முதலில் அது ஒரு விமான விபத்தாக மட்டுமே உணரப்பட்டது. எத்தனையோ விபத்துகளைப் போல இதுவும் ஒன்று என்ற எண்ணம்தான் எல்லோரிடமும், விபத்து நடந்த நாளில் இருந்தது!

ஆனால் இப்போது ஈரம் உள்ள இதயங்கள் அனைத்தும், இதனை ஒவ்வொரு ஊரிலும் - ஒவ்வொரு வீட்டிலும் - விழுந்த இழவாக எண்ணிக் கலங்குகின்றன!air india plane crash in gujratஅரசு செய்த தவறு என்ன, எல்லாவற்றையும் தனியார்மயமாக்குவது சரியா, இது இயந்திரக் கோளாறா இல்லை மனிதர்களின் கவனக்குறைவா, இத்தனை உயிர்களை இழந்து நிற்பதற்கு யார் காரணம் என்பன போன்ற எண்ணற்ற கேள்விகள் எல்லாம் இப்போது பின்னுக்குப் போய்விட்டன!

இவ்வளவுதானா வாழ்க்கை இன்னும் அந்த ஒரே ஒரு உள் மனத்தின் குரல் மட்டுமே ஓங்கி நிற்கிறது இந்த நிமிடத்தில்!

விமானத்தில் ஏறி அமர்ந்து, தங்களின் மூன்று குழந்தைகளோடு மகிழ்ச்சியாய்ப் படம் எடுத்துக் கொண்டு, லண்டன் கனவுகளோடு புறப்பட்ட அந்தக் குடும்பம்.....

கல்லூரிப் படிப்பில் முதலிடமும், தங்கப் பதக்கமும் பெற்று, மேல் படிப்புக்காக லண்டனுக்குப் புறப்பட்ட அந்த மாணவி....

திருமணமானதும் தன்னை விட்டுப் பிரிந்து போன தன் கணவனை, மூன்று மாதங்களுக்குப் பிறகு, காதலோடும் கனவுகளோடும் காணப் புறப்பட்ட அந்த இளம் மனைவி .....

விமானப் பணிப் பெண்ணாக வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்னும் தன் ஆசை நிறைவேறி, உள்நாட்டுப் பயணங்களில் ஓடித் திரிந்த பின்பு, முதன்முதலாக வெளிநாடு செல்லும் விமானத்தில் பணிப் பெண்ணாக, பூரிப்போடு ஏறிய அந்த மணிப்பூர் பெண்...

முதலமைச்சர் பொறுப்பில் தான் இருந்திருந்தாலும், தன் மகளின் குடும்பத்தைக் காணும் மகிழ்ச்சியோடு லண்டனுக்குப் புறப்பட்ட முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி.....

இப்படி... இப்படி... இன்னும் பல்வேறாக, 230 பயணிகளும் 12 பணியாளர்களுமாய் அந்த விமானத்தில் ஏறி அமர்ந்த போது, யார் நினைத்திருப்பார்கள் இன்னும் ஐந்து நிமிடங்களில் எல்லாம் முடிந்து போகும் என்று!

மிகச் சில நிமிடங்கள்தான்....

நொறுங்கிப் போயின - அந்த விமானமும், ஆயிரம் கனவுகளும்!

- சுப. வீரபாண்டியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.