இப்போதெல்லாம் அதிரடித் தீர்ப்புகளை அடிக்கடி தருகின்றன நீதிமன்றங்கள். கடந்த 13ஆம் தேதி தில்லி உச்சநீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண் தொடுத்த வழக்கை ஏற்றுக் கொண்டு, இனி அரசு விளம்பரங்கள் எவற்றிலும் குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி ஆகியோர் படங்களைத் தவிர, வேறு யாருடைய படங்களையும் வெளியிடக்கூடாது என ஆணையிட்டுள்ளது. இவ்வாணை சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க மூவர் குழு ஒன்றை அரசு நியமிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இவை போன்ற கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட வேண்டாம் என்னும் அரசு வழக்கறிஞரின் வேண்டுகோளை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மக்களின் வரிப்பணத்தில் தங்களின் படங்களைப் போட்டு, அரசியல்வாதிகள் விளம்பரம் தேடிக்கொள்கின்றனர் என்றும், அதனால் அரசு வரிப்பணம் வேறு தேவையான செயல்களுக்குப் பயன்படாமல் போகிறது என்றும் சாந்திபூஷண் தன் மனுவில் கூறியுள்ளார்.

இனிமேல் எந்தவொரு மாநில முதலமைச்சர் மற்றும் ஆளுநர் படங்களைக் கூட, விளம்பரங்களில் வெளியிடக் கூடாது என்றாகிறது. இவ்வாணை மக்களின் வரிப்பணத்தைக் காப்பாற்றுவதாகக் கூறினாலும், மக்களின் ஜனநாயக உரிமைகளை முறித்துப் போடுகிறது என்பதை மறுப்பதற் கில்லை. பிரதமரைப் போலவே, மாநில முதலமைச்சர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே. ஒரு மக்கள் பிரதிநிதிக்கு வழங்கப்படும் உரிமை இன்னொருவருக்கு மறுக்கப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கூட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே என்றாலும், எல்லோருடைய படங்களும் தேவையின்றி விளம்பரப்படுத்தப்படுவதில்லை. அதே நேரத்தில், அந்தத் துறை சார்ந்த அமைச்சரின் படம் வெளியிடப்படுவது எந்த விதத்திலும் தவறாகாது என்பதை நீதிமன்றம் ஏனோ மறுக்கிறது.

தனிமனித வழிபாடு போற்றுதற்குரியதில்லை என்றாலும், வரலாற்றில் தனிமனிதப் பாத்திரத்தை நாம் முழுமையாக மறுத்துவிட முடியாது. வழிநடத்தும் ஒருவரை முன்னிறுத்துவது ஜனநாயக விரோதம் என்றும் கூறிவிட முடியாது. ஏனெனில் அவரை அந்த இடத்தில் தக்க வைத்துக் கொள்ளவும், அடுத்த நிமிடமே அகற்றவும் அதிகாரம் பெற்றவர்களாக மக்களே இன்றளவும் உள்ளனர்.

ஒழுங்கு கட்டுப்பாடு என்னும் பெயரில், சின்னச் சின்ன சுதந்திரங்களை எல்லாம் பறிக்கின்ற போக்கு அண்மைக்காலமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மக்களின் வரிப்பணம் முக்கியமானதுதான், மக்களின் சுதந்திரமும், ஜனநாயக உரிமையும் அதைவிட முக்கியமானவை.

Pin It