ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் பொறுப்புகளுக்கு மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப் பணித் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. சாதாரணமாக ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டால் அதில் தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் வெற்றி பெறுவார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 990 பேரில் வெறும் 42 பேர் மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

agitation for iasதற்போது மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதனைப் பார்க்கும் போது சில செய்திகள் புலப்படுகின்றன. அதாவது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் முதன்மைத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் நேர்முகத் தேர்வில் குறைவான மதிப்பெண்களே பெற்றிருக்கிறார்கள். அதாவது சராசரியாக உயர் வகுப்பு மாணவர்கள் நேர்முகத் தேர்வில் 275க்கு 160-/180 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். அதே வேளையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களில் பெரும்பாலானோர் 140 என்கிற அளவிலேயே மதிப்பெண் பெற்றுள்ளனர். ஐஏஎஸ் தேர்வைப் பொறுத்தவரை ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிக முக்கியம். ஒரு மதிப்பெண்ணால் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், ஐஏஎஸ் போன்ற உயர் பொறுப்பு கிடைக்காதவர்கள், தங்களது சொந்த மாநிலத்தில் பணியாற்ற வாய்ப்பை இழந்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். நமது மாணவர்களின் வெற்றியைப் பாதித்ததில் நேர்முகத் தேர்வு மதிப்பெண் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்படி மதிப்பெண் குறையக் காரணம் இருக்கிறது. யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்தியக் குடிமைப் பணிகள் தேர்வாணையத்தில் தற்போது மொத்தம் 8 உறுப்பினர்கள் உள்ளனர், தலைவரையும் சேர்த்து.

இந்த உறுப்பினர்களைத் தலைமையாகக் கொண்டுதான் நேர்முகத் தேர்வுக்கான ஒவ்வொரு அமர்வும் உருவாக்கப்படுகிறது. இவர்களுடன் சேர்ந்து பிற துறைசார் வல்லுநர்கள் அமர்வில் இருப்பார்கள். மாணவர்களுக்கான மதிப்பெண்களைத் தீர்மானிப்பவர் அந்த போர்டின் தலைவர். இங்கே தான் பிரச்சனையே. அதாவது இந்த நேர்முகத் தேர்வில் அமரும் மத்தியத் தேர்வாணைய உறுப்பினர்கள் பெரும்பாலும், சில சமயங்களில் அனைவரும் உயர் சாதியைச் சேர்ந்தவர்களே. தற்போது இருப்பவர்களில் சேர்மனைத் தவிர பெரும்பாலும் உயர் வகுப்பினர் தான். மேலும், இவர்களிடத்தில் நேர்முகத் தேர்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் எந்தெந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற முழு விவரமும் இருக்கும். அதாவது அந்த மாணவன் அல்லது மாணவி தாழ்த்தப்பட்டவரா, பழங்குடியினரா, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரா என்ற முழு விவரமும் தெரியும். அப்படி இருக்கும் போது ஏற்கனவே இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நபர்கள் இது போன்ற இடங்களில் மதிப்பெண் வழங்கும் பொறுப்பில் இருந்தால் அவர்களது செயல்பாடுகள் நியாயமானதாக இருக்கும் என்று சொல்லமுடியாது. ஏனென்றால், உதாரணமாக தற்போது ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி அவர்களின் உறவினர் மத்திய தேர்வாணைய உறுப்பினராக இருக்கிறார். அவர் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பு மாணவர்களுக்கு எப்படி நியாயமான மதிப்பெண் வழங்குவார் என்று நம்பமுடியும்.

மத்திய தேர்வாணையத்தின் செயல்பாட்டையும், தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பாகவும் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கலாம். 1964ஆம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரி பிரதமரான பின்பு ஐ.ஏ.எஸ் தேர்வுகளை இந்தியில் நடத்தவேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்தார். இந்த யோசனைக்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பேரறிஞர் அண்ணா தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்மொழியைக் காக்க பலர் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். இந்தப் போராட்டங்களை அடுத்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற்ற தொடர் போராட்டங்களைக் கருத்தில் கொண்டு 1965ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று காங்கிரஸ் காரியக் கமிட்டி அன்றைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை டில்லியில் நடத்தியது. அந்தக் கூட்டத்தில் ‘இந்திய குடிமைப் பணிக்கான தேர்வுகள் ஆங்கிலம், இந்தி தவிர அனைத்து பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் ஆங்கிலம், இந்தி தவிர மற்ற எல்லா பிராந்திய மொழிகளிலும் நடத்தினால்தான் இந்தி பேசாத மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு ஒரு முடிவு கட்டமுடியும் என்று காமராஜர் வலியுறுத்தினார். அதேநேரத்தில் தமிழகத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களைக் கருத்தில்கொண்டு 1967ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில் ஆங்கிலம், இந்தி தவிர எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்திய குடிமைப் பணிக்கான தேர்வு நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்மானம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து 1974ஆம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வு தொடர்பாகப் பரிந்துரைகள் வழங்க டி.எஸ்.கோத்தாரி அவர்கள் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. 1978ஆம் ஆண்டு கோத்தாரி கமிட்டி பரிந்துரைகளை ஏற்ற மத்திய அரசு, 1979ஆம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வில் மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் ஆளுமை சோதனை என்று சொல்லக்கூடிய நேர்முகத் தேர்வு என்று மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன. கோத்தாரி கமிட்டி அறிக்கையில் உள்ள முக்கியமான பரிந்துரைகள் என்னவென்றால் குடிமைப் பணித் தேர்வுகளை ஆங்கிலம், இந்தி தவிர எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் எழுதலாம் என்பதாகும். இதனையடுத்து 1979ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வை தமிழில் எழுதி வருகின்றனர். இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழில் தேர்வு எழுதிய இந்த 40 ஆண்டுகளில் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் கேட்கப்படுகின்றன.

மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுமுறை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் விதி 14 (தேர்வு முறையில் மொழிவாரி சமத்துவம் இல்லை) விதி 16க்கு (கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அனைவருக்கும் சம உரிமை) விரோதமான நடவடிக்கையாகும்.

ஒருவர் தனது கருத்தை அந்த விஷயத்தை பற்றிய சரியான புரிதல் இருந்தால் தான் சரியான கருத்தை வெளியிட முடியும். அதே போல் கேள்வி என்னவென்று புரிந்தால் தான் பதிலைச் (கருத்தை) சிறப்பாகவும் தெளிவாகவும் வெளியிட முடியும். எனவே ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் கேட்டால் போதாது. கேள்விகள் தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேட்கப்பட வேண்டும். அப்போதுதான் தேர்வு முறையில் ஒரு சமத்துவம் உண்டாகும்.

அதேபோல் தற்போதையப் பின்னடைவைச் சீர் செய்ய மத்திய தேர்வாணைய உறுப்பினர்களை நியமிக்கும் மத்திய அரசு உயர் வகுப்பினரை மட்டும் நியமனம் செய்வதைத் தவிர்த்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களையும் தேர்வாணைய உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களுக்கு இடையேயான பாகுபாடுகளைக் களைய முடியும்.

தேர்வு வினாத்தாளில், மொழிச் சமத்துவத்தைக் கடைபிடிப்பதை வலியுறுத்தி, 2012ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்குக் கடிதம் எழுதினார். குடிமைப் பணித் தேர்வுகளைத் தமிழிலும் நடத்த வலியுறுத்தி 2014ஆம் ஆண்டு சென்னையில் மாணவர்களால் பேரணி ஒன்றும் நடத்தப்பட்டது.

மத்திய தேர்வாணைய விசயங்களில் இது போன்ற சீர்திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றால் ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான அநீதிகள் தொடரத்தான் செய்யும்.                            

Pin It