இந்தியா விடுதலை பெற்ற 1947-இல்  மொத்தம் 42 இரயில்வே அமைப்புகள் இருந்தன. அவை அனைத்தும் 1951-இல்  தேசியமயமாக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்ட பொழுது உலகின் மிகப்பெரிய வலையமைப்புகளில் ஒன்றாக உருவானது இந்திய இரயில்வே.

இத்தகைய சிறப்புமிக்க இரயில்வே துறையில், கடந்த ஆட்சியின் போதே   சிறிது சிறிதாகப் பல்வேறு பணிகளைத் தனியாரிடம் ஒப்படைத்து வந்த மோடியின் பாஜக அரசு, இப்போது ரயில்வே துறையை முற்றிலுமாகத் தனியாருக்குத் தாரை வார்க்க முடிவு செய்துள்ளது.

indian trainசென்ற முறை பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இரயில்வே துறையை தனியார் மயமாக்க  வேண்டும் என்று மோடி கருதிக் கொண்டிருந்த போதிலும், நாடு முழுவதுமுள்ள தொழிற்சங்கங்கள் இரயில்வே துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள்  எதிர்ப்பு காரணமாகவும், நாடாளுமன்றத்தில் பாஜகவுக்குப் போதிய பலம் இல்லாத காரணத்தாலும் நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது. ஆனால்  தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இரண்டாம் முறை ஆட்சியைக் கைப்பற்றியுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு இரயில்வேயைத் தனியார் மயமாக்குவதில் ராக்கெட் வேகத்தில் செயல்பட்டு வருகிறது.

100 நாட்களில் ரயில்வே துறையை தனியார்மயமாக்கப் பாஜக அரசு ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூன் 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ரயில்வே ஆணைய உறுப்பினர்கள், பொது மேலாளர்கள்  கூட்டத்தில் மத்திய அரசின் முடிவை உடனே நடைமுறைப்படுத்த ரயில்வே அமைச்சர் பியுஸ்கோயல் உத்தரவிட்டுள்ளார்.

முதல் கட்டமாக ஒரு வழித்தடத்திலான பயணிகள்  இரயிலையும், சுற்றுலா பகுதிக்கான  ஒரு இரயிலையும் தனியார் இயக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏலம் 100 நாள்களுக்குள் நடைபெறும். ஏலத்தில் அதிகத் தொகை கேட்பவருக்கு  ரெயில் சேவையை இயக்க வாய்ப்பு வழங்கப்படும். அந்தத் தனியார் ரெயிலுக்குப் புதிய பெயரைச் சூட்டிக் கொள்ளலாம். ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் வாடகை அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்படும். மேலும்,  முக்கிய நகரங்களை இணைக்கும் நீண்ட தூர எக்ஸ்பிரஸ் இரயில்களில் ஒன்றும் விரைவில்  அந்த தனியாருக்கு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டிலேயே  மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான  இந்திய ரயில்வேயைக் கைப்பற்றி விட  ரிலையன்ஸ், டாடா  உள்ளிட்ட  பல கார்ப்ரேட்டுகள் பல காலமாகக் காத்திருக்கிறார்கள்.  காரணம், இந்தியாவில்  நாள்தோறும்  கோடிக்கணக் கான மக்கள் ரயில் போக்குவரத்தைப்  பயன்படுத்துகின்றனர். இதனால் ஆம்னி பேருந்து போல் இரயில் வழித்தடங்களை கைப்பற்றினால் ரயில்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் உணவகம், ரயில் நிலையத் தங்குமிடம், சரக்குப் போக்குவரத்து எனப் பலவழிகளில் கொள்ளை லாபம் ஈட்டலாம்.

இரயில்வே தனியார் மயம் எனும் மோடியின் நாசகாரத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஏழை எளியவர்களும், நடுத்தர மக்களும்  இரயில்களில் பயணம் செய்ய, தற்போதையக் கட்டணத்தைப் போல் இரு மடங்கு செலுத்த நேரிடும்.  ஏனென்றால்  இரயில் கட்டணத்தில் உள்ள 47 விழுக்காடு மானியம் முற்றிலுமாக நிறுத்தப்படும்.

மேலும், இரயில்வே தனியார் மயமாகும் போது, பாதி ரயில்வே ஊழியர்கள் ‘உபரி’ ஆவார்கள். இதை அமல்படுத்தும் திட்டம் இருப்பதால்தான்,  மோடி அரசு புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்காமல் ஓய்வு பெற்றவர்களைப் பல்வேறு பணிகளில்  நியமித்துள்ளது. ஊழியர்களே உபரி ஆகும் போது, ஓய்வு பெற்றவர்களும் நீக்கப்படுவார்கள்.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு செயல்தலைவர் ஆர்.இளங்கோவன் "ஏற்கனவே பல ஆண்டுகளாகத் தனியாகத் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட் ஜெட்டைப் பொது பட்ஜெட்டுடன் ஒன்றாக இணைத்தபோதே தொழிற்சங்கங்கள் எச்சரித்தன. காரணம், ரயில்வே மிக விரைவில் தனியாரிடம் போகப் போகிறது; அப்படியிருக்கையில் பட்ஜெட் எதற்கு என்பதுதான்.

தற்போதுள்ள மோடி அரசின் முடிவின்படி, மிக விரைவில் உலகப் புகழ் பெற்ற பெரம்பூர் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை (ஐசிஎப்), கபுர்தலா ரயில் பெட்டி தயாரிப்பு ஆலை உள்பட பல உற்பத்திப் பிரிவுகளும், பொன்மலை ரயில் என்ஜின் ஆலை, சித்தரஞ்சன் லோகோ ஆலை உள்ளிட்டவையும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். இதில் ரயில்வே பணிமனைகளும் அடங்கும்.

 இவை அனைத்தும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு முன்பு இந்தியன் ரயில்வே ரோலிங் ஸ்டாக் கம்பெனி என்ற பெயருக்கு மாற்றப்படும். ஒவ்வொரு உற்பத்திப் பிரிவிலும் தனியார் நிறுவனங்களைப் போல்  தலைமைச் செயல் அதிகாரி இருப்பார். இவரது பணி லாபத்தை நோக்கி நிறுவனங்களை நடத்துவதே. அதற்கு அவர் ஆட்குறைப்பு உட்பட என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.

இதுமட்டுமல்ல, மோடி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏறிய மூன்றே நாள்களில், அதாவது 3.6.2019 அன்று  ரயில்வேக்குச் சொந்தமான சென்னை இராயபுரம் உள்பட நாடு முழுவதும் உள்ள 5  அச்சகங்களை மூடிவிடவும், அதில் உள்ள இயந்திரங்களை விற்றுவிடவும் முடிவு செய்தது.

ரயில்வே அச்சகங்களில் பணிபுரியும் ஊழியர்களை மாற்று இடங்களில் நியமிக்கவும், அச்சக வேலைகளை தனியார்மயமாக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதன் அடுத்தகட்டமாக  ரயில்வே பள்ளிகளும், ரயில்வே மருத்துவமனைகளும் மூடப்படும் அபாயம் உள்ளது" என்று எச்சரிக்கிறார் ஆர்.இளங்கோவன்.

நாட்டு மக்களின் சொத்தான பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது தான் இவர்களின் தேசபக்தியோ என்னவோ?

காவிகளின் பிடியிலிருந்து நாட்டையும், கார்ப்பரேட்களின் பிடியிலிருந்து  பொதுத்துறை நிறுவனங்களையும்  மீட்டெடுத்திட   அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், பொதுமக்களும் ஓரணியில் நின்று  போராட வேண்டிய தருணமிது!

Pin It