுகளை, வஞ்சனைகளை வெளிக்காட்ட ஆசியர் ஓர் உபாயத்தை மேற்கொள்ளுகிறார். நிகழ்வுகளைப் பதிவு செய்த உடனேயே குரல்கள் ஒலிக்கின்றன. கோபத்துடனும் வன்மத்துடனும், வேதனையுடனும் விரக்தியுடனும் சீற்றத்துடனும் சினத்துடனும். இக்குரல்கள், மனித நடப்பிலிருந்து இயற்கை உலகுக்குத்தாவிச் சென்று ஒலிக்கின்றன. இவை பாத்திரங்களின் குரல்களாகவும் இருக்கலாம்; ஆசியன் குரல்களாகவும் இருக்கலாம் நிகழ்வுகள் சம்பவங்களுக்கு உவமைகள் உருவகங்கள் ஆகாமல், இன்னொரு தளத்திலான குரல்களாக அவை இருப்பது, ஒருவகை நாடகபூர்வமான தன்மையைத் தந்து விடுகின்றது. உதாரணமாக ஓர் இடம்.

சக்கிலியக்குடியைச் சேர்ந்த கருப்பியை தன் இச்சைக்கு ஆளாக்கியதுடன் நில்லாமல், அவளது மகள் வெள்ளையம்மாளையும் சுகிக்க வேண்டும் என்னும் திட்டத்துடன் வெள்ளையம்மாளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாக முத்தையாப்பாண்டியன் கூறும் இடத்தில் இடம் பெறும் குரல்: “பொந்துக்குள்ளிருந்து, கிளி கண்களை உருட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்தது. வல்லூறு அசையவே இல்லை. பசி மறந்து மூச்சுவிடப் பயந்த குஞ்சுகள் ஆலமரம் சுழன்று அசைந்தது. அத்தனை இலைகளும் கிளிகளாகிப் போயின. கிளியும் இலையும் வெவ்வேறா? ஆரவாரம் கூச்சலுடன் எரிந்துவிழும் நட்சத்திரங்ளெனப் பறந்து வந்தன பல்லாயிரம் கிளிகள். வல்லூறு கழுத்துருட்டிப் பார்த்துத் திகைத்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் பச்சைக் கிளிகள் வனங்களின் மரங்களின் அத்தனை இலைகளும் கிளிகளாகிப் பறந்த மாயம்.... தப்பித்துப் பிழைக்க பறந்தது வல்லூறு. பழங்கொத்திய அலகுகள் சதை கிழிந்தன. வல்லூறு இனமே அருகிப்போனது. மரங்களை வெல்ல மரத்தால் மட்டுமே முடியும். வலைப் பின்னலெனத் தரையில் பதிந்திருக்கும் வேர்கள் வம்ச விருத்தியின் விதைகள், உரம் சேர்க்கும் மத்திய இலைகள், வனம் நனையப் பொழியும் மழை இவற்றை வெல்ல எந்த எமனுக்குண்டு பலம்? (பக்.61)

ஆண்மையிழந்தவரான லிங்கையா நாயக்கன் மனைவி பத்ரராஜம்மாள், அவர்களது பதிவாளான சீனியுடன் கூடுவதைப் பார்க்க நேர்ந்த நாயக்கர் தற்கொலை செய்து கொள்ளுமிடத்தில் இடம் பெறும் குரல், புனைவுலகில் சிறகடித்து வேதனையை முனங்கும் “வெள்ளைச் சேலை உடுத்தி உருமாறி கிளியிலிருந்து புறாவானாள் பத்ரராஜிம்மாள். புறாவின் கெந்தப்பு... பார்வையின் மிரட்சி .... வலை விக்கும் வேடர்களுக்குக் கிளி சிக்காது. கிளிகளுக்குண்டா வலை? புறாக்களின் பூர்விகம் பெண்மை போலும். சீனு பலமுறை கூகைச்சாமியின் கோயில் முன்னால் சொல்லியழுதான். கண் தூசியின் உறுத்தலாய் இருவருக்குள்ளும் நமைந்த அந்தநாள் மாதங்களாய், வருஷங்களாய், யுகங்களாய்த் தொடரும் ஆழம் கொண்டது (பக்,41)

Barn owl என்று பறவையியலாளரால் அழைக்கப்படும் கூகை அபூர்வமான தோற்றமுடையது. பழுப்பும் மஞ்சளுமான நிறத்தில் இருதயத்தில் கோட்டோவியத்தைப் பெற்றிருப்பது. இருளை விலக்கி விரட்டித்தள்ளும் கூய ஒளி கொண்டது. இருளை ஆளத்தெriந்த அதற்கு பகலை ஆள்வது சிரமமானதில்லை. பகலில் அதனைப் பயந்த சுபாவமுள்ளதாக ஆக்கிவிட்டார்கள்.

மண்ணுக்குriயவர்களை, மண்ணில் விளை விளைப்பவர்களை, மண்ணால் படைப்பவர்களை மண்ணிலிருந்து விலக்கி அந்நியமாக்கி சேவகம் புபவர்களாக ஆக்கியது வரலாறு. அது ஆதிக்க வரலாறு; அதிகார வரலாறு.

வரலாற்றுத்திriபை அம்பலப்படுத்தி சயான வாசிப்பைத் தரும்பொருட்டு யதார்த்தப் பதிவாகவும் மாயப் புனைவாகவும் தர்மன் தந்திருப்பதுதான் கூகை, இனி கூகை சாவுக்குருவியல்ல. அது சூரியனைக்கண்ணாகக் கொண்டுள்ளது சூரியக் குருவிதானே!

வரலாற்று அடுக்குகளிலுள்ள சூதுகளையும் விதியின் வரைவுகளையும் களைந்து நீக்கி ஆற்றல்மிக்க மொழியில் அனாயசமாகக் கதை சொல்லியிருக்கும் தர்மன் தனக்கேயான அழகியலையும் படைத்துக் கொண்டிருக்கிறார்.

எனவேதான் "கூகை' சீறுகிறது, ஒளியைப் பாய்ச்சுகிறது, விழிப்புணர்வைத் தருகிறது. Rock horned owl என்று கூகையைக் குறிப்பிடும் தமிழ்ப்பேரகராதி அது ஒலிப்பதை, ‘கூகை குழறுதல்' என்று பதிவு செய்துள்ளது. ஆனால் தர்மன் பதிவு செய்துள்ள கூகை சினங்கொண்டு அலறுகிறது. இது வெறும் பதைபதைப்பிலான ஓலமில்லை; ஆத்திரத்தின் பீறிடல், அவசத்தின் பிளிறல், எழுச்சியின் முழக்கம். மேலும், கூகை மட்டுமே நீலநிறத்தைக் காணக்கூடியது. நீலம், தொலைவின் ஆழத்தின் நிறமாகும். சோகத்தின் துயன் நிறமும் அதுதானே.

Pin It