நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்துள்ளது. இப்போது விசித்திரமான தீர்ப்புகளையும் சந்திக்கத் தொடங்கியுள்ளது.

ஜெயலலிதா வழக்கு 19 ஆண்டுகள் நடைபெற்றது. இப்போது அவர் விடுதலை ஆகி விட்டார். நடிகர் சல்மான்கான் வழக்கு 13 ஆண்டுகள் நடைபெற்று, 5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. ஐந்தே மணி நேரத்தில் பிணை(ஜாமீன்) வாங்கி விட்டார். ஆனால், வாக்குமூலத்தையே தவறாகப் பதிவு செய்தோம் என்று காவல் துறை உயர் அதிகாரியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்னும், பேரறிவாளன்கள் ஆண்டுகள் பலவாய்ச் சிறையில் உள்ளனர்.

இச்சூழலில், பெங்களூரு உயர்நீதிமன்றம், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பு, மூடர்கள் பலரின் கண்களைத் திறந்துள்ளது. வரலாற்றுப் புகழ் மிக்க அத்தீர்ப்பை வழங்கிய நீதிப் பேரரசர் குமாரசாமி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நீதிக்கு முன் அனைவரும் சமம், நீதிபதிகள் அனைவரும் கடவுளுக்குச் சமம் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருப்போர் இன்னும் நாட்டில் எவ்வளவோ பேர் உள்ளனர். அவர்களின் மூட நம்பிக்கைகளை எல்லாம் ஒரே வரித் தீர்ப்பில் அடித்து உடைத்து நொறுக்கிய பெருமை அவரையே சாரும்.

அஞ்சும், பத்தும் லஞ்சம் வாங்கிவிட்டு, ஊழல் வழக்கில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்போரெல்லாம், இன்று அச்சம் நீங்கி, பீடு நடை போட்டுப் பெருமிதத்தோடு உலா வருகின்றனர். எங்கு நோக்கினும் பாரதியார் பாடல்தான். அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்ப தில்லையே என்று அவர்கள் பாடிப் பரவசம் அடைகின்றனர். ஆனாலும் பாவம் அவர்களுக்குத் தெரியாது, எல்லோருக்கும் இப்படி “நீதி” கிடைத்து விடாது என்பது! ஏழை, எளியவர்களுக்கெல்லாம் அவ்வளவு எளிதில் கிடைப்பதற்கு, நீதி ஒன்றும் அவ்வளவு மலிவானதில்லை.

ஏறத்தாழ 19 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் இப்படித் திடீரென ஒரு தீர்ப்பு வந்துவிட்டது. இந்த வழக்கை அப்போதே நீதிபதி குமாரசாமியிடம் கொடுத்திருந்தால், 97ஆம் ஆண்டே தீர்ப்பு அளித்திருப்பார், நீதியும் கிடைத்திருக்கும். ஜெயலிலிதா சசிகலா மட்டுமின்றி சின்ன எம்ஜிஆர், சின்ன எம்ஜிஆர் என்று ஊரெல்லாம் சுவரொட்டி ஒட்டிய (அவரே ஒட்டிக்கொண்ட)சுதாகரனும் உலக உத்தமர்தான் என்னும் உண்மையும் அன்றே உலகுக்குத் தெரிந்திருக்கும். அவர் மீது ஜெயலலிதாவே கஞ்சா வழக்குப் போட்டிருந்தாலும், அவர் ஓர் உத்தமர் என்பது பெங்களூரு தீர்ப்பினால் இன்று ஊருக்கே விளங்கிவிட்டது.

இத்தனை ஆண்டுகள் இழுக்காமல், அன்றைக்கே இந்த வரலாற்றுப் புகழ் மிக்க தீர்ப்பைத் தந்திருந்தால், அரசுக்கும் 19 ஆண்டு காலம் பல கோடி ரூபாய் வழக்கிற்காகச் செலவாகி இருக்காது. உத்தமர்களின் மீது வழக்குத் தொடுத்து, மக்கள் வரிப்பணத்தைப் பல கோடி செலவு செய்தவர்களுக்குத்தான் இனிமேல் தண்டனை தர வேண்டும்.

வழக்கு நடத்திய கர்நாடக அரசும், ஒரு பெரும் பிழை செய்து விட்டது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரை, இந்தியாவின் நிதி அமைச்சரே வீட்டிற்கு வந்து சந்தித்த பின்பாவது, அரசு திருந்தி வழக்கைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். நிதி அமைச்சரே வீட்டிற்கு வந்து சந்திக்கும் அளவு உயரத்தில் இருக்கும் ஒருவர் எப்படிக் குற்றவாளியாக இருக்க முடியும் என்பதை அரசு உணர வேண்டாமா?

பெங்களூருத் தீர்ப்பு இன்னொரு நன்மையையும் செய்துள்ளது. நீதி மன்றத்தையே முழுமையாக நம்பிக் கொண்டிருந்த நம் போன்ற பலருக்கு ஒரு படிப்பினையைத் தந்துள்ளது. மக்கள் மன்றத்தை நம்புங்கள் என்று பொட்டில் அறைந்து சொல்லியிருக்கிறது. நீதி மன்றத்தில் நியாயத்தை எதிர்பார்த்து நின்றவர்களின் நாடி நரம்புகளில் ஒரு புதிய சூட்டினை ஏற்றியுள்ளது. தீமைகளை எதிர்கொள்ள வேண்டிய தருணம் இது என்பதை உணர்த்தியுள்ளது.

தி.மு.க. உள்ளிட்ட பல எதிர்க் கட்சித் தொண்டர்களிடையே ஒரு எதிபார்ப்பு இருந்தது என்பதை மறைக்க வேண்டியதில்லை. ஜெயலலிதா சிறைக்குச் சென்றுவிட்டால், அந்தக் கட்சி வீழ்ந்துவிடும், நாம் வென்றுவிடலாம் என்ற எண்ணம் இருந்தது. அது வீரனுக்கு அழகில்லை. எதிரியை ஒதுக்கிவிட்டுப் பெறும் வெற்றியை விட, எதிரியைக் களத்தில் சந்தித்துப் பெறும் வெற்றியே வீரம் நிறைந்தது . அந்த வெற்றியைப் பெறும் ஊக்கத்தோடும், உணர்வோடும் களமிறங்க வேண்டிய காலத்தில் நாம் நிற்கிறோம் என்னும் எழுச்சியை இத்தீர்ப்பல்லவா நமக்குள் ஏற்படுத்தியுள்ளது. வாழ்க நீதிபதி குமாரசாமி!

1931 ஆம் ஆண்டு பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது நாடே கொந்த ளித்தது. எல்லோரும் அதனை எதிர்த்து எழுந்தனர், எழுதினர். தந்தை பெரியார் மட்டும், அவர் தூக்கிலிடப்பட்ட மறு வாரமே, அதனை வரவேற்றுத் தன் குடியரசு இதழில், “நமது அரசாங்கத்தாரை இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணம் உடைய வர்களாகப் பார்த்து, மாகாணத்திற்கு நான்கு பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்று மனதார வேண்டு கின்றோம்” என்று எழுதினர். ஏன் தெரியுமா? உண்மைகள் வீழ்த்தப்படும் போதுதான் உணர்ச்சிகள் பொங்கி எழும். அப்படியாவது மனிதர்கள் மானமும், சூடு, சுரணையும் உள்ளவர்களாக மாறுவார்கள் என்று பெரியார் நம்பினார்.

அதுபோல், இப்படித் தீர்ப்புகளைத் தொடர்ந்து தந்து, நீதிமன்றத்தை நம்பும் மனிதர்களைச் சூடு, சுரணை உள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்று நீதிபதிகளைக் கேட்டுக் கொள் கின்றோம்.

நீதிபதி குமாரசாமி அவர்கள் பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க

...................................................................................................................

 சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் பெங்களூரு உயர்நீதிமன்றம் எந்த நிபந்தனையுமின்றி முழுமையாக விடுவித்துள்ளது. எனினும், அவர் தன் வருமானத்திற்கு மேல் 2.82 கோடி ரூபாய் சேர்த்துள்ளார் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, வருமானத்திற்குமேல் ஜெயலலிதாவிடம், 53 கோடி ரூபாய் பணம் இருந்ததாகக் கூறியிருந்தார். உயர்நீதிமன்றமோ, அது மூன்று கோடிக்கும் குறைவானது என்று கூறியுள்ளது. எவ்வாறாயினும் வருமானத்திற்குமேல் சொத்துக் குவிக்கப்பட்டுள்ளது என்பதை உயர்நீதிமன்றமும் மறுக்கவில்லை.

பிறகு எப்படி விடுதலை வழங்கப்பட்டது-? 1976ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்மாதிரியாகக் காட்டி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விடுதலை வழங்கியுள்ளார் நீதிபதி குமாரசாமி. அந்த வழக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் வருமான வரித்துறை அதிகாரியாக 1962ஆம் ஆண்டுவரை பணியாற்றிய கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரியின் மீது தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு. அவ்வழக்கில் அவர் கூடுதலாக வைத்திருந்த 1.27 லட்சம் ரூபாய், அரசு குற்றம் சாட்டிய தொகையில் 10 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தது. அவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், 10 விழுக்காட்டிற்கும் குறைவான சொத்துக் கூடுதலாக இருக்குமானால், அதனை மன்னித்து விடுதலை செய்துவிடலாம் என்று தீர்ப்புக் கூறினர். அதனைக் காட்டித்தான் இப்போது, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு விடுதலை கிடைத்திருக்கிறது-.

ஆனால், 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் என்று திருத்தப்பட்ட புதிய சட்டம் ஒன்று நிறை வேற்றப்பட்டுள்ளது. அச்சட்டத்தின் 13(1)(e) பிரிவு,

சட்டத்திற்குப் புறம்பான வகையில் அரசு ஊழியர் ஒருவரிடம் வருமானத்திற்கு மேல் கூடுதல் சொத்து இருக்குமானால், அவருடைய நடவடிக்கையை குற்றவியல் பிறழ் நடவடிக்கை (offence of criminal misconduct) யின் கீழ் கொண்டு வருகின்றது. அப்பிரிவு, எத்தனை விழுக்காடு, வருமானத்தை மிஞ்சிய சொத்து வைத்துக் கொள்ளலாம் என்னும் விதிவிலக்கு எதனையும் வழங்கவில்லை. எனவே கூடுதலாக சொத்துக் குவித்துள்ள அனைத்து நடவடிக்கையுமே, அதனுடைய அளவுகளைப் பற்றிய எந்தக் கவலையும் இன்றி, குற்றவியல் நடைமுறையே ஆகும்.

76ஆம் ஆண்டு தீர்ப்பு என்ன கூறியிருந்தாலும், அதற்கு 12 ஆண்டுகளுக்குப் பின்னால், ஒரு சட்டத்திருத்தம் நிறைவேறிய பின்னர், புதிய திருத்தமே பொருந்தும் என்பதை அனைவரும் அறிவோம்.

இதனை நீதிபதி குமாரசாமி அவர்கள் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது விளங்கவில்லை.

 - சுபவீ

Pin It