இரண்டு நாடுகளுக்கிடையே போர் என்றால், அது அவ்விரு நாடுகளின் பிரச்சனை என்றுதான் குரல்கள் எழும்.

அண்மையில் மூண்ட ரஷ்ய - உக்ரைன் போரினால், நீட்நுழைவுத் தேர்வுக்கு எதிரான குரல்கள் இங்கே ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்க இங்குள்ள மாணவர்கள் போனார்கள்? என்று பா.ஜ.க வின் அமைச்சர்கள் பேசுகிறார்கள்.

இது பரப்புரை செய்யவோ, விளம்பரப்படுத்திக் கொள்ளவோ உகந்த நேரம் இல்லை. முதலில் அங்குள்ள மாணவர்களைக் காப்பாற்றுங்கள் என்று செவியில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறார் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு.

கர்நாடகாவைச் சேர்ந்த மாணவன் நவீன், ‘பிளஸ் டூ’ தேர்வில் 97% மதிப்பெண்கள் பெற்றும் இங்கே மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் உக்ரைனுக்கச் சென்றுள்ளார். மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவரான அவர் உக்ரைன் போரில் கொல்லப்பட்டுள்ளார். இங்கு அவரது மருத்துவப் படிப்பிற்குத் தடையாய் இருந்தது நீட் நுழைவுத் தேர்வு.

ஏழை, நடுத்தர, கிராமப்புற மாணவர்களால் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு நீட் தேர்வு இருக்கிறது.

தனியார் கல்லூரிகள் 70 லட்சம் வரை கட்டணம் என்ற பெயரிலும், பிற வகையிலும் கொள்ளை அடிக்கிறார்கள், நீட் தேர்வை வைத்து.

அதனால் உக்ரைன், சீனா போன்ற நாடுகளுக்கு 20 அல்லது 30 லட்சம் செலவில் மருத்துவப் படிப்பிற்காகச் சென்று விடுகிறார்கள் மாணவர்கள். அவர்களின் பெற்றோர் வீடு, நிலங்களை விற்றும், கடன் வாங்கியும் தம் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள் என்பது இன்னொரு வேதனை.

நீட் நுழைவுத் தேர்வு வராமல் இருந்திருந்தால் மாணவர்கள் ஏன் படிக்க வெளிநாடு செல்ல வேண்டும்.

“உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்யும் நம் இலக்கு வெகு தூரத்தில் இல்லை... இது ஒட்டுமொத்த இந்தியாவின் குரலாக மாறும்” என்கிறார் தமிழ்நாட்டின் முதல்வர்.

அவரை அடியொற்றி பா.ஜ.க ஆளும் கர்நாடகத்தில் ஒலிக்கத் தொடங்கி விட்டது, அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியின் குரல்!

Pin It