தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டிய நெருப்பில் எண்ணெய் ஊற்றத் தொடங்கிவிட்டார் நரேந்திர மோடி.

இந்திய அரசியல் சாசனப்படி எப்பொழுது அவர், நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டாரோ, அந்நொடி தொடங்கி அப்பொறுப்பில் இருந்து விலகும் வரை அவர், நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். இனம், மதம் சார்ந்து இயங்கக் கூடாது-.

மோடி அரசின் தொடக்கமே இதற்கு எதிர்மறையாய் நிற்கிறது.

கடந்த தேர்தல் பரப்புரையின் போது, துர்கா பூசை செய்யாமல் மேற்கு வங்கத்தில் வாழ்பவர்கள், வங்க தேசத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று பேசினார். இது இசுலாமிய மக்களுக்கு எதிரான பேச்சு.

இன்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்பா ஹெப்துல்லா, இங்கே பார்சியின மக்களுடன் ஒப்பிடும்போது, இசுலாமியர்கள் சிறுபான்மையினர் அல்லர் என்றும், அவர்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது என்றும் தேவையற்றுப் பேசியிருக்கிறார். இட ஒதுக்கீட்டை ஒழிப்பது என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை.

இந்திய அரசின் கொள்கைப்படி முசுலிம்கள் உட்பட ஐந்து இனங்கள் சிறுபான்மையினர் ஆவர். இடஒதுக்கீடு எண்ணிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்படுவது அன்று. இந்திய அரசியல் சட்டத்தின்படி கல்வியில், சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படுவதுதான் இடஒதுக்கீடு.

இது அரசின் சலுகை அன்று. அந்த மக்களின் உரிமை.

காங்கிரசு ஆட்சியில் இசுலாமியர்களுக்கு 4.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க முன்வந்தது மதத்தின் அடிப்படையில் அன்று. அப்படி அளிக்க சட்டத்தில் இடமில்லை. மாறாக அது சமூநீதியின் அடிப்படையிலானது.

பா.ஜ.க.வின் மோடி அரசு இசுலாமியர்களுக்கு எதிராக நகர்த்தும் காய்களுள் இது முக்கியமானது.

இன்று இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை என்று கூறும் இவர்கள், நாளை தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் என்று பார்ப்பனர் அல்லாத அனைத்து மக்களின் இடஒதுக்கீடு உரிமைகளையும் பறித்துவிட மாட்டார்களா?

அப்படி ஒரு நிலை வருமானால் அவாள்கள் ‘ஜட்ஜுகள்’ ஆவார்கள், ‘இவர்கள்’ மாடு மேய்க்கப்போவார்கள்.

இன்று இசுலாமியர்கள், நாளை - கிறித்துவர்கள், தலித்துகள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் மட்டுமன்று. விழிப்படைய வேண்டிய நொடியும் இதுதான்.

Pin It