காவியக்காலங்களிலேயே நான் மாதவிலக்கில் ஒற்றை ஆடையில் இருக்கிறேன், -இப்போது அரசவைக்கு வரமுடியாத நிலையிலிருப்பவள் என்று சொன்ன பாஞ்சாலி -- ஐந்து அரச குமாரர்களின் மனைவி -- யுகம்யுகமாய் பெண்களை இந்த விலக்குகள் ஏன் தள்ளிவைத்தன என்பது புரியாத புதிர் அல்ல.

ஒருவேளை அந்நாட்களில் கடுமையான வீட்டுப்பணி, -மறுக்கமுடியாத இளம்வயதுக் கணவனிடமிருந்து ஒரு தற்காலிக ஒய்வு ஆகியவற்றிற்காகக்கூட அவர்கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தட்டில் வைத்துத் தரப்பட்ட உணவு செம்பில் தண்ணீர் என பெரும்பாலும் தென் மாநிலங்களில் சில மாவட்டங்களின் சிற்றூர்களில் இவர்களுக்காகவே கட்டி வைக்கப்பட்ட -குச்சு -எனப்படும் சிறிய அறைவாசம் -- பெரும்பாலும் பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டதால் ,தன்னை ஒத்த, இதே நிலையில் உள்ள மறறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டும், கதைப்புத்தகம் படித்துக் கொண்டும், மூன்று நாள்களைக் கழித்து விட்டு நான்காம் நாள் தலைக்குக் குளித்து உள்ளே வருவார்கள்.

sanitary napkin

அப்போதெல்லாம் கிராமங்களில் இவர்களின் உதிரப்போக்கு வெளியேகூட சொல்லக்கூடாத விஷயமாகக்கருத்தப்பட்டது.

பழைய புடவைகளைக்கிழித்து, உபயோகப்படுத்துவார்கள் --சரி ?

அவற்றைத் துவைத்து சகோதரர்கள், தந்தை போன்ற ஆடவர்கள் கண்ணில் படாமல் எந்த மந்திர சக்தியில் அவர்கள் உலர்த்த முடிந்திருக்கக்கூடும்?

இந்த சமயத்தில்தான், நமது அரசுமருத்துவமனைகள், கீழைநாடுகள் முதலியவற்றின் மூலம் சானிட்டரி நாப்கின்கள் இருப்பது வெளியே தெரிய வந்தது. வசதியானவர்களுக்கே கொஞ்சம் பகட்டு என்று நினைக்கும் அளவில்தான் தொடக்ககால விலை இருந்தது. எனினும் சுத்தம், சுகாதாரம், எல்லாவற்றிற்கும் மேலாக சௌகர்யம் காரணமாக பெண்களிடையே இது மிகவும் பிரபலமாகிப் போனது .ஊடகங்களும் மறைமுகமாக விளம்பரம் செய்யத் தொடங்கின .

எனினும், பதின்வயதுப்பெண் குழந்தைகளை முன்னிறுத்தி இவற்றின் அவசியத்தினை நிறுவியதன் பெருமை மறைமுகமாக உலகமயமாக்கலுக்கு உண்டு. -அதற்கு நேர்மாறாக முருகானந்தம் போன்ற விடாமுயற்சியாளர்கள் கிராமப்புறப் பெண்களின் தேவையறிந்து, முயற்சி செய்து, உருவாக்கிய எளிய வகை நாப்கின்க்ளுக்கும் இதில் நேரடிப் பங்கு உண்டு. இதன் பாதிப்பை நானே கேள்விப்பட்டிருக்கிறேன்.

சுமார் 35 வருடங்களுக்குமுன் என் நண்பர் ஒருவரின் மகன் ஒரு வங்கியின் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள கிராமம் ஒன்றின் கிளைக்கு மேலாளாளராகப் பொறுப்பேற்றார். தன் முப்பது வயது மனைவியுடன் வீடுபிடித்து அந்த ஊரில் வங்கிப் பணியினைச் செய்து வந்தார். ஒருநாள் வீட்டின் முன் ஊர்மக்களில் முக்கால்வாசிப் பேர் வந்து நிற்கவே ,இவர் வெளியே வந்து என்ன காரணத்திற்காக, இங்கே வந்திருக்கிறீர்கள், நான் ஏதும் செய்ய வேண்டுமா என்று இயல்பாகக் கேட்டார். ஒரு பெண்மணி முன்னே வந்து, உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கிறார்களா என்று கேட்க, குழம்பிப் போன இவர் கோபத்துடன், இல்லை. அதையெல்லாம் ஏன் நீங்கள் கேட்கிறீர்கள் என்றார். அந்தப் பெண்மணி சொன்னதுதான் இவரையும் இவர் மனைவியையும் உறைய வைத்த சொற்கள்.

மூன்று மாதங்களாய், உங்கள் மனைவி வீட்டுவிலக்கு ஆகியிருக்கிறார். ஆனால் எங்கள் ஊர்வழக்கப்படி -கிராமப் பொதுக்குச்சு வீட்டில் வந்து, கட்டிய புடவையுடன் தங்கவுமில்லை.- நாலாம் நாள் ஊர்க்குளத்தில் முங்கிக் குளிக்கவும் இல்லை. எல்லாம் தீட்டாகிப் போச்சு. ஆடு, மாடு எல்லாம் சீக்காகி விட்டன. மழையே இல்லை. பெரிய குத்தம் ஆகிப்போச்சு. இந்த தீட்டுக்காவது ஒதுங்கிடணும். இதைச் சொல்லத்தான் நாங்கள் எல்லோருமாக ஒன்றாக வந்தோம் என்றார்களாம்.

மறுநாள் பேருந்தைப் பிடித்து அந்தப் பெண்மணி தன் பிறந்த வீட்டுக்கே போய்விட்டார் என்பதும், நண்பர் 60 வயதான தன் பாட்டியின் உதவியுடன் அந்தக் கிளையில் இரண்டு வருடங்கள் பணிபுரிந்து மாறுதல் பெற்றார் என்பதும் முடிவுரைகள். ஆனால் எனக்குத் தெரிந்து பத்துவருடம் முன்புவரை அந்த ஊர் மாறவே இல்லை என்பதை, 50 வயதைக் கடந்தவர்களே மேலாளர்களாகப் போய் பணிபுரிந்து கொண்டு குடும்பங்களைப் பிரிந்து வாழ்ந்தனர் என்பதிலிருந்து அறிந்தேன்.

பெண்களின் உடற்கூறு காரணமாக ஏற்படும், இம்மாறுதல்களைத் தற்போதைய சின்னஞ்சிறுமிகள் இயல்பாக எடுத்துக் கொண்டு, விளையாட்டு, பயணம், படிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த முடிவதற்கு சானிட்டரி நாப்கின்கள் போன்றவை பெரிய சாளரங்கள் என்றே நாம் இருகை நீட்டி வரவேற்க வேண்டும்.

வரிவிதித்து அவற்றைச் சுமைகளாக்கி விடக்கூடாது.ஏனெனில், அவற்றிற்கு செலுத்தும் வரிகள், நிஜமாகவே ரத்தக்கறை படிந்தவை.

Pin It