பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களை ஆளுநர்களாக்கி ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்தவர்கள்தான் இப்போது வாக்கு கேட்டு வருகிறார்கள்.

1) அரசின் திட்டப் பணிகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் செய்தார். அதிகாரிகளை நேரடியாக அழைத்துப் பேசி ஆணைகளைப் பிறப்பித்தார். ஆளுநரின் இந்த அத்துமீறலை எடப்பாடியார் ஆட்சி எதிர்க்க வில்லை. கைகட்டி வாய் பொத்தி வேடிக்கைப் பார்த்தது. எதிர்க்கட்சியான தி.மு.க. தான் ஆளுநரின் இந்த அத்துமீறலை எதிர்த்து அவர் சென்ற இடமெல்லாம் கருப்புக்  கொடி போராட்டங்களை நடத்தியது.

2) ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி தேர்வு செய்த முதலமைச்சர் சசிகலாவை பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்து இழுத்தடித்தார் தமிழக கவர்னர், வித்யாசாகர் ராவ்.

3) தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து குழுவின் பரிந்துரைப்படி துணை வேந்தர் களை தேர்வு செய்யும் உரிமை தமிழக அரசிடமே இருந்தது; அந்த உரிமையை இன்றைய தமிழக ஆளுநர் பறித்துக் கொண்டு விட்டார்.

4) அம்பேத்கர் பெயரில் செயல்படும் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் சூர்ய நாராயண சாஸ்திரி என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் - கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா. தமிழ்நாடு கலை மற்றும் நுண் பல்கலைக்கழத்துக்கு துணைவேந்தர் கேரளாவைச் சார்ந்த பரிமளா தேவி; அத்தனையும் ஆளுநரின் நியமனங்கள். தமிழக அரசு இதை எதிர்த்து வாயைத் திறக்கவில்லை.

5) மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள 16 பல்கலைக் கழகங்களில் மத்திய மனித வளத்துறை துணை வேந்தர்களை நியமித் துள்ளது. இவற்றில் ஒரு பதவி கூட தமிழருக்கு வழங்கப்படவில்லை.

6) திருவாரூரில் தொடங்கப்பட்ட மத்திய பல்கலைக்கழகத்தில் ஒரிசாவைச் சார்ந்த ஆதித்ய பிரசன்னராவ் துணைவேந்தராக்கப் பட்டார். அவருக்குப் பிறகு இப்போது கருநாடகத்தைச் சார்ந்த பி.பி. சஞ்சய் துணைவேந்தராக வந்துள்ளார். தமிழ்நாட்டுப் பல்கலையில் தமிழர்களையே நியமிப்பது நல்லது என்று தேர்வுக் குழு பரிந்துரை செய்தும் அதை குப்பைக் கூடையில் வீசி விட்டார்கள்.

7) நக்கீரன் கோபால், ‘நக்கீரன்’ இதழில் தமிழக ஆளுநர் குறித்த ஒரு கட்டுரை வெளியிட்டார். அதற்காக காவல் துறையில் ஆளுநரே நேரடியாக புகார் தந்து இந்திய தண்டனைச் சட்டம் 124ஆவது பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் பிணையில் வெளிவராத ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்ய ஆளுநரே உத்தரவிட்டார். அரசு நிர்வாகத்தில் இப்படி நேரடியாக தலையிடலாமா என அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கேட்கவில்லை. ஆனால் எழும்பூர் ‘மாஜிஸ்ரேட்’ இந்த வழக்கிற்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று கூறி நக்கீரன் கோபாலை ‘ரிமாண்ட்’ செய் மறுத்தார். மாநில ஆட்சி யின் நிர்வாகத்தில் ஆளுநர் மேற்கொண்ட அப்பட்டமான தலையீடு இது.

8) 7 தமிழர் விடுதலைக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள 161ஆவது பிரிவின் கீழ் தமிழக அமைச்சரவை ஒப்புதல் தந்த பிறகும் கையெழுத்திட வேண்டிய ஆளுநர் பல மாதங்களாக கோப்பை கிடப்பில் போட்டு அமைச்சரவை முடிவை அவமதித்து வருகிறார். ஆளுநர் ஏன் தாமதிக்க வேண்டும் என்று கேட்க இந்த ஆட்சி தயாராக இல்லை.

ஆளுநர்களைக் கொண்டு ஆட்சி நடத்தும் பா.ஜ.க.வும் மாநில உரிமைகளில் ஆளுநரின் தலையீடுகளைத் தட்டிக் கேட்க நடுங்கி நிற்கும். அ.இ.அ.தி.மு.க. ஆட்சியும் இப்போது கரம் கோர்த்துக் கொண்டு தமிழர்களின் உரிமைகளை மீண்டும் ‘காவு’ கேட்க தேர்தல் களத்தில் நிற்கின்றன.

தமிழர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

Pin It