judge usஅண்மையில் மறைந்த நீதியரசர் ரூத், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இணை நீதியரசராக 1993 முதல் தன் மரணம் வரை பணியாற்றியவர்.

நீதியரசர் ரூத், மார்ச் 15, 1933-இல் நியூயார்க் மாநிலத்தில் (புரூக்ளின்) பிறந்தவர். இவரின் தாயார், ரூத் சிறப்பாகப் படிக்கவேண்டும் என்று ஆர்வம் கொண்டு அவருக்குக் கல்வியில் பலவகைகளில் உதவியாக இருந்தார். எனினும்  ரூத் உயர்நிலைப் பள்ளி முடிப்பதற்கு முன்னரே புற்றுநோயால் அவரது தாயார் மறைந்துவிட்டார்.

கார்னெல் பல்கலைக்கழகத்தில், 1954 ஆம் ஆண்டு இளங்கலை முடித்தார் ரூத். தன் கல்லூரி இளநிலை முடித்தவுடன், பேடர்  (Bader ) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சோசியல் செக்யூரிட்டி அலுவலகத்தில் அவர் தன் 21 வயதில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, அவர் கருவுற்றார் என்ற காரணத்திற்காக அவருக்குப் பதவி உயர்வு மறுக்கப்பட்டது. பின்னாளில் பெண்களுக்காகப் பல்வேறு சட்டப் பாதுகாப்புகளை, உரிமைகளை இவர் கொண்டுவரும்போது, பணியிடங்களில் பெண்களுக்கு மகப்பேறு காரணமாகப் பதவி உயர்வு மறுக்கப்படக்கூடாது என்னும் உரிமையைச் சட்ட ரீதியாகப் பெற்றுத் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1956 ஆம் ஆண்டு ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் 9 மாணவிகளில் ஒருவராக ரூத் சேர்ந்தார். அந்த வகுப்பில் 500 மாணவர்கள் இருந்தனர் என்பது அன்றைய காலகட்டத்தில் பெண்கள் சட்டம் படிக்கச் செல்வது எவ்வளவு சவால் நிறைந்ததாக இருந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

அந்த சட்டப் பள்ளியின் முதல்வர் அனைத்து மாணவிகளையும் தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து "ஏன் நீங்கள் ஒரு மாணவனின் இடத்தில் சட்டம் படிக்க வந்திருக்கின்றீர்கள்?" என்று கேட்டதாகச் செய்திகள் படிக்கின்றபோது, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை ஒரு சட்டக் கல்லூரி முதல்வர் கூடப் புரிந்திருக்கவில்லை என்ற அளவில்தான் ஆணாதிக்கம் நிறைந்த காலமாக இருந்திருக்கின்றது.

1959 ஆம் ஆண்டு தன் சட்டப்படிப்பை முடித்துக்கொண்டு வெளிவந்தவுடன் தன் துறை சார்ந்த வேலையைப் பெறுவதில் ரூத் மிகுந்த சிரமப்பட்டார். உச்சநீதிமன்ற நீதிபதி பெலிக்ஸ் பிராங்க்பியூட்டர் (Felix Frankfurter), ரூத் ஒரு பெண் என்ற காரணத்தினால் நீதிமன்ற கிளார்க் வேலையை அவருக்குத் தர மறுத்தார். பிறகு கொலம்பியா சட்டப் பல்கலைக்கழகத்தின் கட்டளையின் பெயரில் அவருக்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்றம், நியூயார்க்கில் பல்மிரி என்ற நீதியரசரிடம்  கிளார்க் வேலை தரப்பட்டது. அந்தப் பணியில் இரண்டு ஆண்டுகள்  ரூத் அவர்கள் பணியாற்றினார்.

1963-இல் ரூட்கேர்ஸ் சட்டப் பள்ளியில் (Rutgers Law School) விரிவுரையாளராகப் பணியாற்றினார். அந்தப் பணியில் பெண்களுக்கு, ஆண் விரிவுரையாளர்களை விடக் குறைவான ஊதியமே தரப்பட்டது. அதற்குச் சொல்லப்பட்ட காரணம், அவரின் இணையர் நல்ல ஊதியத்தில் வேலையில் உள்ளார் என்பதுதான்.  1960-களின் இறுதியில் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் நிலவி வந்த பாலியல் பாகுபாடுகளை இவற்றைப் படிக்கின்றபோது நாம் விளங்கிக்கொள்ளமுடியும்.

1970 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் முதல் பெண்களுக்கான சட்ட இதழை நடத்துபவர்களில் ஒருவராக ரூத் இருந்தார். அந்த இதழின் பெயர் Womens’  Rights Law Reporter. பாலியல் பாகுபாடு குறித்து முதல் கேஸ்புக் எழுதியவர்களுள் ஒருவராகவும் ரூத் இருந்தார்.

ரூத், பெண்களுக்கான உரிமைகளுக்காகப் போராடும் ஓர் அமைப்பை 1972 ஆம் ஆண்டு தொடங்கியவர்களுள் ஒருவர். 1974 ஆம் ஆண்டு அந்த அமைப்பின் சார்பாக 300-க்கும் மேற்பட்ட பாலியல் பாகுபாடுகள் குறித்த வழக்குகளை நடத்தியுள்ளார். அந்த அமைப்பின் இயக்குநராக ஆறு பாலியல் பாகுபாடுகள் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் முன் நடத்தி, அதில் அய்ந்து வழக்குகளை வென்றுள்ளார்.

அனைத்துத் துறைகளிலும் பாலியல் பாகுபாடுகளைக் களைய வேண்டும் என்று எடுத்த எடுப்பில் அவர் பயணிக்காமல், மிகக் கவனத்தோடு சில பாகுபடுத்திடும் சட்டங்களை மட்டுமே குறிவைத்து அவர் வெற்றிகள் கண்டார். பல இடங்களில் ஆண்கள் வழக்குத் தொடுப்பவராக இருப்பது அவசியம் என்று கருதினார். அப்போதுதான் அந்தச் சட்டம் இருபாலருக்கும் ஆரோக்கியமற்றது என்பதை நீதிமன்றம் புரிந்துகொள்ளும் என்று நினைத்தார்.

தந்தை பெரியார் தன் பெண்ணுரிமைக் கருத்துகளைப் பற்றிக் கூறும்போது, பெண்கள் விடுதலை அடைதல் ஆண்களுக்கும் விடுதலையைத் தரும் என்பதை விளக்கியிருப்பார் என்பதை இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும்.  சில சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமாக இருப்பது போலத் தோன்றினாலும், அது, பெண்கள் ஆண்களைச் சார்ந்தே இயங்க வேண்டும் என்ற வலியுறுத்தலைக் கொண்டதாக இருந்தது என்பதை நீதிமன்றத்திற்கு விளக்கி, பாலியல் பாகுபாடுகள் கொண்ட சட்டங்களை அவர் மாற்றி அமைத்திருக்கிறார் என்பதே அவருக்கு அமெரிக்கச் சட்ட வரலாற்றில் இருக்கும் சிறப்பு.

எந்தெந்தத் தளங்களில் அவர் பெண் என்பதற்காக வாய்ப்புகள் மறுக்கப்பட்டதோ அவற்றை எல்லாம் தன் வாதங்களின் மூலம் வென்றவர் ரூத். அமெரிக்காவில் இன்றைக்கு ஒரு கருவுற்ற பெண்ணுக்கு வேலைவாய்ப்பு நிலைத்திருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் ரூத்; கிரெடிட் கார்டு, வங்கிக் கணக்கு, வீடு ஒரு பெண் பெயரில் கணவர் அல்லது தந்தையின் அனுமதியில்லாமல் வைத்துக்கொள்ள முடிகிறது எனில் அதற்குக் காரணம் ரூத்; அமெரிக்க மண்ணில் விரும்பியவரின் பால்  குறித்து எந்தப் பாகுபாடும் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள முடிகின்றது என்றால் அதற்குக் காரணமானவர் ரூத் என்று அவர் மறைந்தபோது முகநூல் பக்கத்தில் ஒரு பெண் அஞ்சலி செலுத்தியிருந்தார்.

பெண்ணுரிமைகளுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் தன் குரலை எப்போதும் ஒலித்தவர் நீதியரசர் ரூத். 

கருக்கலைத்தல் பற்றிய உரிமைகள் பெண்களுக்கு உண்டு என்று வாதாடியவர் ரூத் அவர்கள். கருக்கலைத்தல் பற்றி ஒரு பேட்டியில் கூறும்போது, the basic thing is that the government has no business making that choice for a woman என்கிறார். தந்தை பெரியார் அவர்களும்  குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா ? வேண்டாமா? என்று பெண் தான் முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிடுவதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். 

Notorious RBG  என்ற நூல் ரூத் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய குறிப்புகள் அடங்கியது.  ஒரு நீதியரசரைப் பற்றிய நூல் என்பது உண்மையில் அவர் தன் சட்டப்பயணத்தில் சமூக நீதிக்காகப் பயணித்ததை வெளிப்படுத்தும் ஒரு கருவி எனின் அது மிகையன்று.  

மேலும் டாட்டூ, பாப் இசை, படங்கள், குழந்தைகள் கதை  மூலமாகவும் ரூத் அவர்கள் மக்களோடு பயணித்தார் என்பதைக்கொண்டே அவர் வாழ்நாளெல்லாம் தன் துறையின் மூலம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். 

1999 ஆண்டு அவருக்குப் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்துதான் மரணிக்கும் வரை புற்றுநோயோடு நீண்ட போராட்டம் மேற்கொண்டாலும் தன் சட்டப் பணிகளிலிருந்து அவர் விலகியதே இல்லை என்பதே அவர் போராட்ட குணத்திற்குச் சான்று. 

“The Guardian” என்ற இதழ் அவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவர் தன் 17 வயதில் யூத மதக் கொள்கையிலிருந்து விலகிவிட்டார் என்று எழுதியிருந்தது. 

The Guardian’s September 18 obituary initially declared that the justice had “abandoned her religion” at the age of 17 when she was not allowed to join a minyan to say Kaddish for her mother because she was a woman.

என்று அந்த இதழ் தன் இரங்கற் செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றது. 

அதற்குப் பல யூதர்களிடமிருந்து கடுமையான தாக்குதலை அந்த இதழ் இன்று சந்தித்துக்கொண்டிருக்கின்றது. இவரின் தாயார் மறைந்தபோது, இவர் பெண் என்ற காரணத்தினால் வழிபாட்டில் பங்கெடுக்கும் உரிமை மறுக்கப்பட்டதாக நாம் செய்திகளைப் படிக்கின்றோம். 

“I said on the equality side of it, that it is essential to a woman's equality with man that she be the decision-maker, that her choice be controlling” என்ற அவரின் வாக்கியங்களைப் படிக்கின்றபோது, பெண்கள் முடிவெடுக்கும் நிலையில் தங்களை வளர்த்தெடுத்தால் மட்டுமே இங்கே பெண்ணுரிமை சாத்தியப்படும் என்ற அவரின் கூற்றை நாம் புறக்கணிக்க முடியாது.

இன்று அமெரிக்கா ஒரு வலதுசாரி அதிபரை இந்தத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று முனைந்து கொண்டிருக்கும் போது, ரூத் அவர்களின் மரணம் இடதுசாரிகளிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ம.வீ.கனிமொழி

Pin It