கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

போர் நிறுத்த உடன்பாட்டின் எதிர் காலம் பெரும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. இன்று யுத்த நிறுத்தம் ஒன்று அமுலில் உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு ஓர் மட்டுப் படுத்தப்பட்ட அளவிலான யுத்தம் நடந்து கொண்டிருக்கின்றது என்பதே கள யதார்த்தமாகும்.

ஒருபுறத்தில் யுத்த நிறுத்த மீறலானது பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது போன்ற வகையில் மேற் கொள்ளப்படுகின்றது. குறிப்பாக, மட்டுப் படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை மற்றும் தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீதான தாக்குதல் என்ற ரீதியில் சிறிலங்கா விமானப்படை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதே சமயம், நார்வேத் தரப்பு சமாதானப் பேச்சு வார்த்தைகள் தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில், அடுத்த கட்ட முயற்சிகள் எதனையும் மேற் கொள்ளப் போவதில்லை என அறிவிப்புச் செய்யும் நிலை நோர்வேத் தரப்பிற்கு ஏற்பட்டுள்ளது.

இத்தகையதொரு நிலையில், அடுத்த கட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட போர்தானா? அது எப்பொழுது? என்ற கேள்வியே பரவலாக உள்ளது. வேறு விதமாகக் கூறுவதனால், இரு தரப்பினரும் யுத்தத்திற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டுவிட்டனர் இறுதிக் கட்டத் தயார்ப்படுத்தலில் உள்ளனர் எனக் கூறின் மிகையாகாது.

நார்வேத் தரப்பும் இதனைத் தெளிவாகவே விளங்கிக் கொண்டுள்ளது. இந்நிலையிலேயே நார்வே ஏற்பாடு செய்த ஒஸ்லோச் சந்திப்புத் தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவசர அவசரமாக யுத்த நிறுத்த உடன்பாடு தொடர்பாக ஐந்து கேள்விகளை நோர்வே அரசு இரு தரப்பிடமும் முன் வைத்துள்ளது. இவ் ஐந்து கேள்விக்குமான பதில்கள் மூலம் யுத்த நிறுத்த உடன்பாட்டைத் தொடர இருதரப்பும் இணங்குகின்றனவா? என்பதை மீண்டும் ஒரு தடவை உறுதி செய்வதே நார்வேத் தரப்பின் முயற்சியாகும்.

இம் முயற்சியினால் பயன் ஏதும் உண்டா? என்பதும் கேள்விக்குரியதொன்றே. ஒப்பந்தங்கள் மூலம் இணக்கப்பாடு காண்பதும், பின்னர் அவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் சிறிலங்கா அரசாங்கத்தின் நீண்டகாலச் செயற்பாடகும். இதற்கு ஏற்கனவே, செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாடு, ஜெனீவா இணக்கப்பாடு என்பன அண்மைய உதாரணங்களாகும். இவற்றில் சிறிலங்கா அரச தரப்பினருடன் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் தொடர்புபட்டிருந்தது. ஆனால், சிறிலங்கா அரசு அதனை அமுல் செய்யவில்லை.

ஆனால், சிறிலங்கா ஆட்சியாளர்கள் இவ்விதம் நடந்து கொள்வது தற்போதுதான் என்பதல்ல. அவர்களிடம் இது தொடர்பாக நீண்ட வரலாறு உள்ளது. தமிழர் தரப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை அவை என்றுமே நிறைவு செய்ததில்லை. இந்நிலையில் தற்பொழுது நார்வே விடுத்துள்ள கேள்விக்குச் சிறிலங்கா அரசு இணக்கமான பதில் அளிப்பதினால் விவகாரத்தில் முன்னேற்றம் கண்டுவிட வாய்ப்பில்லை. ஆகையினால், தமிழர் தரப்பு இதற்குப் பதில் அளித்தாலும் ஒன்று தான் பதில் அளிக்காது போனாலும் ஒன்றுதான். சிறிலங்கா அரசு இன அழிப்புச் செயலை நிறுத்திக் கொள்ளப் போவதில்லை.

இன்று போர் நிறுத்த உடன்பாடு கேள்விக் குள்ளாகியுள்ளமைக்கும், சமாதானப் பேச்சு வார்த்தைகள் முறிவடைந்து போயுள்ளமைக்கும் சிறிலங்கா அரசாங்கம் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட மற்றத் தரப்பை விடுதலைப் புலிகளைத் தமிழர் தரப்பைச் சமதரப்பாகக் கருதத் தயாராக இல்லாமையே காரணமாகும்.

இலங்கையில் இனப்பிரச்சினை பெரும் ஆயுதப் போராட்டமாகக் கூர்மையடைந்தமைக்கும், பெரும் இரத்தம் சிந்த வேண்டி வந்தமைக்கும் பெளத்த சிங்களத் தலைவர்கள் ஏனைய இனத்தினர், மதத் தினரைச் சம அந்தஸ்துடன், சம மரியாதையுடன் நடத்தத் தவறியதே காரணமாகும்.

இதன் விளைவாகவே, தமிழர்கள் தமது தாயகத்தில் சுதந்திரமாகவும், சுய கெளரவமாகவும் வாழ்வதற்காகப் போராட்டத்தினை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. ஆனால், சிறிலங்கா ஆட்சியாளர்கள் பெரும் விலை கொடுத்த பின்பும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. நெருக்கடி நிலை ஒன்று ஏற்பட்ட போது விடுதலைப் புலிகளைச் சமதரப்பாக ஏற்று யுத்த நிறுத்த உடன்பாட்டைச் செய்து கொண்ட சிறிலங்கா அரச தரப்பானது தன்னை ஓரளவு நிலைப்படுத்திக் கொண்டதும் விடுதலைப் புலிகளையோ, தமிழ் மக்களையோ சமதரப்பாக ஏற்று இனப் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைக் காணத் தயாராக இல்லை.

அது மட்டுமன்றி, விடுதலைப் புலிகளைச் சமதரப்பாக ஏற்றுப் பேச்சுக்களை நடத்தப் போவதில்லை என்றும், கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தவறானது எனவும் விடுதலைப் புலிகளைச் சமதரப்பாக ஏற்றுக் கொள்வது ஏற்கத்தக்கதல்ல எனவும் தற்போதைய அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது. யுத்த நிறுத்த உடன்பாடு தற்போது கேள்விக் குள்ளாகியுள்ளமைக்கும் அரசாங்கத்தின் இத்தகைய நிலைப்பாடே முக்கிய காரணமாகும். முதலில் சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பில் இருந்தே விடுதலைப் புலிகளைச் சமதரப்பாக ஏற்றுக் கொண்டது தவறு என்றும், யுத்த நிறுத்த உடன்பாடு புலிகளுக்குச் சாதகமானதொரு நிலையில் உருவாக்கப்பட்டுள்ள தென்றும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. தற்பொழுது படிப்படியாகப் பெளத்தலி சிங்கள அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள் வரையில் இது ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாக மாறியுள்ளது.

அவ்வாறானால், ஒரு கேள்வி தவிர்க்க முடியாததாகின்றது. அதாவது 2002 இல் யுத்த நிறுத்த உடன்பாடு கைச்சாத்தாகிய போது சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பு உடனடியாக இதனை ஏன் அன்று சர்ச்சைக்குரிய விவகாரமாக எழுப்பவில்லை என்பது. இதற்கு ஒரே பதில் அன்று அக்கேள்வியை உரக்கக் கூறும் அளவிற்குச் சிறிலங்கா ஆயுதப் படைத் தரப்பிடம் திராணி இருக்கவில்லை.

அதாவது, விடுதலைப் புலிகள் இயக்கம் 2001ல் ஒரு தலைபட்சமான யுத்த நிறுத்த அறிவிப்புச் செய்திருந்த வேளையில் தாக்குதல்களை நடத்த முடிந்ததே தவிரப் புலிகள் போரை எதிர் கொள்ளத் தயாராக இருந்த வேளையில் அதனிடம் ஒரு போரை எதிர் கொள்ளவோ , நடத்தவோ தென்பு இருக்கவில்லை.

அதிலும் புலிகளின் தீச்சுவாலை முறியடிப்புச் சமர், கட்டு நாயக்க விமானத்தளத் தாக்குதல் என்பனவற்றால் பெரிதும் நொடித்துப் போயிருந்த சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பிற்கு போர் நிறுத்தம் ஒன்று வந்தாலே போதும் என்ற உணர்வே இருந்தது. சிறிலங்காப் படைத் தளபதிகள் குரல் எழுப்ப முடியாது நொடித்துப் போயிருந்தார்கள். இது தற்போது குண்டுத் தாக்குதலில் படு காயமடைந்து சிகிச்சைக்கு உள்ளாகியிருக்கும் தற்போதைய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் பொருந்தும்.

ஆனால், நான்காண்டு போர் நிறுத்தம் அவர்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது. 2002இல் தேவைப்பட்ட போர் நிறுத்தம் அவர்களுக்கு தற்பொழுது தேவையாக இல்லை. இதே போன்றே தீவிர பெளத்த - சிங்கள அடிப்படைவாதிகளான புதிய ஆட்சியாளருக்கும் நிறுத்தம் என்பது அவசியமானதாக இல்லை. தமிழர் தரப்பைச் சமதரப்பாக மதித்துச் செயற்படுவதா? என்று மேலாதிக்க உணர்வே அவர்களிடம் தற்பொழுது வெளிப்பட்டு நிற்கின்றது.

இந்நிலையில்தான் தமிழர் தரப்பையும் / விடுதலைப் புலிகளையும் சமதரப்பாக ஏற்றுக்கொண்டு செய்யப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு இன்று கேள்விக்குள்ளானதாக மாறியுள்ளது. ஆனால், சர்வதே அனுசரணையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் இன்று புறந்தள்ளுவதற்கும், குறை காண்பதற்கும் தனியாக சிறிலங்கா அரதசாங்கத்தின் ஏதேச்சதிகாரமான தீர்மானங்கள் மட்டும்தான் காரணம் என்பதல்ல. சர்வதேச நாடுகள் குறிப்பாக, மேற்குலக நாடுகள் இனப் பிரச்சினை விடயத்தில் கடைப்பிடித்த சமச்சீரற்ற, ஒரு தலைப்பட்சமான அணுகுமுறையும், இரட்டைத் தனமான நிலைப்பாடும் காரணமாமகும்.

மேற்குலக நாடுகளைப் பொறுத்து இனப் பிரச்சினை விவகாரத்தில் ஏற்பாட்டாளர்களாகச் செயற்பட்ட நார்வேத் தரப்பைத் தவிர ஏனைய முன்னணி நாடுகள் எவையும் அதாவது, சிறிலங்கா அரசியலில் அழுத்தத்தைப் பிரயோகிக்கத்தக்க மேற்குலக நாடுகள் அனைத்துமே இரட்டை அணுகு முறையைக் கடைப்பிடித்தன. இரு தரப்பையும் சமதரப்பாக நடத்த வேண்டும் என்பதையும், விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளில் உள்ள நியாயப்பாட்டையும் ஓரளவேனும் நார்வே புரிந்திருந்தது. ஆனால் மேற்குலகம் அதைப்புரியவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இதனால், சிறிலங்கா அரசு தனது அபிலாசைக்கு ஏற்ற விதத்தில் இனப் பிரச்சினையை நகர்த்திச் செல்ல அவை வாய்ப்பைக் கொடுத்தன.

போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்தாகிய போது அதனை வரவேற்ற மேற்குலக நாடுகள் விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு வார்த்தைகளை நடத்தி இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காணத் தாம் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தன.

அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்குலக நாடுகள் தமது நாடுகளின் அரசியல் அமைப்பு முறை பின்பற்றப்படக் கூடிய மாதிரிகளாகக் கொள்ளத்தக்கவை எனவும் கருத்துக்களை வெளியிட்டன. ஆனால், இத்தகைய கருத்துக்களை வெளியிட்ட மேற்குலக நாடுகள் ஒரு தலைப் பட்சமாகப் படிப்படியாக விடுதலைப் புலிகள் அமைப்பு மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் அதனைப் பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும், அதன் மீது தடை விதிக்கவும் முற்பட்டன.

இது ஒரு வகையில் சிறிலங்கா அரசின் நடவடிக்கையை ஒத்ததாகவே இருந்தது. அதாவது விடுதலைப் புலிகளைப் படிப்படியாக சமதரப்பு என்ற நிலையில் இருந்து ஓரம் தள்ளுவதாக இருந்தது. இதற்கான முதல் நகர்வினை அமெரிக்கா அரசே மேற் கொண்டதெனலாம்.

நார்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் 2002 நவம்பரில் சிறிலங்கா அரசு, விடுதலைப் புலிகள், நார்வே உள்ளிட்ட சிறிலங்காவிற்கு உதவும் இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் நிதி அமைப்புக்களும் கூடிப் பேச்சுக்களை நடத்தி ஒரு பிரகடனத்தையும் “ஒஸ்லோப் பிரகடனம்” வெளியிட்டன.

ஆனால் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் (2003 ஏப்ரலில்) அமெரிக்க அரசு வாஷிங்டனில் கூட்டிய சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் நாடுகளின் டோக்கியோ மாநாட்டிற்கான முன்னேடிச் சந்திப்பில் புலிகளைப் புறக்கணித்தது. இது புலிகள் இயக்கத்தைச் சமதரப்பு என்ற நிலையில் இருந்து புறம் தள்ளியதாகியது.

அமெரிக்கா இதற்குக் கூறிய விளக்கமானது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. விடுதலைப் புலிகள் இயக்கம் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட அமைப்பு. ஆகையால் அதன் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக்கூறிய காரணம் வெளிப்பார்வைக்கு ஒப்புடையதாக இருக்கலாம். ஆனால், அமெரிக்கா, விடுதலைப் புலிகள் பங்கு பற்றுவதை விரும்பியிருப்பின் அதற்கேற்ற வகையில் இச் சந்திப்பை வேறு எங்காவது ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால், அமெரிக்கா அதில் கவனம் செலுத்தவில்லை.

இதன் விளைவு, விடுதலைப் புலிகள் டோக்கியோ மாநாட்டைப் புறக்கணிக்கக் காரணமாகியது. ஆனால், சிறிலங்கா அரசு பங்கு பற்றிய டோக்கியோ மாநாட்டில் விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் தீர்மானங்களை நிறை வேற்றியமையானது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு பொருட் படுத்தத்தக்கதல்ல என்பது போன்றதொரு தோற்றத்தை வெளிப்படுத்தியது. இது சிறிலங்கா அரசாங்கம் மேலும் மேலும் போர் நிறுத்த உடன் பாட்டையும் சமாதானப் பேச்சு ர்த்தைகளையும் சிதறடிப்பதற்குக் காரணமாகியது.

இத்தகையதொரு நிலைப்பாட்டை இறுதியில் ஐரோப்பிய ஒன்றியமும் எடுக்க முற்பட்டதன் விளைவே இன்று போர் நிறுத்த உடன்பாடும், சமாதானப் பேச்சு ர்த்தைகளும் உச்சக்கட்ட நெருக்கடிக்குச் செல்வதற்குக் காரணமாகும். அதாவது சீரற்ற வகையில் சம தரப்பாக இரு தரப்பையும் நோக்க மேற்குலக நாடுகள் தயாராக இல்லாமையே இன்றைய நெருக்கடிக்குக் காரணமாகும்.

இத்தனைக்கும் வாஷிங்டன் சந்திப்பில் தாம் ஓரங்கப்பட்டதே விடுதலைப் புலிகள் தம்மைச் சமதரப்பாக ஏற்றுக்கொள்ளாத எந்த வொரு தரப்புடனும் தாம் பேசப் போவதில்லை என எச்சரித்திருந்ததோடு, அதற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் டோக்கியோ மாநாட்டையும் புறக்கணித்திருந்தனர். ஆனால் இதனை மேற்குலக நாடுகள் பொருட்படுத்தியதாக இல்லை.

மேற்குலவர்களின் இந்நிலைப்பாடானது ஒருபுறத்தில் அவற்றின் முரண்பட்ட அணுகுமுறையை வெளிப்படுத்திய அதேவேளை மறுபுறத்தில் சிறிலங்கா அரசிற்கும் பூரண தெம்பூட்டுபவையாகவும் இருந்தன. அதாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்துவதன் மூலம் இந்நாடுகள் புலிகள் மீது நிர்பந்தத்தைத் திணிக்க முயன்றன. இது சிறிலங்கா அரசாங்கத்திற்குத் துணிவையும் நம்பிக்கையையும் கொடுத்தது. விடுதலைப் புலிகளையும் தமிழர் தரப்பையும் சமதரப்பாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்த உதவியது.

ஆனால், விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துக் கொண்ட மேற்குலக நாடுகள் சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் இனப்பிரச்சினைக்கு தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தித் தீர்வு காண வேண்டும் எனக் கோரியிருப்பினும், சிறிலங்கா அரசாங்கத்திற்கு அது அழுத்தம் கொடுப்பதாக அமைந்திருக்கவில்லை. மாறாக, மேற்குலக நாடுகளின் முரண்பாடனா அணுகு முறை அதற்கு சாதகமாகவே இருந்தது.

ஆனால், விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்துக் கொண்ட மேற்குலக நாடுகள் சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் இனப்பிரச்சினை தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தித் தீர்வுகாண வேண்டும் எனத் கோரியிருப்பினும், சிறிலங்கா அரசாங்கத்திற்கு அது அழுத்தம் கொடுப்பதாக அமைந்திருக்கவில்லை. மாறாக, மேற்குலக நாடுகளின் முரண்பாடான அணுகுமுறை அதற்கு சாதகமாகவே இருந்தது.

அதாவது, விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கையில் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து அவர்களுடன் ஏன் பேசவேண்டும்? மாறாகப் புலிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனின் அவர்களை ஏன் மேற்குலகம் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்? இவை மேற்குலகம் உருவாக்கிய முக்கிய வினாவாகி இன்று சிறிலங்காவில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்கள் மேற்குலகத்தைப் பின்பற்றிப் புலிகளைச் சிறிலங்கா அரசாங்கம் தடை செய்ய வேண்டும் எனக் கோருவதில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

மேற்குலகத்தவரின் நடவடிக்கைகள் இவ்வாறு விடுதலைப் புலிகளைச் சமதரப்பு என்ற நிலையில் இருந்து ஓரம் தள்ள முற்பட்டமையானது, விடுதலைப் புலிகளைச் சமதரப்பாக வைத்து சமாதான முயற்சிகளை முன்னெடுத்த நோர்வேத் தரப்பின் செயற்பாடுகளும் பெரும் பாதிப்பிற்குள்ளாகின.

அதாவது, சிறிலங்கா அரசு மற்றும் பேரினவாதச் சக்திகள் நோர்வேயின் அணுகு முறையைத் தீவிரமாகக் கண்டனம் செய்தன. இக் கண்டனமானது தற்போதைய நிலையில் நார்வேயை ஒரு எதிரி நாடு எனப் பிரகடனப்படுத்த வேண்டும் எனக் கோரும் அளவிற்குச் சென்றுள்ளது. அதாவது, நார்வேயைச் சமாதான முயற்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு சிறிலங்கா ஆட்சியாளர்கள் முனைப்புடன் செயற்படும் அளவிற்கு நிலைமையைக் கொண்டு சென்றுள்ளது.

அதனையும் மீறி நார்வேத் தரப்பு நடு நிலைமையுடன் முன்னெடுக்கும் செயற்பாடுகள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் எனவும், நார்வே அரசு புலிகளை ஆதரித்து வளர்த்து வருவதாகவும் குற்றச் சாட்டுக்களைச் சுமத்தும் அளவிற்கு நிலைமையை மோசமடையச் செய்துள்ளது. நார்வேயின் சமாதான முயற்சிக்கு தமது ஆதரவு உண்டு என்ற மேற்குலகின் கூற்றுக்கள் மட்டுமே நார்வே சிறிலங்காவால் தூக்கி ஏறியப்படாது பாதுகாக்கும் ஒன்றாகவுள்ளது.

ஆனால், அடிப்படையில் சமாதான முயற்சிகளில் ஏற்பாட்டாளராகப் பங்கேற்கும் நார்வேக்குத் தமது பூரண ஆதரவு உண்டு என மேற்குலக நாடுகள் கூறிக் கொண்டாலும் அவற்றின் ஒத்துழைப்பு நார்வேக்குக் கிடைக்கப் பெற்றதாக இல்லை. விடுதலைப் புலிகள் அமைப்பைச் சர்வதேச நாடுகள் குறிப்பாக, மேற்குலக நாடுகள் தனிமைப்படுத்த எடுத்த முயற்சிகள் விடுதலைப் புலிகளை மட்டுமல்ல, நோர்வே அரசையும் தனிமைப்படுத்தியது என்பதே உண்மையாகும்.

நார்வே அரசும் இதனை ஓரளவு விளங்கிக் கொண்டே உள்ளது. அதன் வெளிப்பாடே ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது தடை விதிப்பது குறித்து ஆராய்ந்த போது நார்வே அரசு அதற்கு மாறாக அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியிருந்தது. சமாதான முயற்சிகளுக்குப் பாதகமாகலாம் என எச்சரித்தும் இருந்தது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் அதனைக் கருத்தில் கொள்ளாததினால் நார்வே எதிர்பார்த்தது போலவே சமாதான முயற்சிகளை மட்டுமல்ல, யுத்த நிறுத்த உடன்பாடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

இனப் பிரச்சினைத் தீர்வில் மேற்குலகம் நீதியுடன் செயலாற்றுவதெனில் யுத்த நிறுத்த உடன்பாடு செய்யப்பட்டதில் இருந்து நீதியான அணுகு முறையைக் கையாண்டு இருத்தல் வேண்டும். குறிப்பாக, யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டை அவை எடுத்திருக்க வேண்டும். அடுத்ததாக குறைந்த பட்சம் சுனாமி புனர்வாழ்விற்கான பொதுக் கட்டமைப்பின் அமுலாக்கத்தையும் ஜெனீவாப் பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டையாவது அமுலாக்க அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகித்திருத்தல் வேண்டும்.

ஆனால், மேற்குலகம் அதில் அக்கறை காட்டவில்லை. விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களைப் பிரயோகித்தல் என்ற ரீதியில் புலிகளைச் சமதரப்பு என்றதிலிருந்து இறக்கும் வகையிலேயே அவை தமது இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுத்தனர். இம் முயற்சி நோர்வேயின் சமாதான முயற்சிகளையும் தோற்கடிக்கும் ஒன்றாக மாறியது. அதாவது, மேற்குலகின் நடவடிக்கை நார்வேயை வெளியேற்றச் சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு பெரிதும் உதவி அளிப்பதாக இருந்தது.

அத்தோடு விடுதலைப் புலிகளைச் சம தரப்பாக ஏற்க மறுக்கும் சிறிலங்கா அரசிற்கு அவர்களின் செயற்பாடுகள் வழங்கிய ஒத்துழைப்பு யுத்த நிறுத்த உடன்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி மீண்டும் ஒரு யுத்தம் எப்பொழுது வெடிக்கும் என்ற கேள்வியை மக்கள் முன் நிறுத்தியுள்ளது. 

(நன்றி: தென்செய்தி)