அமெரிக்காவின் மிகச்சிறந்த வரலாற்றாசிரியர் ஹோவார்ட் ஜின் அமெரிக்க மக்களின் வரலாறு  (A People's History of United States) என்ற பிரபலமான நூலை எழுதியவர்; அவர் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றியபோதிலும் கறுப்புமக்களின் சமூக உரிமைப்போராட்டங்களிலும் வியட்நாம் மீதான அமெரிக்கயுத்தத்தை எதிர்த்த இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கெடுத்தவர். 1922ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது 88¬_வது வயதில் ஜனவரி 27, 2010ஆம் தேதியன்று கலிபோர்னியா மாநிலத்தின் சான்டா மோனிகாவில் இயற்கையெய்தினார்.

 

சிறு சிறு எதிர்ப்புக்கிளர்ச்சிகள் அவசியமானவை மட்டுமல்ல, அவை நாம் வாழ்வதற்காகவே அமைந்தவை’’ என்று முழங்கிய ஜின், தாம் முழங்கியபடியே வாழ்ந்து காட்டியவர். அவர் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் என்றாலும் மாணவர்களுடன் இணைந்து அமெரிக்க அரசு நடத்திய வியட்நாம்யுத்தத்தை எதிர்த்தும் நீக்ரோக்கள் எனப்படும் கறுப்பு மக்களின் சமூக உரிமைகளுக்காகவும் போராடியவர்.

 

அவருடைய அமெரிக்கமக்களின் வரலாறு’’ என்ற நூலின் நோக்கமானது. “ அறியப்படாத மக்கள் நடத்திய எண்ணிக்கையற்ற போராட்ட நடவடிக்கைகளை’’ வெளிப்படுத்துவதுதான். அமெரிக்காவில் அடிமைகளாக் கப்பட்ட ஆப்ரிக்கர்கள் நடத்திய எழுச்சிமிக்க போராட்டங்களிலிருந்து சமூக உரிமை இயக்கத்தின் சமூகநீதிக்கான போராட்டங்கள் வரையிலும் அந்தநூலில் ஜின் சித்திரப்படுத்தியுள்ளார்.

 

அவர் ஒருசமயம் குறிப்பிட்டார்: “நான் ஏதாவ தொன்றிக்காக நினைவு கூரப்படவேண்டும் என்று நான் விரும்பினால் அது, உலகத்தைப் பற்றியும் யுத்தத்தைப் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் சமத்துவம் பற்றியும் ஒருவேறுபட்ட சிந்தனையை அறிமுகப்படுத் தியதற்காகவும் அந்த வழியில் மென்மேலும் அதிகமான மக்களை சிந்திக்கச்செய்துவருவதற்காகவும் சொத்துக் களையும் ஆயுதங்களையும் கொண்டிருப்பவர்களின் கையில் இதுவரை இருக்கும் அதிகாரம் இறுதியாக மக்களையே சார்ந்திருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் அவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அந்த அதிகாரத்தை மக்கள் பயன்படுத்தினார்கள் என்பதையும் அறியச் செய்து வருவதற்காகவும் தான்’’

 

இரண்டாவது உலகயுத்தத்தின் போது அமெரிக்க ராணுவத்தில் குண்டு வீசுபவராக பணியாற்றி விட்டு ராணுவப்பணியி லிருந்து திரும்பிய ஜின், பட்டதாரி களுக்கான பள்ளிக்கு சென்று ஒரு வரலாற்றாசிரியனுக்குரிய பயிற்சியைப் பெற்றார். அதன் பின்பு அவர் தனது முதல் ஆசிரியப் பணியை அட்லாண்டா நகரில் ஸ்பெல்மான் என்ற கல்லூரியில் ஆரம்பித்தார். வரலாற்று ரீதியாகப்பார்த்தால், அக்கல்லூரி ஒரு சமயத்தில் கறுப்பு இனப்பெண்களுக்கான பள்ளியாக இருந்ததாகும். பணியை ஏற்பதற்காக ஜின்னும் அவரது மனைவி ரோசலினும் 1956 ஆம் ஆண்டு அட்லாண்டாவிற்கு சென்றனர்; அங்கு அப்போது மக்கள் முக்கியமாக மாணவ, மாணவிகள் சமூக உரிமை இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்; இந்நிலைமையில் அவருடைய பெருமைக்குரிய அறிவுக்கூர்மையும் ஆக்கமுள்ள துணிச்சலும் போராடும் மாணவர்களுக்கு ஆதரவானதாகவும் ஏற்றதாகவும் இருந்தது. இதனால் அவரின்பால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் அவரை, தங்களுடைய "அமைதி மாணவர் ஒருங்கிணைப்பு கமிட்டி" (SNCC) யின் அமைப்பாளராக ஆக்கினர். இந்த இயக்கத்தில் அவருடன் அட்லாண்டா நகரைச் சார்ந்த அறிஞர்களும் முக்கியமானவர்களும் பங்கேற்றனர். அந்த இயக்கம், இனவெறிக்கொள்கைக்கு எதிராக நடத்திய மறியலிலும், ஜின் பங்கெடுத்தார். இந்த விஷயத்தில் தடுமாறிப்போன ஸ்பெல்மான் கல்லூரி அதிகாரிகள் ஜின்னை பணியிலிருந்து நீக்கினர்.

 

அங்கிருந்து வெளியேறிய ஜின், போஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். அங்கு அவர் தனது போராட்ட வாழ்கையின் இரண்டாவது அத்தியாயத்தை தொடங்குகிறார். ஜின் அங்கு சென்ற வேளையில் வியட்நாம் மீதான அமெரிக்காவின் போரை எதிர்த்த இயக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அந்தப்பேராட்டத்தின் மையமாக போஸ்டன் பல்கலைக்கழகம் விளங்கியது. வியட்நாம் மீதுபோர் நிகழ்த்த அமெரிக்கப்படைகளை அனுப்பக் கூடாது என (SNCC) கடும் எதிர்ப்பு தெரிவித்தது-. கறுப்பினமக்களின் தலைவரான மார்டின் லூதர் கிங் ஜுனியர், 1965-ல், அமெரிக்க அரசின் செயலை கண்டித்து “ நீண்ட நெடிய இந்த யுத்த இருள் முடிக்கப் படவேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

 

இந்தப்பின்னணியில், ஜின், வியட்நாம் மீதான யுத்தத்தை எதிர்த்து நடந்தபோராட்டமும் மார்டின் லூதர் சிங்கின் அறிக்கையும் எந்தளவிற்கு நியாயமானவை என்பதை விவாதிக்கும் வியட்நாம்: பின்வாங்குவதன் தர்க்க நியாயம் (Vietnam : Logic Of Withdrawal) என்ற நூலை 1967 ல் எழுதினார். அது இடது சாரிப்போக்குடைய நேஷன் என்ற பத்திரிக்கையில் முன்னதாக தொடர் கட்டுரைகளாக வெளிவந்திருந்தது. அவரது நண்பரும் இடதுசாரி சிந்தனையாளருமான நோம் சாம்ஸ்கி பெரிதும் பாராட்டி, ‘‘வியட்னாம் மீதான யுத்தம் நிறுத்தப்பட வேண்டுமென்று உரக்கமாகவும் வெளிப் படையாகவும் ஏற்கக்கூடியமுறையிலும் சொன்ன முதல்மனிதர் ஜின் தான்’’ என்று கூறினார்.

 

சமூக உரிமை இயக்கமும் யுத்த எதிர்ப்பு இயக்கமும் ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கியத்துவத்தை அவருக்கு கற்றுக் கொடுத்தன. இந்தப்பின்னணியில் தான் மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து பல சிறப்பான நூல்களை எழுதினார். அவைகளில் ஒத்துழை யாமையும் ஜனநாயகமும்: சட்ட - ஒழுங்கு குறித்த 9 குறை பாடுகள் (1968) (Disobedience and Democracy : Nine Fallacies on Law and Order )  அன்றாட வாழ்க்கையில் நீதி (1977) (Justice in Every day Life )  வல்லமை அரசாங்கங்களால் ஒடுக்க முடியாது (2006) (A Power Governments Can Not Suppress )  ஆகிய நூல்கள் அடங்கும் ஜின் எழுதிய அமெரிக்கமக்களின் வரலாறு நூல்குறித்து நோம் சாம்ஸ்கி கருத்து தெரிவிக்கையில்" இந்நூல் ஒரு தலைமுறை முழுவதன் சிந்தனை உணர்வையே மாற்றி விட்டது" என்று பாராட்டினார்.

 

1960 ஆம் ஆண்டுகளின் பதிய சமூக வரலாற்றாசிரியர் களின் சிந்தனைகளை வெளிக் கொணர்ந்த இந்த நூல் 1980-ல் எழுதப்பட்டது. இந்த நூலின் பிரதிகள் 20 லட்சத்திற்கு அதிகமாக விற்றுள்ளன இன்னும் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

 

"அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உத்வேகம், ஒரு குறிப்பிட்ட நேரங்களில் மதிப்பு மிக்க தாகும், அதனை எப்போதும் உயிர்த்துடிப்புடன் வைத்திருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் தவறுகள் நடக்கும் போது அது அடிக்கடி பயன்படுத்தப்பட வேண்டும்" என்று ஜின் கூறுவார்.

ஒரு ஆண்டுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா குறித்து ஜின் பேசினார். ஒபாமா, தனது வாக்குறுதிகளுக்கு மாறாக இராக் போன்றநாடுகளிலும் உலகின் ஏனைய பல பகுதிகளிலும் அமெரிக்கராணுவ பலத்தை பயன் படுத்துவதை ஜின் கடுமையாக எதிர்த்தார், எனவே அவர் "ஒபாமாவை தேர்ந்தெடுத்த மக்களாலும் அவர்குறித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் மக்களாலும் அவர் விரட்டப்படவேண்டியவராயிருக்கிறார். அவருக்கு ஒரு விஷயத்தை சொல்வதில் நாம் ஒன்று படவேண்டும்; அது என்ன வெனில். உலகத்தில் எந்த வொருகாரியத்தையும் செய்து முடிப்பதற்கு படைகளை பயன்படுத்தும் ராணுவ நோக்குடன் செயல்படும் தவறான போக்கில் போகிறீர்கள்; இந்த வழியில் போனால் எந்தக் காரியத்தையும் நாம் முடிக்க மாட்டோம் உலகத்தில் வெறுக்கத்தக்க நாடாகவே நாம் இருப்போம்" என்றார்.

 

அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்புகூட ஒபாமா பற்றி கூறினார். அப்போது அவர் "ஒபாமாவை சரியான வழியில் திருப்பி விடுவதற்கு தேசிய அளவிலான இயக்கம் இல்லாவிட்டால் அவர் ஒரு அபாயகரமான ஜனாதிபதியாக செயல்படுவார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்." என்று குறிப்பிட்டார்.

 

ஒபாமா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கட்டத்தில் முதல் தடவையாக பேசவிருந்த சமயத்தில் தான் ஜின் மரணமடைந்தார். என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் அந்தக்கூட்டத்தில், அமெரிக்க மக்கள் வரலாற்றாசிரியனுக்கு புகழஞ்சலி செலுத்துவார் ஒபாமா, என எதிர்பார்த்தேன். ஆனால் ஒபாமா, அவ்வாறு செய்யவில்லை.

 

 நன்றி Front Line, 26-1-2010

-விஜய் பிரசாத்

Pin It