நீண்ட நெடிய போராட்டத்தையடுத்து, 35 ஆண்டுகளுக்குப் பின், சரியாகச் சொன்னால், 1979 நவம்பர் 4ஆம் தேதிக்குப் பின்னர், 2014 நவம்பர் 20ஆம் தேதி முல்லை - பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டிவிட்டது.

mullai periyar 370இது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும், நீதிக்கும் கிடைத்த வெற்றி. என்றாலும் மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொள்ளும் கதையைப் போல, கேரள அரசின் அடாவடித்தனம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வேளாண்மை வறட்சியைக் கருத்தில் கொண்டு, இம்மாவட்டங்களின் வேளாண் நீர் ஆதாரத்திற்காக மரியாதைக்குரிய பென்னிகுக் அவர்களால் 1887 முதல் 1895வரை கட்டப்பட்ட அணை, முல்லை - பெரியாறு அணை.

தென்தமிழ் மாவட்ட வேளாண்மையின் நலன் கருதி தமிழகத்தின் வேண்டுகோள், அணையில் 142 அடி நீரைத் தேக்க வேண்டும் என்பது.

ஆனால் கேரள அரசு 136அடிக்கு மேல் உயர்த்த முடியாது என்று முரண்டு பிடித்தது. அதற்காக அவர்கள் சொன்ன காரணம் சிறுபிள்ளைத்தனமானது.

இதோ முல்லை - பெரியாறு அணை பலவீனமாகிவிட்டது. இடுக்கியில் நில அதிர்வு ஏற்படப்போகிறது. அணையில் நீர் கசியத் தொடங்கிவிட்டது. அணை உடைந்தால் 35 லட்சம் மக்கள் அழிந்துவிடுவார்கள். அண்டையில் உள்ள ஊர்கள் எல்லாம் நீரில் மூழ்கிவிடும் என்றெல்லாம் பீதியைக் கிளப்பினார்கள்.

அதற்காகவே கேரள அரசும், ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து தயாரிக்கப்பட்ட, “டேம் 999” என்ற திரைப்படத்தை வார்னர் பிரதர்ஸ் மூலம் வெளியிட்டார்கள்.

அத்திரைப்படத்தில் முல்லை - பெரியாறு அணையைக் காட்டாமல், நவீனத் தொழில்நுட்பத்தில், “கிராபிக்ஸ்” செய்து, ஆலப்புழையில் அணை உடைவதைப் போலவும், அதில் மக்கள் அழிவது போலவும், நடக்காத ஒன்றை நடக்க இருப்பதைப் போலச் சித்தரித்துக் காட்டினார்கள்.

2011 நவம்பர் 23ஆம் தேதி கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முல்லை - பெரியாறு அணையை இடித்துவிட்டுப் புதிய அணை கட்டப் போவதாக முடிவெடுத்தார்கள். புதிய அணை கட்டுவதை அம்மாநில நீர்ப் பாசனத் துறை அமைச்சர் ஜோசப் செய்தியாளர்களிடம் உறுதி செய்தார்.

அதேசமயம் கேரள உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் கே.பி. தண்டபாணி 2.12.2011 அன்று கொடுத்த விளக்க அறிக்கையில், முல்லை - பெரியாறு அணையின் நீர்மட்டத்திற்கும், அணையின் பாதுகாப்புக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றும், 2006 பிப்ரவரி 27 அன்று உச்சநீதிமன்ற ஆணையின் படி, 142 அடி உயர்த்துவதால் அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்த அறிக்கையை முல்லை - பெரியாறு அணையின் தொழில் நுட்பத் தலைவர் பரமேசுவரன் நாயர், 6.12.2011 அன்று கேரள உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்தார்.

அதேசமயம் 142 அடி நீரை உயர்த்த உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகும் கூட கேரள அரசு, அணைகள் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து, தீர்ப்புக்கு எதிராகச் செயல்பட்டது.

மீண்டும் 2014 மே 7ஆம் தேதி உச்சநீதிமன்றம் 142 அடி நீரைத் தேக்க உத்தரவிட்ட பின், அதன் அடிப்படையில் அமைந்த கண்காணிப்புக் குழுவை அடுத்து இன்று 142 அடி நீர் அணையில் நிரம்பிவிட்டது.

கேரள அரசின் இவ்வளவு இடையூறுகளையும் எதிர்கொண்டு தி.மு.க., அ.தி.மு.க., அரசுகள், நீதிமன்றங்கள் மூலம் எடுத்த நடவடிக்கைகள், விவசாயிகள், அனைத்துக் கட்சியினர், மக்கள் போராட்டங்களை அடுத்தே இந்த வெற்றி கிடைத்திருக்கிறது தமிழகத்திற்கு.

1972 ஜனவரி 2ஆம் தேதி முல்லை - பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவு 142.45 அடி. 1977 நவம்பர் 4ஆம் தேதி நீர்த்தேக்க அளவு 146.7 அடி. 1979 நவம்பர் 4ஆம் தேதி 143.7 அடி. இப்பொழுது 2014 நவம்பர் 20ஆம் தேதி 142 அடி. இப்படி நான்கு ஆண்டுகள் 142 அடியைத் தாண்டி நீர் தேக்கப்பட்டதால் அணைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பது உறுதியாகிறது.

தமிழகத்திற்கு எதிராகக் கேரள அரசு இப்படித் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருந்தாலும் கூட, இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத தமிழர்களான ஐயப்ப பக்தர்கள் கேரளாவுக்குக் காவடி தூக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

பெரும் பணக்காரக் கோயிலான திருப்பதிக்கு அடுத்துப் பெருமளவில் பணத்தைக் குவித்துக் கொண்டிருக்கும் கோயில் கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயில்தான். இப்படிக் குவிக்கும் பெரும் பணக்குவியல் தமிழர்களுடையதாகவே இருக்கிறது.

ஆண்டுதோறும் கார்த்திகை தொடங்கி தை 14ஆம் தேதி வரை தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள். இவர்கள் கொண்டு செல்லும் தமிழ்நாட்டுத் தேங்காய்கள் கேரளாவில் எண்ணையாகிறது. கொண்டு செல்லும் அரிசி அங்கே குவிந்து விற்பனையாகி பணமாக மாறுகிறது. இவர்கள் கொண்டு செல்லும் பணம், செலவு செய்யும் பணம் இப்படிப் பார்த்தால் தமிழக பக்தர்கள் மூலம் கேரள மாநிலம் கோடிக்கணக்கான பணத்தை வருவாயாக ஆண்டுதோறும் பெற்றுக் கொண்டு இருக்கிறது.

தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுக்கும் கேரளாவிற்கு, தென்தமிழ் மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக மாற்றக் காரணியாக இருக்கும் கேரளாவிற்கு, பக்தி என்ற பெயரால் தமிழர்களின், தமிழ்நாட்டின் பணம் போக வேண்டுமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நமது பக்த கோடிகள், கொஞ்சம் பாதையை மாற்றிப் பழனிக்காவது சென்று வரலாம் இல்லையா? தமிழர்களின் பணம் தமிழகத்தில் இருக்கும் அல்லவா?

தமிழக பக்தர்களின் பணம், தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளாவிற்குப் போகாமல், குறைந்தது தமிழகக் கோயில்களுக்காவது போகட்டுமே!

பெரியாரின் கொள்கைகளுக்காகப் போராடுகிறோம். பெரியாறின் நீருக்காகப் போராடுகிறோம்! ஐயப்ப பக்தர்களே, நீங்கள் கேரள ஐயப்பன் கோயிலைப் புறக்கணித்துத் தமிழகக் கோயில்களுக்கு உங்கள் பாதையை மாற்றினால் போதும்!

கேரளா, உங்கள் மூலமான வருவாயை இழக்கும். தமிழ்நாடு, முல்லை - பெரியாறு உரிமையை முழக்கும்!

Pin It