இந்தியா ஒரு வேளாண்நாடு. வடக்கே மறைந்த முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் (ஜெய்ஜவான்) “ஜெய் கிஷான்” முழக்கம் வேளாண்மைக்குக் கொடுத்த முதன்மைச் சிறப்பு.

தெற்கே ஆணை கட்டிப் போர் அடித்தும், சோறுடைத்த சோழ நாட்டையும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. உழவர்களை ஏனையோர் தொழுது செல்வர் என்கிறார் வள்ளுவர்.

இன்று நிலைமை வேறு. வேளாண் நிலங்கள் வீடுகளாக மாறுகின்றன. வேளாண் தொழிலாளர்கள் நீர் இன்றி வாடுகிறார்கள். இருந்தாலும் வேளாண்மை அற்றுப்போய் விடவில்லை. ஆனால் அழிக்க முயன்று கொண்டிருக்கிறது பா.ஜ.க. அரசு, நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தின் மூலம்.

2013ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் நடைமுறைக்கு வரவில்லை.

இன்றைய பா.ஜ.க. மோடியின் அரசு, கார்பரேட் நிறுவனங்கள் என்று சொல்லப்படும் பெருநிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் அரசாக இருக்கிறது-. சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், வேளாண் தொழிலை & தொழிலாளர்களை முற்றாகப் பறக்கணித்து அந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறது.

முந்தைய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் இருந்த சில உரிமைகளைக்கூட மோடியின் அவசரச் சட்டம் மறுத்திருக்கிறது.

1.நிலம் கையகப்படுத்தும் போது 70 விழுக்காடு வேளாண் மக்களிடம் அனுமதி பெற வேண்டும்.

2. நீதிமன்றம் செல்ல அம்மக்களுக்கு உரிமை உண்டு

3. நினைத்தபடி அம்மக்களை அப்புறப்படுத்த முடியாது.

இந்த மூன்று உரிமைகளும் முற்றாக நிராகரிக்கப்பட்ட மோடியின் அவசரச்சட்டம்தான் இன்று நாடாளுமன்ற ஒப்புதலுக்குக் கையேந்தி நின்று கொண்டு இருக்கிறது.

இச்சட்ட மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும், கூட்டணி கட்சிகளான சிவசேனா, லோக் ஜனசக்தி, அகாலிதளம் ஆகியவையும் எதிர்க்கின்றன. இவ்வளவிற்கும் பிறகும் இச்சட்டத்தை பின்வாங்க மாட்டோம், வேண்டுமானால் விவாதிக்கலாம் என்கிறார்கள் மோடியும், வெங்கையா நாயுடுவும்.

“ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் நிலங்களிலிருந்தும், வீடுகளிலிருந்தும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் அபாயத்தை நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் உருவாக்கியுள்ளது” என்று பன்னாட்டு மனித உரிமை அமைப்பு கூறியிருக்கிறது.

எனில், கடும் போக்குடைய இச்சட்டத்தைக் கொண்டுவந்தே தீருவோம் என்பவர்கள் மனித உரிமைகளுக்கே எதிரானவர்கள் என்பதை விட, உண்மை வேறென்னவாக இருக்க முடியும்?

Pin It