ஒரு சமூகம் - பண்பாடு போன்ற கருத்தியல்களால் பெண்களைக் கொம்பாக வைத்துப் பின்னிப் படர்கிறது. அரசு, வரலாறு, பொருளியல் அதிகார பீடங்களை ஆண்களை மையமாக வைத்து கட்டி எழுப்புகிறது. சமூகப் பண்பாட்டின் ஆக்கத்திற்கோ அழிவுக்கோ பொறுப்பாளியாக பெண்களின் நன்நடத்தை அரசின் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பொறுப்பாளியாக ஆணின் ஆளும் திறமை காரணமாகின்றன என தொடர்ந்து நமக்குக் கற்பிக்கப்படுகிறது. இந்த விதிமுறைகளை பெண் மாற்ற முனையும் போது சமூகத்தில் ஒரு பதற்றம் உருவாகிறது. இந்தப் பதற்றத்தை உருவாக்கும் சக்திகளை ஆணாதிக்க சமூகம் தன் திடமான ஒடுக்குமுறைக் கருவிகளை ஏவி தண்டிக்கிறது.

தமிழிலக்கிய உலகத்தில் சமீப காலமாக தொடர்ந்து எழுப்பப்படும் இன்றைய பெண் எழுத்துக் குறித்த சர்ச்சைகள் சென்ற ஆண்டு தமிழ் நிலத்தில் தமிழச்சியின் கற்பைக் காப்பாற்ற எழுந்த வன்முறைப் போராட்டங்கள் - தந்தைவழிச் சமூகக் கோட்டையின் அஸ்திவாரத்தின் அடிக்கல் உருவப்படுவதின் அதிர்வுகளாகத்தான் எனக்குத் தோன்றியது.

இந்தியச் சமூகம் ஒரு பிளவுபட்ட முரண்பட்ட ஏற்றத்தாழ்வான ஒடுக்குமுறை சமூக அமைப்பு என்பதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் நமது சமூகநீதி காக்கப் போராடும் அரசியல் தலைவர்களுக்குக் கிடையாது. சுதந்திரக் கருத்தியலையும் மனித உரிமை கல்வியையும் மாற்று அரசியலையும் மேற்குலகிலிருந்து கற்கிறார்கள். மேற்குலகிலிருந்து உதாரணம் காட்டுகிறார்கள்.

சுதந்திரம் - சமத்துவம் - சகோரத்துவம்

மேற்குலகின் மாபெரும் விடுதலைக் கோட்பாட்டை சுவீகரித்துக்கொண்ட நம் தமிழ் இலக்கியவாதிகளுக்கும் மாற்று அரசியல்வாதிகளுக்கும் பெண்ணியம், பெண் விடுதலை தத்துவங்கள் ஆகியவை மேற்கின் இறக்குமதி சரக்காகிவிடுகின்றன. இவை மட்டும் நம் தமிழ்ச் சமூகப் பண்பாட்டைச் சீரழிக்கும் சக்தியாகத் தொடர்ந்து அடையாளப்படுத்தப்படுகின்றன. மேற்கின் பொதுவுடமை, இலக்கியம், தத்துவம் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளை நன்மை தீமை பார்க்காமல் எல்லாவற்றையும் இறக்குமதி செய்து ஏற்றுக்கொண்டவர்கள் பெண் விடுதலைக் கோட்பாட்டை (பல்வேறு வகையான பெண்ணியம் இன்று பேசப்பட்டு வருவதைக் கணக்கில் கொள்ளாமல்) மட்டும் மேற்கிலிருந்து பெறுவதை எதிர்க்கிறார்கள்.

மத அடிப்படைவாதிகள், வெகுசன அரசியல்வாதிகள், சாதி சனாதனவாதிகள், ஜனநாயகவாதிகள், மனிதவுரிமை போராளிகள், தனி தேசியவாதிகள், கம்யூனிஸ்டுகள், திராவிடக்கட்சியினர், சாதிக்கட்சியினர் போன்றோர் முற்போக்கோ பிற்போக்கோ ஏதாவது ஒரு அரசியல் கொள்கை உடையவர்கள், வெவ்வேறு அரசியல் நிலைப்பாடு உள்ளவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களைப் பின்பற்றி அரசியல் நடத்துபவர்கள் இவர்கள் அனைவரும் ஒற்றை அரசியல் கோட்பாட்டை முன்வைத்து ஒரே அணியில் திரளமுடியாதவர்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் மாற்று கருத்துடையவர்கள். ஆனால், பெண் விடுதலை, பெண்ணியம் என்றவுடன் இவர்கள் அனைவரும் ஒரே அணியில் திரள்வது எப்படிச் சாத்தியமாகிறது? ஒரு மத அடிப்படைவாத இயக்கத்துக்கும் ஒரு ஜனநாயக இயக்கத்துக்கும் அரசியல் கொள்கை வேறு வேறாக இருக்கும் ஆனால் பெண்ணுரிமைப் பிரச்சனை என்று வரும்போது இந்துமத அடிப்படைவாதக் கொள்கையான மனு தர்மத்தை ஒரு ஜனநாயக இயக்கம் தன் இயக்கத்தின் கொள்கையாக எப்படி ஏற்றுக்கொள்கிறது. ஆக, இங்கு நடப்பது ஆண்களுக்கான சமூக ஆட்சியதிகாரத்துகான போட்டி மட்டுமே. பெரியாருக்குப் பிறகு கலாச்சார மாற்றத்திற்கான போராட்டத்தை வசதியாக அனைவரும் மறந்துவிட்டனர். ஆள்வது ஆணாக இருக்கட்டும் வீழ்வது பெண்ணாக இருக்கட்டும் கட்சி வேறுபாடின்றி இதுதான் எல்லாத்தரப்பு ஆணாதிக்கவாதிகளின் கொள்கை.

இந்த அரசியல்வாதிகள்தான் - பாலித்தீன், மலட்டு விதைகள், விஷப்பூச்சிக்கொள்ளிகள், ரசாயன உரங்கள், ராசாயன ஆலைகள், அணு உலைகள், ராட்சஸ அணைக்கட்டுகள் என எல்லா விதமான நாசகார அறிவியல் கண்டுபிடிப்புகளையும் உள்ளே அனுமதித்து நிலத்தையும் நீரையும் காற்றையும் நஞ்சாக்கி மக்களை வாழவிடாமல் அவர்களின் சொந்த நிலத்தைவிட்டு வெளியேற்றி அகதியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள்தான் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளை அனுமதிக்கிறவர்கள். அந்நிலப் பகுதியைவிட்டு லட்சக்கணக்காண குடும்பங்களை விரட்டுகிறவர்கள். பாரம்பரியமான வாழ்வாதாரங்களை இழந்த மக்களை நகரங்களின் வீதியோரங்களில் பஞ்சப் பாராரையாகத் திரியும் அவலத்துக்கு ஆளாக்கியவர்கள். குடும்பத்தின் வயிற்றுப் பாட்டுக்காக பாலியல் தொழிலாளியாக மாற்றப்பட்ட பெண்கள், விற்கப்பட்ட பெண்கள் என சமூகமே விஷத்தழைத் தின்ற மாடுமாதிரி நீலம்பாரித்து வீங்கிபோய் உள்ளது. நிலத்தையும் நீரையும் தெய்வமாக வணங்குகிறவர்கள் அதனால்தான் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணையும் தெய்வமாக வணங்குபவர்கள் பெண்களையும் எல்லா சந்தையிலும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். மண்ணையும் எளிய மக்களையும் வாழ வைக்கும் பொற்காலக் கனவை எத்தனை காலத்துக்குத்தான் வாரி இறைத்துக் கொண்டிருப்பார்கள் கட்சித் தலைவர்கள். எத்தனை நூற்றாண்டுகள் இதை நாம் நம்பிக்கொண்டிருப்பது. பெண்ணியத்தை ஏற்காத மாற்று அரசியலோ மனித விடுதலை அரசியலோ ஒருபோதும் உருவாக முடியாது.

சுதந்திரமான பயமற்ற பேச்சும் விவாதமுமே அதற்கான தொடக்கம்.

Pin It