இன்றைய மானுட உலகம் பெரும்பெரும் நோய்களின் தாக்கத்தால் நொந்து நூலாம்படை ஆகிக் கிடக்கிறது. ‘சர்க்கரை வியாதி’ என்று பிரபலம் அடைந்திருக்கிற நீரழிவு நோய், ஆஸ்துமா, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், அளவுக்கு அதிகமான போதைப் பழக்கத்தால் உண்டாகும் கல்லீரல் நோய்கள், இப்படி உடலின் உள்வியாதிகள் மனித இனத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றன.

 

‘வரவு அறிந்து செலவுசெய்’ என்பது முன்னொரு காலத்தில் புழங்கிய முக்கியமான முதுமொழி. உணவுத் தேவையை எளிமைப்படுத்தி, உல்லாச விழாக்களை மட்டுப்படுத்தி, ஆடம்பர விழாக்களை அறவே அகற்றி வருவாய் வரம்புக்குள் செலவினத்தை நிலைநிறுத்தினர். உண்பதற்காக உழைப்பதும் உழைப்பதற்காக உண்பதும் என்ற வாழ்க்கை முறை முன்னேற்றமற்ற முறையில் சுழன்று கொண்டிருந்தது. அன்று பெரும் பெரும் நோய்கள் தாக்கியதில்லை. தாக்கினாலும் செலவு குறைந்த மூலிகை மருத்துவம் குணப்படுத்தியது.

 

ஆனால் இன்று நோய்களின் தாக்குதலும் மருத்துவத்துக்கான செலவினமும் ஒன்றை ஒன்று மிஞ்சி நிற்கின்றன. உயர் நடுத்தர மக்கள் கூட இன்றைய நிலையில் மருத்துவச் செலவு செய்ய அஞ்சுகின்றனர். காரணம், மருத்துவக் கம்பெனிகள் எல்லாம் ஏகபோக முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டு, லாபநோக்கத்தை மட்டுமே மையமிட்டு இயங்குகின்றன. புதிய பரிசோதனைக் கருவிகளும் கூட அந்த லாப நோக்கத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. முன்பெல்லாம் கண்களையும் நாக்கையும் விரல் நகங்களையும் பார்த்து நோயைக் கண்டுபிடித்த மருத்துவர்கள் இப்போது சாதாரணக் காய்ச்சலைக் கண்டு பிடிப்பதற்குக் கூட விஞ்ஞானக் கருவிகளின் துணையை நாடுகின்றனர். இந்தப் பொருளியல் சுரண்டலை முறியடிக்க வேண்டிய தேவை மனித குலத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்குத் துணை செய்யும் விதமாகப் பிரசுரமாகி இருக்கிறது. ‘’உடல் நலம் உங்கள் கையில்’’ என்ற மருத்துவ நூல்.

 

மரபுமுறை அக்குபஞ்சர் அமைப்பின் மாநிலச் செயலாளரும் தமுஎகச மாநிலக்குழு உறுப்பினருமான அ. உமர்ஃபரூக் அவர்களே இந்த நூலின் ஆசிரியர். ஏற்கனவே, ‘உடலின் மொழி, ‘‘உணவோடு உறவாடு’ என்ற நூல்களை இயற்றி மனித குலத்துக்கு சேவை செய்திருக்கிறோர். இப்போது பிரசுரமாகி இருக்கும் இந்த நூல் ஒவ்வொரு தனி மனிதரும் மருத்துவராகி சுயசேவை செய்துகொள்ள முடியும் என்று நிரூபிக்கிறது.

பிரபஞ்சம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது. ‘’ஐம்பெரும் பூதத்து இயற்கை’’ என்று புறநானூறு பிரகடனப்படுத்துகிறது. ஒவ்வொரு பூதத்துக்கும் ஒரு நிறம், ஒரு சுவை, ஒரு உணர்வு இருக்கிறது. உதாரணத்துக்கு ‘நீ’ என்ற பூதம்! அதன் நிறம் சிவப்பு; குணம் வெப்பம்; சுவை காரம்; உடலில் சிவப்புத் திட்டுகள் தோன்றினாலோ, உடம்பில் உஷ்ணம் அதிகரித்தாலோ நெருப்பு என்ற பூதத்தை (இதை மூலகம் என்கிறார் நூலாசிரியர்) சீர்படுத்த வேண்டும். நெருப்பு மூலகத்தின் உள்ளுறுப்பாகிய இதயத்தின் இயக்கத்தில் ஏற்பட்டிருக்கிற கோளாறைச் சரி செய்ய வேண்டும்.

நம் உடம்பில் பிரதானமாக ஐந்து உள்ளுறுப்புக்கள் இருக்கின்றன. 1. நுரையீரல், 2. இதயம், 3.சிறுநீரகம், 4. மண்ணீரல், 5. கல்லீரல். அவற்றின் துணை உறுப்புக்கள். 1. பெருங்குடல். 2. சிறுகுடல்,

3. சீறுநீரப்பை, 4. இரைப்பை, 5. பித்தப்பை

 

இந்த உறுப்புக்களின் பிரதிபலிப்பாய் அமைந்துள்ள வெளி உறுப்புக்கள் :- 1. இதயம் - நாக்கு 2. மண்ணீரல் _ உதடுகள், 3. நுரையீரல் -_ மூக்கு. 4. சிறுநீரகம் -_ காதுகள், 5. கல்லீரல் - கண்கள்! கண்நோய்க்குக் கல்லீரல் சீர்கேடே மூலகாரணம்! சிறுநீரகச் சீர்«டு காதுகளின் செவிட்டுத் தன்மைக்குக் காரணமாகிறது. சிறுநீரகத்தின் பூதம் அல்லது மூலகம் ஆகிய நீர், உடலின் எந்தப் புள்ளியில் தாக்கம் கொள்கிறது என்று கணித்து, தொடு சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். உடலின்புற மாறுதலைச் சரியாகப் புரிந்து உள்ளுறுப்புக்களின் சீர்க்கேட்டைக் கணிக்கலாம். பிறகு தொடு சிகிச்சை மூலம் புள்ளிகளின் இயக்கப் பாதையில் அதிர்வை உண்டாக்கி நோயைக் குணப்படுத்தலாம்.

 

உடலில், மேல்தோல் இன்னோர் முக்கிய உறுப்பாகும். உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தோலில் படியும் போது, அதிலிருந்து பிரபஞ்ச சக்தியை உள்வாங்குகிறது. உடல், தோலையும் உள் உறுப்புகளையும் இணைக்கும் நரம்பு மண்டலத்தின் மூலம் பிரபஞ்ச சக்தி உள்வாங்கப்படுகிறது. அந்தப் பிரபஞ்ச சக்தியின் பயணப்பாதையில்தான் ‘அக்கு’ புள்ளிகள் நிலைகொண்டுள்ளன.

 

அக்கு புள்ளிகள் நரம்பு மண்டலத்தில் நூற்றுக் கணக்கான இடத்தில் இருக்கின்றன. சிகிச்சை செய்ய விரும்பும் ஒருவர் இந்த அனைத்துப் புள்ளிகளையும் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மிக முக்கிய மானவை பத்துப் புள்ளிகள் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஷிறி புள்ளிகள் 5. லிஹி புள்ளிகள் 3 ரி. புள்ளிகள் 2. இந்தப்பத்துப் புள்ளிகளையும் உடல் உபாதையைப் பிரதிபலிக்கக் கூடிய மூலகங்களையும் புரிந்து கொண்டால் ஒவ்வொருவரும் மருத்துவரே என்று பிரகடனப் படுத்துகிறது இந்த நூல்!

 

உடலின் மிக முக்கியமான உறுப்பு மூளை என்கிறது. ஆங்கில மருத்துவம். ஆனால் இந்த நூலாசிரியர் அதை நிராகரிக்கிறார். ’ஐந்து பிரதான உறுப்புக்களின் செயல்வினைப் பிரதிபலிப்பே மூளை’ என்கிறார். மூளை தனித்து இயங்கும் உறுப்பு அல்ல.

இந்த நூலில் வரும் இன்னொரு முக்கிய விஷயம் மனம் பற்றிய கருத்தாய்வு ஆகும்! ஒரு மனிதன் அதிக அளவில் போதைப் பொருளை உட்கொள்கிறான். கல்லீரல் பாதிப்படைகிறது. நாவு குழறுகிறது. குழப்பமான சிந்தனையோட்டம் ஏற்படுகிறது. ‘மனம் குழம்பி விட்டான்’ என்கிறோம். மனம் என்பது, பிரதான உறுப்புக்களின் இயக்கத்தால் உண்டாகும் உணர்வுகளின் பிம்பமே!

 

இந்த நூல் மிக முக்கியமான விஞ்ஞானக் குறிப்பேடு ஆகும். இயற்கை பற்றியும் அதன் ஒரு பகுதியாகிய உடல் பற்றியும் குறிப்பிடுகிறது. சக்திகளின் உள்ளேற்றம், கழிவுகளின் வெளியேற்றம் என்ற இயக்கவிதிகளையும் புரிந்து கொண்டால் நோயே இல்லை என்று பிரகடனப்படுத்துகிறது.

-தேனி சீருடையான்

Pin It