வன்முறை - பாலியல் வக்கிரங்களுக்கும், சாமியார்கள் & ஆசிரமங்களுக்கும் அப்படி ஓர் அந்நியோன்யம், மதத்தின் பெயரால்.

ஆனால், ஒழுக்கம், நேர்மை என்று வாய்கிழியப் பேசுபவர்களே அவர்கள்தான்.

கர்நாடகம் பிடதி ஆசிரமத்தில் ஆபாசம், பாலியல் வக்கிரம்.

காஞ்சி மடாலயத்தில் இரண்டையும் பார்த்தனர் மக்கள், வெளிச்சம் போட்டன ஊடகங்கள். இப்பொழுது புதுவையில் ஓர் அலங்கோலம், கொடுமை.

இந்திய விடுதலைப்போரில் வலதுசாரித் தீவிரவாதியாகச் செயல்பட்ட அரவிந்த கோஷ் பெயரில் 1914ஆம் ஆண்டு புதுவையில் அமைந்தது அரவிந்தர் ஆசிரமம்.

ஒழுக்கம், கல்வி, உடற்பயிற்சி, யோகா, தியானம் சொல்லிக் கொடுப்பதாகச் சொல்லிப், பெருமளவில் பணம் பெற்றுக்கொள்ளும் பணக்கார ஆசிரமம் இது.

இந்த ஆசிரமத்தில் சேர்வதும், அலிபாபாவின் திருடர்கள் குகைக்குள் நுழைவதும் ஒன்று. ஆசிரமத்தில் சேர்ந்து விட்டால், அங்கு நடக்கும் எதையும் வெளியில் சொல்லக் கூடாது. அப்படி ஒரு விதி அங்கு இருக்கிறது.

அதையும் தாண்டி, புதுவை அரவிந்தர் ஆசிரமத்தின் பாலியல் வல்லுறவுக் கொடுமை இன்று வீதிக்-கு வந்துவிட்டது-, மூன்று பெண்களின் தற்கொலைகள் மூலம். தானாக மாய்த்துக் கொண்டால் தற்கொலை. தற்கொலைக்குத் தள்ளப்பட்டால் அதற்குப் பெயர் கொலை அல்லவா?

அன்று பீகார், இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பொகாரோ பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் & சாந்தி தேவி தம்பதியர், தம் ஐந்து மகள்களை அரவிந்தர் ஆசிரமத்தில் சேர்த்தார்கள்.

ASHRAM 600

1970இல் சேர்க்கப்பட்ட இந்தப் பெண் குழந்தைகள் 34 ஆண்டுகளுக்குப் பின்னர், 2004ஆம் ஆண்டு, தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைத் தாங்க முடியாமல் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள். உடனே ஆசிரம நிர்வாகம் நாகராஜ் என்பவரைக் கொண்டு விசாரணை என்ற பெயரால், அந்தச் சகோதரிகளை ஆசிரமத்தை விட்டு வெளியேற்ற முயன்றது.

இது வழக்காக மாறி, புதுவை நீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் என்று 12 ஆண்டுகளாக விசாரிப்பும் தீர்ப்புமாகத் தொடர்ந்தது.

தேசிய மகளிர் ஆணையமும், மனித உரிமை ஆணையமும் கூட விசாரித்தன.

ஆனால் தீர்ப்புகள் மட்டும் ஆசிரமத்திற்குச் சாதகமாக, சகோதரிகளுக்கு எதிராகவே வந்தன என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

தமக்குப் பாலியல் தொல்லைகள் என்று 12 ஆண்டுகள் போராடிய, 5 சகோதரிகள் தற்கொலை முயற்சியில் கடலில் குதித்தனர். மூவர் பிணமாயினர், ஏனையோர் காப்பாற்றப்பட்டனர்.

தற்கொலை என்ற அளவுக்கு இப்பெண்கள் சென்றதில் இருந்து, இப்பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை, அநீதி இழைக்கப்படுகிறது என்பது தெரிகிறது. மாநில ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நேரு, “ஆசிரமத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றம் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கனவே சட்டசபையில் பேசியுள்ளோம். இதில் மாநில அரசு தலையிட முடியாது. மத்திய உள்துறை அமைச்சகம்தான் நேரடியாகத் தலையிட வேண்டும்” என்று கூறுகிறார்.

ஏன் தலையிட முடியாது?

பெண்கள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள், வன்கொடுமைகள் நடைபெறுகின்றன, சட்டமன்றத்தில் பேசப்படுகிறது என்றால், மாநில அரசு மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க முடியாதா?

புதுவை முதல்வர் சொல்கிறார் கருத்துக் கூற முடியாது என்று. அரசு மட்டுமன்று, ஆசிரமமும் மவுனம் காப்பது ஐயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது - மக்களிடம்!

தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவா, ஆசிரமத்தில் என்ன நடக்கிறது என்று புதுவையில் உள்ள மக்களுக்குக்கூட எதுவும் தெரியவில்லை என்றும், ஆசிரமம் மீதான அனைத்துப் புகார்களையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இதையே வலியுறுத்துகின்றன.

காவல் துறையினர், நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற ஆசிரமத்தில் இருந்து பெண்களை வெளியேற்றினோம் என்கின்றனர்.

ஆளுநர் சொல்கிறார், சட்டம் தன் கடமையைச் செய்யும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று. உண்மையில் இங்கு தண்டிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராகப் போராடிய பெண்களாக அல்லவா இருக்கிறார்கள்--?

கங்காதேவி, யமுனாதேவி, பூமாதேவி என்று பெண்களைப் போற்றி வணங்குவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் மதமும், மதம் சார்ந்த ஆசிரமங்களும் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைக்கு, இன்றைய சான்று, புதுவை அரவிந்தர் ஆசிரமம் - உயிரிழந்த மூன்று பெண்கள் & சிதறிப்போன அவர்கள் குடும்பம்.

நீதி கிடைக்க வேண்டும்! அதைவிட, மதத்தை, அதன் கொடுமையை, அதனால் ஏற்படும் அடிமைத்தனத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Pin It