இந்தியாவில் தமிழகத்தில்தான் சிமெண்ட் மற்றும் கட்டடக் கட்டுமானப் பொருள்களின் விலை அதிகமாக உள்ளது என்று நாளேடுகள் கூறுகின்றன. என்ன சொல்கிறீர்கள்?

தி.மு.க. ஆட்சியின் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வீதிக்கு வந்து போராடிய ஒரே போராட்டம் சிமிண்ட் விலை குறைக்க வேண்டும் என்பதுதான். இன்று அதிமுக ஆட்சியில் ஒரு மூட்டை சிமெண்ட் 190 ரூபாய்க்கு அம்மா சிமெண்ட் விற்க முடியும்போது, ஏன் தனியார் நிறுவனங்கள் ரூபாய் 400 அளவிற்கு உயர்த்தி விற்கின்றன? மேலும் அம்மா சிமெண்ட் மொத்தத் தேவையில் 2 விழுக்காட்டிற்கும் குறைவாகவே விற்பனையாகி உள்ளது.

திமுக ஆட்சியின் போது ரூபாய் 350க்கு சிமெண்ட் விலை உயர்ந்த போது, அதன் விலையைக் குறைக்கவில்லை என்றால், சிமெண்ட் ஆலையை அரசுடைமை ஆக்குவோம் என்று கலைஞர் எச்சரித்தார். உடனடியாக சிமெண்ட் விலை குறைந்தது. இன்று செங்கல், இரும்பு, பெயிண்ட், மரம், மணல் போன்ற கட்டுமானப் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் கட்டடத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழப்பதோடு, சாதாரண நடுத்தர மக்கள் வீடு கட்டவோ, விலைக்கு வாங்கவோ முடியாத நிலை இருக்கிறது. இருந்தும் அதிமுக அரசு கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்பது கண்டனத்துக்கு உரியதாகும்.

- பொன். குமார், தலைவர், விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி.

***

modi 350 copy copyஇலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுட்டுத் தள்ளுவோம் என்று கூறியிருக்கிறார். இந் நிலையில் இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இப்படி வெளிப்படையாகப் பேசி இருப்பது தமிழர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரணில் பேச்சில் தமிழ் மீனவர்கள் என்று சொன்னாலும் அது இந்திய மீனவர்களையே குறிக்கும்.

இங்கே தமிழரா, இந்தியரா என்று பார்க்க முடியாது. இந்தப் பேச்சு இந்தியாவுக்கு இலங்கை அரசு விடுத்த எச்சரிக்கையாகவே பார்க்க முடிகிறது.

இதற்கு, இந்தியா இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. அதே சமயம் அண்மையில் இலங்கைக்குச் சென்றுவந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சிவராஜ் ரணில் தன் பேச்சுக்குத் தன்னிடம் வருத்தம் தெரிவித்ததாக நாடாளுமன்றத்தில் சொல்கிறார். அவர் ரணிலின் ‘ஸ்போக்ஸ் உமன்’ ஆகத்தான் தெரிகிறார்.

ரணில் தன் வருத்தத்தை வெளிப்படையாக ஏன் தெரிவிக்கவில்லை. மீனவர், ஈழத்தமிழர் பிரச்சினையைப் பயன்படுத்தி இந்திய இலங்கை அரசுகள் தம் வணிக நோக்கங்களைத்தான் முன்னெடுக்கின்றன. இந்தியமும் - சிங்களமும், தமிழகத்தின் இரட்டைப் பகை.

- வன்னியரசு, செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

***

gopalan 350மராட்டியத்தைப் பின்பற்றித் தமிழகத்திலும் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இராம.கோபாலன் சொல்வது குறித்து உங்கள் கருத்து என்ன?

மாட்டிறைச்சி உண்பது என்பது வெறும் குற்றமாக மட்டும் ஆக்காமல் அதை தெய்வக் குற்றமாக ஆக்கப்பட்டு, அதை மீறுபவர்கள் மனித உறவுகளுக்கே அருகதை அற்றவர்களாக வரலாற்று அடிப்படையில் கருதப்படுகிறார்கள்.

அதனால்தான் அதை உண்ணும் ஒடுக்கப்பட்ட மக்களைச் சேரியில் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

கடும் உழைப் பாளர்களான தலித் மக்களுக்கு இது மட்டுமே குறைந்த விலையில் அரிய சத்தைத் தரும் எளிய உணவு. இந்தியாவில் 30 கோடி சேரி மக்களின் வயிற்றில் அடிக்கும் வேலை இது.

சேரி மக்களின் உணவு, பண்பாட்டு நடைமுறைகளை ஏள னப்படுத்துவது, தடைசெய்யக் கூறுவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். அதைச் செய்யும் இராம. கோபாலனும், மகாராஷ்டிர அரசும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.

- புனிதபாண்டியன், ஆசிரியர், தலித் முரசு.

***

seeman 350தாங்களே உண்மையான பகுத்தறிவாளர்கள் என்று கூறும் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், வீரத் தமிழர் முன்னணி என்று ஒன்றைத் தொடங்கி முருகனே எங்கள் முப்பாட்டன் என்று கூறுகிறார். பச்சை வேட்டி, பச்சைத் துண்டோடு பழனிக்கும் பயணம் செல்கிறார். இதனை எப்படிப் புரிந்து கொள்வது?

தந்தை பெரியாரைப் பாட்டன் என்று சொன்னார். திருவள்ளுவரை முப்பாட்டன் என்று சொன்னார். அதனை எல்லாம் ஏற்றுக் கொண்ட தமிழுலகம், முருகன் என்ற கற்பனையை, முப்பாட்டன் என்று சொல்வதைச் சகித்துக் கொள்ளாது. தமிழ்க் கடவுள் என்ற ஒன்றோ, தமிழ் வீரசேனை என்ற இன்றைய நிலையோ எண்ணுவதற்குத் தகுந்தது அல்ல.

எள்ளி நகையாடத் தக்கது. வயது கூடக் கூட, அனுபவங்கள் அதிகரிக்க அதிகரிக்க அறிவு கூடுதலாகக் கூர்மை பெறும் என்பது உலக நீதி, உண்மையும்கூட.

ஆனால் நண்பர் சைமனைப் பொறுத்தமட்டில் கூர்மை தேய்ந்து கொண்டே வருகிறது. உட்கட்சியில் ஓரம் கட்டப்பட்ட ஒருவர், இரட்டை இலை பக்தி கழன்று போய், தானே முதல்வர் என்கிற ஆசை - தனித்துப் போட்டியிடும் அறிவிப்பு ஆகியவை எல்லாம், இந்தப் பச்சை ஆடை உடுத்திக் காவடி எடுக்க வைக்கிறது.

- அறிவுக்கரசு,செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்.

***

தமிழகத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தொய்வுடன் தாமதமாக நடைபெற்று வருகின்றன. கட்டிமுடிக்கப்பட்ட அரசு அலுவலகக் கட்டடங்கள், அம்மா உணவகங்கள் திறக்கப்படாமலே இன்னமும் இருக்கின்றன. என்ன காரணம்?

தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கின்றன. தலைவர் கலைஞர் அவர்கள் தனது தொண்ணூறாவது வயதிலும், தலைமைச் செயலகக் கட்டிடம், அண்ணா நூற்றாண்டுவிழா நூலகம், செம்மொழி மாநாடு என்று இலக்குகளை நிர்ணயித்து அவற்றை நோக்கி ஓய்வின்றி உழைத்தார்.

திரும்பவும் கலைஞர் ஆட்சியே ஏற்பட்டிருந்தால் இந்நேரம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கும். அதே போன்று போக்குவரத்துத் துறையில் பலநூறு பேருந்துகள் வாங்கப்பட்டு அவையும் மக்கள் பயன்பாட்டுக்கு விடாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. “குற்றவாளி ஜெயலலிதா” மீண்டும் முதலமைச்சரான பின்தான் இவையெல்லாம் மக்கள் பயன்படுத்த முடியும் என்கின்றனர் அதிமுகவினர்.

தமிழ்நாட்டில் அரசு என்னும் ஒன்று இயங்குவதை நிறுத்திப் பல மாதங்களாகிவிட்டன. இப்போது மட்டுமன்று எப்போதுமே அதிமுக ஆட்சியில் மக்கள் நலப் பணிகள் நடப்பது அரிது. இப்போது முழுக்க முழுக்க வசூல் வேட்டைதான் நடந்து கொண்டு இருக்கிறது. எந்த நேரத்தில் பதவி பறிபோகுமோ என்ற அச்சத்தில் முடிந்தவரை வசூலில் கவனம் செலுத்துகின்றனர்.

“நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே” என்பதே அவர்களின் நிலை. அதோடு ‘அம்மா’வுக்காக யாகம் செய்வது, தீச்சட்டி ஏந்துவது, கோயிலைச் சுற்றவது போன்ற ‘அம்மா நலப்’ பணிகளே அவர்களுக்கு முக்கியம். பதவியைக் காப்பாற்றப்போவது இந்த கைங்கர்யங்கள் தானே தவிர, மக்கள் நலப்பணிகள் இல்லை என்பது அவர்கள் எண்ணம்.

‘மக்கள்’ முதல்வருக்கும் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க நேரம் இல்லை. மீண்டும் பதவிக்க வர, திட்டம் தீட்டத்தான் நேரம் இருக்கிறது.

- பொள்ளாச்சி உமாபதி, மாநிலச் செயலாளர், கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை, தி.மு.கழகம்.

Pin It