ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுப் போராட்டத்திற்குப் பின் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்தபோது, 2004 அக்டோபர் 12 ஆம் நாள் அன்று, தமிழ் செம்மொழி என்று மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டது(அரசாணை எண்: IV-14014/7/2004-NI-II dated 12.10.2004).

Semmozhi logoஅதற்குப் பின்பும் போராடிப் போராடித்தான், அந்நிறுவனத்தை இங்கு செழுமையாக்க முடிந்தது. மத்திய அரசிடமிருந்து போதிய நிதியைப் பெற முடியவில்லை. மைசூரிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்ட செம்மொழி நிறுவனம் இன்றும் வாடகைக் கட்டிடத்தில்தான் இயங்குகிறது. கலைஞர் அவர்களின் முயற்சியால் பெரும்பாக்கம் என்னும் இடத்தில் 17 ஏக்கர் நிலம் அதற்கென வாங்கப்பட்டும். இன்னும் அங்கு கட்டிடம் எழுப்பப்படவில்லை.

ஜெயலலிதா 2011இல் ஆட்சிக்கு வந்தது முதலே, அந்நிறுவனம் புறக்கணிக்கப் பட்டதுடன், செம்மொழி என்ற சொல்லே அரசின் வெறுப்புக்கு உள்ளான சொல்லாக ஆகிவிட்டது. 2013இல் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட மலையாளம் இன்று கேரளாவில் பெற்றுள்ள நிதி உதவிகளைக் கூட நம் தமிழ் பெறவில்லை.

இந்நிலையில், சென்னையில் இயங்கிவரும் செம்மொழி நிறுவனத்தையே, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக மாற்ற மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுவரும் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. இதன்மூலம் செம்மொழி நிறுவனம் தன் தனித்தன்மையை இழந்து, மத்தியப் பல்கலைக் கழகத்தின் தயவில் உயிர் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். அதற்குப் பின் மத்திய அரசிடமிருந்து நேரடியாக எந்த நிதியையும் பெற முடியாது.

இந்தி, சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளுக்கு மட்டுமே முன்னுரிமை, பிற இந்திய மொழிகள் அனைத்தும் இரண்டாந்தர மொழிகள் என்பதுபோல் மத்திய அரசு நடந்து கொள்கிறது. அதிலும் தமிழ், தமிழினம் என்றாலே பாஜகவிற்கு வெறுப்பாக உள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்தச் செயலையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.

தமிழைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவித்ததற்கு முன்னால், அதற்காக நாம் நெடிய போராட்டத்தை நடத்தியுள்ளோம். 1856 ஆம் ஆண்டு அறிஞர் கால்டுவெல், "திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ்...." என்று தன் நூலில் குறித்தார். 19ஆம் நூற்றாண்டு இறுதியில் பரிதிமாற்கலைஞர் தமிழைத் செம்மொழியாக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்தார். 1918 மார்ச் மாதம், சென்னை. பச்சையப்பன் கல்லூரியில் மாநாடு கூட்டி, சைவ சித்தாந்த மகா சமாஜம் அதனை ஒரு தீர்மானமாகவே நிறைவேற்றியது.

அன்று தொடங்கி, பல்வேறு தமிழ் அமைப்புகள் அந்தக் கோரிக்கையை முன்வைத்துப் பல மாநாடுகளையும், போராட்டங்களையும் நடத்தின. 1996 ஆம் ஆண்டு, சென்ன, தஞ்சை, திருச்சி, நெல்லைப் பல்கலைக்கழகங்கள் இத்தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பின.

அன்று இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களிடம், தமிழக முதல்வர் கலைஞர் இதனை வலியுறுத்தினார். இத்தனைக்கும் பிறகே, 2004 ஆம் ஆண்டு தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது.

இப்போது அந்நிலையை மாற்றத் தமிழர்கள் விரோத அரசான மத்திய மோடி அரசு முயற்சி செய்கின்றது. இதனை நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். கட்சி எல்லைகளைத் தாண்டி அனைவரும் ஒன்றுபட்டு இந்த அவலத்தை எதிர்த்திட வேண்டும்.

இந்துத்துவாவும், தமிழ் உணர்வும் எதிர் எதிர் நிலையில் மத்திய அரசினால் கட்டமைக்கப் பட்டுக் கொண்டு உள்ளன.

இறுதியில் தமிழே வெல்லும் என்பதைத் தமிழகம் உணர்த்தட்டும்! 

Pin It