நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்கு என்ன?

“ஆர்.எஸ்.எஸ் - இன் கொள்கையும், அமைப்பு ரீதியிலான பலமும்தான் இதில் முக்கிய பங்கு வகித்தன”--- நெற்றியடியாக இப்படிச் சொல்பவர் வேறு யாருமல்ல, பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘ஆர்கனைசர்’ என்ற ஆங்கில நாளிதழின் முன்னாள் ஆசிரியர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்புலத் தூண்களில் ஒருவரான சேஷாத்திரி சாரிதான் இப்படித் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் (25.05.2014) சில செய்திகளைச் சொல்லி இருக்கிறார். அவை -

1. இந்தியா - இலங்கையின் உறவு என்பது தமிழர்கள் பிரச்சினையால் பகையாகிவிடக்கூடாது.

2. தமிழர்களின் பிரச்சினைகளைக் கொழும்பு உண்மையாகவும், சுமுகமாகவும் தீர்க்கும். அதற்கு நாம் கால அவகாசம் தருவது அவசியம்.

3. எதிர்பாரத விதமாக ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

4. இப்பொழுது இந்தப் பிரச்சினையில் உலகநாடுகள் தலையிட்டு, இது உலகமயமாகிவிட்டது.

5. இனி இதில் அனாவசியமாகப் பிரச்சினைகள் வருமே ஒழிய, அதைத் தீர்ப்பது கடினம்.

6. இந்தியாவுக்கு எதிரிநாடு கிடையாது. அனைவரிடமும் நேசக்கரம் நீட்டவே இந்தியா விரும்புகிறது.

- ஏறத்தாழ இது, மகிந்த இராஜபக்சேவின் வாக்குமூலத்தை அல்லது அவரின் எண்ண ஓட்டத்தை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது.

இதுதான் பா.ஜ.க. இதுதான் ஆர்.எஸ்.எஸ். இந்த உறவில்தான் இராஜபக்சேவை மோடி தன் பதவியேற்பு விழாவுக்கு அழைத்திருக்கிறார்.

இராஜபக்சே மீது தமிழ்மக்களின் கோபத்திற்குக் காரணம், தன் இன மக்களாகிய ஈழத்தமிழர்களை அவர் இனப்படுகொலை, பாலியல் படுகொலை, கொடுமைகள் செய்ததுதானே ஒழிய, ஏதோ கொடுக்கல் வாங்கல் தகராறு அல்ல.

பா.ஜ.க.,வு-க்கு இந்த இனப்படுகொலை பற்றிக் கவலை இல்லை.

ஒரு மொழி, ஒரு நாடு, ஒரு பண்பாடு என்ற ஏக இந்திய இந்துத்துவத்தைத் தமிழர்கள் எதிர்ப்பதால், தமிழர்கள்தான் டில்லிக்கும், கொழும்புக்கும் பகை என்பதுபோலவும், ஐ.நா.அவையில் இராஜபக்சே முன்நிறுத்தப்படுவதால், இனி இப்பிரச்சினையை தீர்க்க முடியாது என்றும், இலங்கைக்கு அவகாசம் கேட்டு இராஜபக்சேவுக்குச் சாதகமாகப் பா.ஜ.க. இருப்பதை சாரி உறுதி செய்கிறார்.

ஈழப்போருக்குப் பின் காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைக்குச் சென்ற குழுவில் சுஷ்மா சிவராஜ், இராஜபக்சேவுடன், குழுவைத் தவிர்த்துத் தனிமையில் பேசியது மட்டுமல்ல, அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைக்கவும் செய்திருக்கிறார். சுஷ்மாவின் அழைப்பை ஏற்ற இராஜபக்சே பீகாருக்குச் சிவப்புக் கம்பள விரிப்போடு வரவேற்கப்பட்டார்.

இது எரிகின்ற பிணத்தின் நெருப்பு வெளிச்சத்தில், எதிரிக்கு விருந்து கொடுத்தது போல இருந்தது.

அன்று சுஷ்மா சொன்னார், இராஜபக்சே என் நண்பர் என்று. இன்று தன் முகநூல் பக்கத்தில் மோடி சொல்கிறார், நானும் இராஜபக்சேவும் நெருங்கிய நண்பர்கள், கரம் கோர்த்துச் செயல்படுவோம் என்று.

இப்பொழுது இந்நிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சிவராஜ் என்பது கவனத்தில் வைக்கப்பட வேண்டிய ஒன்று.

மோடி தமிழகத்தில் தன் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஈழப்பிரச்சினை குறித்துப் பேசியதில்லை. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையிலும் இது குறித்து ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை.

தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் சொல்கிறார், “இராஜபக்சேவை எனக்குப் பிடிக்காது. ஆனால், இலங்கை நம் நட்புநாடு. இராஜபக்சேவைப் புறக்கணிக்கக் கூடாது” என்று. இதற்குப் பெயர்தான் இரட்டை நாக்கு, இரட்டை வேடம்.

சாதாரணப் பாமர மக்கள் கூட புரிந்து வைத்திருக்கும் இந்தப் பிரச்சினை, வை.கோ, விஜயகாந்த், இராமதாஸ் போன்றோருக்குப் புரியவில்லை என்றால் அது தவறு.

அவரும், அவரின் தேர்தல் கூட்டாளிகளும் இராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஏதோ இராஜபக்சே தானாகவே டிக்கெட் வாங்கிக் கொண்டு மோடி விழாவுக்கு வந்தது போல.

இராஜபக்சேவை அழைத்தவர் மோடி. அதுவும் தன் பட்டாபிசேக பதவியேற்பு விழாவுக்கு. அழைத்தவரை விட்டுவிட்டு, வந்தவருக்குக் கருப்புக் கொடியா?

உண்மையில் எதிர்க்கப்பட வேண்டியவர் மோடியும், அவரின் பா.ஜ.க.வும்தான். மோடியின் அழைப்பு இல்லை என்றால் இராஜபக்சே இங்கே வந்திருக்க மாட்டார்.

இதோ வைகோ சொல்கிறார், “ இலங்கையில் ஹிந்து கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் இடிக்கப்பட்டு, புத்த விகாரங்களை எழுப்பி வருகின்றனர். தமிழர்களின் குடியிருப்புகள் அழிக்கப்பட்டு, சிங்களவர்களைக் குடியேற்றி வருகின்றனர். தமிழர்களின் கல்லறைகள் அழிக்கப்பட்டுள்ளன. 578 மீனவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, தற்போது மீனவர்களை விடுத்திருப்பது முட்டாளாக்கும் செயல். இத்தகைய சூழலில் எங்கள் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது அல்ல. இராஜபக்சே வருகைக்கு எதிராகவே போராடுகிறோம்” (தினமணி - 27.05.2014).

வைகோ சொன்ன கொடுமைகளைச் செய்த இராஜபக்சேவை சிவப்புக் கம்பளம் விரித்து வரச்சொன்னவர் மீது தவறு இல்லையாம். வந்தவர் மீதுதான் தவறாம். இனி அப்படித்தான் அவர் பேசுவார்.

மோடி பதவி ஏற்பு விழாவுக்கு, தன் மனைவி, மைத்துனருடன் விமானம் ஏறிப் பறந்து டில்லி சென்ற விஜயகாந்த், தன் மைத்துனருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காது என்று தெரிந்தவுடன், மோடி பட்டாபிசேகத்தைத் தவிர்த்துவிட்டார். பெயரளவில் அவரும் ஓர் அறிக்கை, இராஜபக்சேவுக்கு எதிராக - அவ்வளவுதான் அவர்.

இராமதாஸ் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஈழத்தமிழர்களுக்காகப் பாய்ந்து பாய்ந்து பேசிய அவர், தன் மகன் அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைப்பதற்காக இப்பொழுது பம்மிக்கொண்டு இருக்கிறார் - பெயரளவில் அறிக்கை கொடுத்துவிட்டு.

“புதிய அரசின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் இராஜபக்சே வருவதைப் பயன்படுத்தி, தமிழர் பிரச்சினைகளுக்கும், இன்னல்களுக்கும் தீர்வு காணவேண்டும்” - சி.பி.எம். தோழர் இராமகிருஷ்ணன் யோசனை இது (தி இந்து - 26.05.2014).

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஈழப்பிரச்சினையில் இந்தியா, பா.ஜ.க. அரசின் நிலை எப்படி இருக்கும்? காங்கிரஸ் அரசின் அணுகுமுறைதான் மோடியின் நிலைப்பாடு.

இராஜபக்சேயை வரவழைத்தது மோடி அரசின் முதல் கோணல்!

Pin It