மயக்கத்தில் ஆழ்ந்திருந்த மக்கள் தம்மை
மடைமாற்றித் தெளிவூட்டி வெளிச்சம் தந்த
இயக்கம்நீ ஏற்றம்நீ ஏணி நீதான்!
இலக்கியத்தின் புதுவரியே! எழுச்சிப் பாட்டே!
தயக்கங்கள் தடைக்கற்கள் ஏது மில்லை
தமிழ்வாழத் தான்வாழும் தலைவன் நீதான்!
அயர்வின்றி உன்கால்கள் நடந்த தாலே
அழியாத சாதனைகள் படைத்தாய் வாழ்க!

பன்னூறு ஆண்டிங்கே வாழ்ந்தால் கூடப்
-- படைத்திடவே இயலாத செயலை எல்லாம்
தொண்ணூறு ஆண்டுகளில் முடித்து வைத்த
தொலைதூரப் பார்வைக்குச் சொந்தக் காரர்
என்னென்போம் இலக்கியத்தை எழுத்தை பேச்சை
இன்னும்பல் துறைகளிலும் ஆற்றல் கொண்ட
பன்முகத்துத் தலைவனிங்கே உன்னை யன்றிப்
பாரினிலே யாரென்றே பகர்வார் உண்டா?

ஒருமுக்கால் நூற்றாண்டு தமிழ கத்தில்
உன்போல அரசியலில் நின்ற வர்யார்?
பெருமையிலே புகழ்த்தளத்தில் உன்னைப் போலப்
பீடுநடை போட்டிங்கே வாழ்ந்த வர்யார்?
நெருக்கடியை நீள்துயரை உன்னைப் போல
நிமிர்ந்திங்கே நேர்கண்டு வென்ற வர்யார்?
வரலாறே மணிமுடியே வாழ்த்து கின்றோம்
வாழ்ந்தால்நீ வாழ்வோம்யாம் என்ப தாலே!

Pin It