தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "ஹரியானாவில் வாக்குத் திருட்டு நடந்திருப்பதை வலுவான ஆதாரங்களுடன் சகோதரர் ராகுல் காந்தி நிரூபித்துள்ளார். வாக்குத்திருட்டு குறித்து ஆதாரங்கள் வெளியிட்டபின்பும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்கவில்லை" என்று தன் கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அரியானாவில் முகவரியே இல்லாமல் 93,000 வாக்குகள் சேர்க்கப்பட்டதாகவும், ஒரே தொகுதியில் ஒரே புகைப்படத்துடன் 100 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், நோடல் என்ற தொகுதியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் 501 வாக்காளர்கள் இருப்பதாகவும், 1.24 லட்சம் பேர் போலி புகைப்படத்துடன் வாக்குரிமை பெற்றிருப்பதாகவும், ஷாசாகிரி என்பவர் பதாஸ்பூரில் 14 முறை வாக்களித்துள்ளார் என்றும், உத்தரப் பிரதேசத்தவர்கள் அரியானாவில் வந்து வாக்களித்திருக்கிறார்கள் என்றும் அடுக்கடுக்காகத் தேர்தல் ஆணையத்தின் மீது ஆதாரங்களுடன் கடும் குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார் ராகுல் காந்தி.

அதுமட்டுமல்லாமல் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு 'மாடல்' பெண்ணின் புகைப்படத்தைக் கொண்டு 20 வெவ்வேறு பெயர்களில், 20 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கப் பட்டிருப்பதாகவும் அம்பலப் படுத்திருக்கிறார் அவர்.

இதற்கான பதிலைச் சொல்லி ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய தேர்தல் ஆணையர் 'அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை' என்ற மழுப்பலோடு வாயை மூடிக்கொள்கிறார்.

இப்பொழுது தமிழ்நாட்டிலும் தேர்தல் வாக்காளர் சிறப்புத் திருத்தம் என்ற அதே பெயரில் தேர்தல் ஆணையம் இறங்கியிருக்கிறது. இதிலும் பல குழறுபடிகள் இருப்பதாகச் சொல்கிறார் திமுகழக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ.

நேர்மையாக நடக்க வேண்டிய வாக்காளர் சரிபார்ப்புப் பணியைச் 'சிறப்பு திருத்தம்' என்று சொல்லி, பா.ஜ.வுக்குச் சாதமாக நடப்பதற்காக மக்களின் குடியுரிமையைப் பறிப்பது, வன்மையான கண்டனத்திற்கு உரியது.

- கருஞ்சட்டைத் தமிழர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.