கர்நாடக இதழியலாளரும் முற்போக்கு சிந்தனையாளரும் இந்துத்துவ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் 05.09.2017 அன்று படுகொலை செய்யப்பட்டார். சில சங்பரிவார ஆதரவு இதழ்கள் இது தனிப்பட்ட விரோதம்காரணமாக நடந்த கொலை என்றனர். இன்னும் சிலர் இது நக்சலைட்டுகளின் செயல் என திசைத் திருப்ப முயன்றனர்.தற்பொழுது 6 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். அனைவரும் சங்பரிவார அமைப்பினர். எனினும் இவர்கள் சங்பரிவாரத்தின் முக்கிய அமைப்புகளுடன் கொண்டிருக்கும் தொடர்புகளை மிகவும் திட்டமிட்டு மறைப்பது மட்டுமல்ல; கொலை செய்ய இவர்கள் தீட்டிய திட்டம் எவ்வளவு நுணுக்கமானது என்பதை அறியும் வகையில் சில செய்திகள் வெளியாகியுள்ளன.

கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கீழ்கண்ட ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்:

படுகொலையை அரங்கேற்றியவர்கள் : பரசுராம் (சிறீராம் சேனா), வாக்மோர், நவீன் குமார் (இந்து யுவசேனா ஸ்தாபகர்), சுஜித் குமார் (இந்து ஜனசகுர்த்தி சமிதி), அமோல் காலே (சனாதன சன்ஸ்தா), மனோகர் (சிறீராம் சேனா எடாவே), பிரதீப் (சனாதன சன்ஸ்தா)

காவல் துறை சிறப்பு புலானாய்வுக் குழுவுக்கு இந்த வழக்கின் சூட்சுமத்தை உடைப்பது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. சங்பரிவாரத்தை சேர்ந்த சுமார் 200 பேரின் பட்டியலை தயார் செய்தனர். 1.5 கோடி தொலைபேசி உரையாடல்களை கவனித்தனர். எந்த சிறு துப்பும் கிடைக்கவில்லை. கொலையாளிகள் தொலைபேசி அல்லது அலைபேசியை பயன்படுத்தவில்லை எனும் முடிவுக்கு புலனாய்வு குழு வந்தது.இந்த தருணத்தில்தான் நவீன்குமாரின் ஒரு உரையாடலை கேட்க நேர்ந்தது. தான் கவுரியின் கொலைக்கு பிறகு தலைமறைவு ஆகிவிட்டதாக நவீன் குமார் தொலைபேசியில் பேசியது பதிவானது. ஆனால் மறுமுனையில் பேசியது யார் என்பது தெரியவில்லை. எனவே காவல்துறையினர் உடனடியாக நவீனை கைது செய்யவில்லை. மறுமுனையில் எவரிடம் பேசுகிறார் என்பதை கவனித்தனர். மறுமுனையில் பேசுபவர் நாணயம் போட்டு பேசும் தொலைபேசியில் பேசியதால் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. எனவேதுப்பறியும் குழுவினர் நாணயம் போட்டு பேசும் 126 தொலைபேசிகளை கண்காணித்தனர். அதே சமயத்தில் பேராசிரியர் பகவான் அவர்களை தீர்த்துக்கட்ட நாள் குறிக்கப்பட்டது. அந்த திசையில் நகர்வுகள் வேகமாக நடந்தன. எனவே வேறு வழியின்றி நவீனை கைது செய்ய வேண்டிய அவசியம் காவல்துறைக்கு உருவானது. இதன் மூலம் பகவான் உயிர் காக்கப்பட்டது. நவீன் மூலம் மறுமுனையில் பேசியது சுஜித்குமார் என்பதை குழு கண்டுபிடித்தது. மேலும் ஜனசகுர்த்தி சமிதி எனும் சங்பரிவார ஊழியர் மோகன் கவுடா என்பவரின் திருமணத்திற்கு சுஜித்குமார் வருவதாக இருந்தது. அப்பொழுது சுஜித்தை மடக்க புலனாய்வுக் குழு திட்டமிட்டது. ஆனால் ஒரு காட்சி ஊடகம் முட்டாள்தனமாக நவீன் குமாரின் கைதை வெளிப்படுத்த சுஜித் பதுங்கிவிட்டான். எனினும் வேறு வழியில் சுஜித்குமாரை விரைவில் காவல்துறையினர் கைது செய்தனர்.

சுஜித்குமாரின் ஒரு டைரியை ஆய்வு செய்த பொழுது அதில் பல பெயர்கள் இரகசிய மொழியில் இருந்தன. அந்த இரகசியத்தை உடைத்த குழு அடுத்தபடியாக அமோல் காலேவை கைது செய்தது. அமோலின் டைரி ஒன்றை குழு கைப்பற்றியது. அந்த டைரியில் பல அதிர்ச்சி தரத்தக்க செய்திகள் இருந்தன. இந்தியா முழுதும் இந்துத்துவாவுக்கு எதிராக பேசுபவர்களின் 26 பெயர்கள் பட்டியலில் இருந்தது. இந்து மதத்தைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் தீர்த்து கட்டப்பட வேண்டியவர்கள். கர்நாடகத்தில் மட்டும் அதில் 10 பேர். அதில் கவுரி லங்கேஷ் மற்றும் பகவான்பெயரும் அடக்கம். மேலும் நிடுமாமுடி மடத்தைச் சேர்ந்த வீரபத்திரா சென்னமல்லா எனும் துறவி, வழக்கறிஞர் துவாரகநாத், கல்புர்கியின் நெருங்கிய நண்பர் பேராசிரியர் சந்திரசேகர் பட்டீல் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. இவர்கள் அனைவரும் முற்போக்கு கருத்துகளுக்கு குரல் கொடுப்பவர்கள்.அமோலை பேசவைப்பது புலனாய்வுக் குழுவுக்கு அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. பரசுராமை தாங்கள் கைது செய்துவிட்டோம் என ஒரு தகவலை பொய்யாக கூறினர். அப்பொழுது அமோல் கோபத்துடன் கத்திக்கொண்டு தனது தலையை சுவற்றில் வேகமாக மோதிக்கொண்டான். அந்த செயல் பல உண்மைகளை துப்பறியும் குழுவுக்கு தெரிவித்தது. அதன் பின்னர் மனோகர் எடாவே மற்றும் பிரதீப்பை காவல்துறையினர் கைது செய்தனர்.இறுதியாக பரசுராம் கைது செய்யப்பட்டான்.

விசாரணை செய்யும் இடத்திற்கு கூட்டி வருவதற்கு முன்பே அனைத்து உண்மைகளையும் பரசுராம் கக்கி விட்டான். ஆனால் கவுரியை சுட்டதற்கோ அல்லது கைது குறித்தோ அவனிடம் எவ்வித குற்ற உணர்வும் இல்லை. 2012 ஆம் ஆண்டு புத்தாண்டு அன்று கர்நாடகாமாநிலம் சிண்டகி எனும் வட்டத்தில் திடீரென பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. இந்த பகுதியில் ஏராளமான இசுலாமியர்களும் வாழ்ந்து வந்தனர். ஆனால் எந்த மதமோதலும் இருந்தது இல்லை. இந்துக்களும் இசுலாமியர்களும் ஒற்றுமை யுடன் இருந்தனர். அத்தகைய சூழலில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது பிரச்சனையை ஏற்படுத்தியது. இச்செயலை கண்டித்து இராமசேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பாகிஸ்தான் கொடியை யார் ஏற்றியது என்பதை விசாரித்த காவல் துறையினர் 6 பேரை கைது செய்தனர். அதில் முக்கியக் குற்றவாளி பரசுராம்தான்! ஆம்! சங்பரிவாரத்தின் துணை அமைப்பான இராமசேனாவினரே பாகிஸ்தான் கொடியைஏற்றிவிட்டு, அதற்கு எதிராக அவர்களே ஆர்ப்பாட்டமும் செய்தனர். இது இந்து-முஸ்லிம் மோதலை உருவாக்க அரங்கேற்றிய சதித்திட்டம் என்பதை கூறத்தேவை இல்லை. அதே பரசுராம் தான் கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றான் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளான்.

படுகொலைக்கு துல்லிய வஞ்சகத் திட்டம்

இந்த கொலையில் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களை சேந்த சங்பரிவாரத்தினர் ஈடுபட்டனர். திட்டம் தீட்டியது அமோல் காலே, மனோகர் எடாவே ,பிரதீப் ஆகியோர். அமோல் காலே இந்த பணியை சுஜித்குமாரிடம் ஒப்படைத்தான். சுஜித் குமார் நவீன் குமாரிடம் துப்பாக்கிக் குண்டுகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பையும் கவுரியை சுடும் பாதக செயலை பரசுராமிடமும் ஒப்படைத்தான். கவுரியை சுட்ட 15 நிமிடங்களில் பரசுராம் அந்த துப்பாக்கியை அமோலிடம் ஒப்படைத்தான். அனைவரும் காற்றில் கரைந்தனர். சுமார் 6 மாதங்கள் கழித்து பேராசிரியர் பகவானை கொலை செய்ய அடுத்த திட்டம் தீட்டுகின்றனர். கவுரி லங்கேஷை சுட்ட துப்பாக்கி மூலம்தான் தபோல்கரும் சுடப்பட்டார் என்பது தற்பொழுது நிரூபணம் ஆகியுள்ளது.இந்த கொலைகள் ஒரு கணத்தில் உண்டான கோபத்தின் காரணமாகவோ அல்லது உணர்ச்சி வசப்பட்டோ நடந்தது அல்ல! மாறாக துல்லியமாக திட்டமிட்டு அரங்கேற்றிய படுபாதகச் செயல். இதன் நோக்கம் என்ன? இந்துத்துவா மதவெறி கொள்கைகளை எதிர்க்கும் இந்து மதத்தினரை பகிரங்கமாக கொடூர முறையில் கொல்வது.

இதன் மூலம் எதிர்க்கருத்தை முன் வைப்பவர் களை மிரட்டி வாய்மூடச் செய்வது. இதுவே சங்பரிவாரத்தின் நோக்கம் ஆகும். அதன்படி கொலை செய்யப்பட வேண்டியவர்களின் நீண்ட பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் சங்பரிவாரத்தின் மேல்மட்ட தலைவர்கள் உதவி இல்லாமல் எப்படி சாத்தியம்? இந்தக் கொலைகளை வெளியில் பரவலாக தெரியாத அமைப்புகள் மூலம் அரங்கேற்றுவது ஒரு திட்டமிட்ட வஞ்சக அணுகுமுறை ஆகும். கொலையாளிகள் அடை

யாளம் காணப்பட்டாலும் முக்கிய அமைப்புகள் தப்பித்துக் கொள்ளலாம். இந்த கொலையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் 27 முதல் 39 வயது வரை உள்ளவர்கள்தான்! தொழில்முறை கொலையாளிகள் போல நுணுக்கமாகவும் துல்லியமாகவும் இந்த கொலை நடத்தப்பட்டுள்ளது. மதவெறியும் கொலைத் திறமையும் ஒன்றிணைந்தால் என்ன நடக்கும் என்பதை இத்தகைய கொலைகள் வெளிப்படுத்துகின்றன.கவுரி லங்கேஷ் படு கொலையை துப்பு துலக்கிய புலனாய்வுக் குழு பாராட்டுதலுக்குரியது. அதே சமயம் கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சி இருந்திருந்தால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்காது என்பதை கூறத் தேவை இல்லை.

மகாராஷ்டிராவில் சுட்டுக் கொல்லப்பட்ட இடதுசாரி சிந்தனையாளர் பன்சாரே, கல்புர்கி, கொலையையும் இதே கும்பல்தான் செய்தது என்று கருநாடக காவல்துறை பிடிபட்ட குற்றவாளிகளின் வாக்குமூலத்திலிருந்து உறுதி செய்துள்ளது.

Pin It