முன்பெல்லாம் பெங்களூரு என்று சொன்னால், இதமான குளிர் கொண்ட ஒரு சுற்றுலாத்தளம் நினைவுக்கு வரும்.

இன்றோ பெங்களூரு என்று சொன்னவுடனே ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கும், நீதிமன்றமும்தான் நினைவுக்கு வருகின்றன.

குறிப்பாகப் பதினெட்டு ஆண்டுகளாக, மனுப்போட்டு மனுப்போட்டு, வாய்தா வாங்கி, வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடிப்பதைப் பார்த்தால், ஒரு வேளை இது கின்னஸ் சாதனைக்கான முயற்சியோ என்று தோன்றுகிறது. சாதாரண குடிமகனால் எண்ணிக்கூடப் பார்க்க முடியாத ஜெயலலிதாவின் மகத்தான சாதனை இது.

தான் சொல்பவர்தான் நீதிபதியாக இருக்க வேண்டும், தான் சொல்பவர்தான் தன்னை விசாரிக்கும் அரசு வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்று மனுப்போட்டார் ஜெயலலிதா. அப்பொழுது அவர் காட்டிய வேகத்தைப் பார்த்தபோது, வழக்கை விரைந்து முடித்திட முடிவு செய்ததுபோலத் தோன்றியது.

ஆனால், 15.05.2014 அன்று பெங்களூரு நீதிமன்றத்தில், “இந்த வழக்கில் சென்னையில் உள்ள கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு இயக்குனரகமும், அதன் அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து, உண்மைகளை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்காமல் அதைத் திசைதிருப்ப முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று சொன்னதும், வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு அபராதம் விதித்ததும், ஜெயலலிதாவின் வேகத்தைத் தடை செய்ததாக அமைந்துவிட்டது.

பிறகென்ன? மறுபடியும் வாய்தா, மறுபடியும் மனு.

இப்பொழுது ஒரு புதிய மனு கொடுத்திருக்கிறார்.  அதாவது 1997ஆம் ஆண்டு வழங்கப்பட்ட, குற்ற ஆவண மொழிபெயர்ப்பில் தவறு இருக்கிறதாம். அதை இப்பொழுது சரி செய்திருக்கிறாராம். இந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மனுப்போட்டிருக்கிறார். வழக்கம்போல் நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்துவிட்டது.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரணை செய்து முடித்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி லோதா சொல்லியிருப்பதை இந்த இடத்தில் நாம் நினைவு கூரலாம்.

மனுப்போடுவதையும், வாய்தா வாங்குவதையும் நிறுத்திவிட்டு, தன்னுடைய துணிச்சலை பெங்களூரு வழக்கில் ஜெயலலிதா எப்போது மெய்ப்பிக்கப் போகிறார்?

Pin It