நேற்று முன்தினம் 'எக்ஸ்' தளத்தில், இந்தத் தலைப்பை மட்டுமே ஒரு செய்தியாக வெளியிட்டிருந்தேன். பல்லாயிரக்கணக்கானவர்களிடமிருந்து அதற்கு வரவேற்பும், ஒரு சிலரிடமிருந்து வழக்கம் போல் ஆபாசமான சொற்களால் எதிர்ப்பும் வந்துள்ளன.

தலைப்பே ஓர் ஆழமான செய்தியைச் சொல்கிறது என்பதைப் புரிந்து கொண்டே பலரும் வரவேற்றுள்ளனர். எனவே அது குறித்துச் சற்றுக் கூடுதலாகப் பார்க்க வேண்டியிருக்கிறது!saidai duraisamy and gurumoorthyமுதலில், ராமதாஸ் - அன்புமணி சண்டையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது குடும்பச் சண்டையோ, உட்கட்சிப் பிரச்சனையோ அல்ல! திமுகவிற்கு எதிராகப் பாஜக தொடங்கி இருக்கும், பல்வேறு அரசியல் சதிகளில் அதுவும் ஒன்று! அதனால்தான் பற்றி எரியும் வீட்டிற்குள், சரியான நேரம் பார்த்து ஓர் ஆடிட்டர் அனுப்பப்படுகிறார்.

கமல்ஹாசனை மையமாக வைத்து நடக்கும் கன்னடம் - தமிழ் மோதலும் திட்டமிட்ட பாஜகவின் சதி என்பதை நாம் உணர வேண்டும். திமுக விற்கு எதிரான அரசியல் சதுராட்டங்களில் அதுவும் ஒன்று, அவ்வளவுதான்! அதனைத் தாண்டி, மொழி உணர்ச்சி, மோதல் என்பதெல்லாம் வெறும் வெளித்தோற்றம்!

குருமூர்த்தியோடு சைதை துரைசாமியும் சேர்ந்து வந்ததைக் கவனத்தில் கொள்ள வேண்டும். என் 30 ஆண்டுகால நண்பரைச் சந்திக்க வந்தேன் என்று குருமூர்த்தி சொல்கிறார். இப்படி எல்லாம் கூசாமல் பொய் சொல்வதற்கு அவர்களுக்கு எந்தப் பயிற்சியும் தர வேண்டியது இல்லை. 30 ஆண்டு கால நண்பரை ஏன் இதற்கு முன்பு சந்திக்கவே இல்லை? இரண்டு பேரும் "கோமா " விலா இருந்தார்கள்!

அதிமுக, பாஜக, தவெக, பாமக கூட்டணி என்பது அவர்களின் திட்டம் ! தேமுதிகவையும் ஒரு கொசுறாக இணைத்துக் கொள்ளலாம் என்பதே அவர்கள் கணக்கு!

தைலாபுரத்திற்குக் குருமூர்த்தி தானாக வரவில்லை. அமித்ஷா சொல்கிறார், அதைக் குருமூர்த்தி செய்கிறார்!

இபிஎஸ் - ஓபிஎஸ் சண்டை எங்கே முடிந்தது? இரண்டு பேரும் பாஜகவிடம் சரண் அடையும் இடத்தில் முடிந்தது !

ராமதாஸ் - அன்புமணி சண்டையும் அங்குதான் முடியும்!

நம்மைப் போன்றவர்களுக்குப் புரிகிற இந்தச் செய்திகள் ராமதாஸ் போன்ற அனுபவம் மிக்கவர்களுக்குப் புரியாதா? புரியும்! ஆனால் பேரம் வேறு மாதிரியானது!

இந்த ஆண்டு, செப்டம்பர் மாதத்தைத் தாண்டும்போது, இன்னும் பல கூத்துகள் இங்கு அரங்கேறும் ! குருமூர்த்திகள் இன்னும் பல வீடுகளுக்குப் போய் வருவார்கள்!

- சுப. வீரபாண்டியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.