பெரியார் இயக்கம் என்பதே ஒரு அறிவியல் இயக்கம் தான். நாம் பேசாத அறிவியல் இல்லை. எனினும் இன்றைய சூழலில், போலி அறிவியலைப் பற்றியும் நாம் பேச வேண்டியுள்ளது.

200 ஆண்டுகளுக்கு முந்தைய சமுதாயத்தில், அறிவியல் பேசுபொருளாக இருக்கவில்லை. ஆனால் இன்று அறிவியல் பேசுபொருளாக உள்ளது. இதனால் நேர்மறை விளைவுகளும் உண்டு; எதிர்மறை விளைவுகளும் உண்டு. புதிய விஞ்ஞான கண்டு பிடிப்புகளால் நம் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற்றங்கள் நேர்மறையான விளைவுகளாகும். அதே வேளையில், மக்களிடம் இருக்கும் அறிவியல் சொற்கள் மீதான ஆர்வத்தை பயன்படுத்திக் கொண்டு, அச்சொற்களை வைத்தே பொய்யான தகவல்களை பரப்புவது, எதிர்மறையான விளைவாகும்.

இச்சூழ்நிலையே நம்மை போலி அறிவியலைப் பற்றி பேசத் தூண்டுகிறது.

போலி அறிவியல் என்றால் என்ன? ஒரு பொய்யான மூடநம்பிக்கை கருத்து, அறிவியல் முலாம் பூசப்பட்டு, உண்மையைப் போல காட்டப்படும் போது, அது போலி அறிவியலாகிறது. (Pseudoscience). உதாரணமாக, சனீஸ்வரன் கோயிலை எடுத்துக் கொள்வோம். திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு மேலே செயற்கைக்கோள் பறக்கும் பொழுது அது ஒரு நிமிடம் செயலிழந்து நின்று விடுவதாக போலி அறிவியல் கருத்து பரப்பப்படுகிறது. இதை ஏன் போலி அறிவியல் என்கிறோமென்றால், பூமியை செயற்கைக்கோள் சுற்றும் அறிவியல் நிகழ்வை, கோயில் நம்பிக்கை யோடு கலந்து, விஞ்ஞான உண்மையைப் போல கூறுவதால், இதனை போலி அறிவியல் என்கிறோம்.

நிலவுக்கு இந்தியாவில் இருந்து முதன் முதலில் செயற்கைக்கோளை (சந்திராயன்) அனுப்பியவரும், தலைசிறந்த விஞ்ஞானியுமான கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை, இதனை ஆய்வு செய்து பார்க்க எண்ணினார். சக ஆராய்ச்சியாளர்களோடு சோதித்துப் பார்த்ததில் சனீஸ்வரன் கோயிலை தாண்டும் பொழுது செயற்கைக்கோளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரிந்தது. ஆக, ஆய்வு பூர்வமாக நிரூபிக்க முடிந்தவற்றை மெய்யான அறிவியல் என்றும், நிரூபிக்க முடியாதவற்றை போலி அறிவியல் என்றும் நாம் அறிந்து கொள்ளலாம். அதோடு, அறிவியல் என்பது நம்மை கேள்வி கேட்கத் தூண்டும்; நம் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்; “நீ கேள்வி கேட்காதே; இது ஆன்மீகத்தோடு தொடர்புடைய அறிவியல்; இதைக் கேள்வி கேட்டால் நீ ஆன்ட்டி இந்தியன்” என்று மெய்யான அறிவியல் கூறாது; போலி அறிவியலே, கேள்விகளை சமாளிக்க மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்தும்.

பழங்காலத்தில் மதக்கருத்துகளைப் பரப்ப நம்பிக்கை மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆனால் இன்றைய விஞ்ஞான உலகத்திலோ, வெறும் நம்பிக்கையை வைத்து எந்த மதத்தையும் வியாபாரமாக்குவது கடினமாக இருப்பதால், நிகழ்கால அறிவியல் கருத்துகளை மதக் கருத்து களோடு இணைத்து, போலி அறிவியல் கருத்துகளாக பரப்பி வருகின்றனர். பகுத்தறிவாளர்களாகிய நம்மிடமும் கூட நம்மை அறியாமல் சில மூடக் கருத்துகள் இருக்க வாய்ப்புண்டு. நாம் அனைவரும் இந்த சமுதாயத்தின் அங்கம் என்பதால் இந்த சமுதாயத்தில் நிலவும் கருத்துகளின் தாக்கம் நம் மனதிலும் இருக்கலாம். எனவே நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்வது நன்மை பயக்கும்.

நம்மைப் பொறுத்தவரை வானியல் (Astronomy) தான் அறிவியல்; ஜோதிடம் (Astrology) மூட நம்பிக்கை. ஆனால், மக்களை பொறுத்தவரை இரண்டுமே அறிவியல் தான்! “சூரியனை பூமி சுற்றுகிறது; பூமி நீள்வட்டவுரு வடிவத்தில் உள்ளது” என்று தொலைநோக்கி மூலம் கண்டறிந்து புலப்படுத்தியது வானியல். இதற்கு நேர்மாறாக, பூமி தட்டை எனவும், சூரியன் உலகை சுற்றுகிறது எனவும் சோதிடம் பொய்யுரைக்கிறது. ஒரே நேரத்தில் (ஒரே நாள் நட்சத்திரத்தில்) பிறந்த இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையும் வெவ்வேறு விதமாகப் போவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். எனவே, இரண்டில் எது விஞ்ஞானம் என்பது வெளிப்படை.

அந்த காலத்திலேயே மாட்டு வண்டி இருந்தது என்றால், அது முக்கியச் செய்தி ஆகாது; அக்காலத்திலேயே விமானம் இருந்தது என்றால், அது முக்கிய செய்தியாக மாறும். இந்த தந்திரத்தைத் தான் பழமைவாதிகள் கையாண்டு வருகின்றனர். “வைமானிக சாஸ்த்ரா” என்கிற சமஸ்கிருத நூலில், விமானம் தயாரிப்பது எப்படி என்பதற்கான குறிப்புகள் உள்ளதாக மெத்தப் படித்த சனாதனிகள் கூட கதையுரைத்து வந்தனர். இந்நிலையில் நம் நாட்டின் தலைசிறந்த பொறியியல் பல்கலைக் கழகமான “இந்திய அறிவியல் நிறுவனத்தில் (Indian Institute of Science)” வைமானிகா சாஸ்திரத்தில் சொன்னபடி விமானம் தயாரித்துப் பார்த்தனர் (1975). விமானம் பறக்கவேயில்லை. ஏனென்றால், சாஸ்திரத்தில் இருக்கும் சில குறிப்புகள், அடிப்படை இயற்பியல் விதிகளுக்கே எதிராக இருந்துள்ளன.

COVID காலத்தில், அப்படி ஒரு கிருமியே இல்லை என்று சாதித்து வந்தனர். இந்த கருத்து எதிர்ப்பார்த்த அளவுக்கு போணியாகாததால், காலப்போக்கில் “இலுமினாட்டி என்ற ரகசிய குழு தான் கிருமியை அனுப்பி உயிர்களை கொல்கிறது” என்று சீமான், பாரிசாலன் போன்ற கதாசிரியர்கள் விதவிதமாக வதந்திகளை பரப்பினர். பிரெஞ்சு புரட்சியின் போது, அரசிடம் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள, கம்யூனிஸ்ட்கள் ரகசிய குழுக்களாக செயல்பட்டனர். அவர்களே “இலுமினாட்டிகள்” எனப்பட்டனர். அந்த இலுமினாட்டி என்ற சொல்லை 18ஆம் நூற்றாண்டிலிருந்து திருடி, 21ஆம் நூற்றாண்டுக்கு எடுத்து வந்து, ஏதோ 13 முதலாளித்துவ குடும்பங்கள் தான் உலகையே கட்டுப்பாட்டில் வைத்திருப்ப தாகவும், அவர்கள் தான் இலுமினாட்டிகள் என்றும் கட்டுக்கதைகளை இன்றுவரை பரப்பி வருகின்றனர். (உலக மக்கள் மீது கிருமிகளை ஏவினால், அது ஏவியவர்களை தாக்காதா? என்கிற சிந்தனையே இல்லாமல்)

முகக்கவசம் அணிவதால், சுவாசக் கோளாறு ஏற்படும் என்று வதந்தி பரப்பினார்கள். யாரும் 24 மணிநேரமும் முகக்கவசம் அணிந்துகொண்டு இருப்பதில்லை. ஏற்கனவே எந்த கோளாறும் இல்லாதவர்களுக்கு புதிதாக எந்த கோளாறும் முகக்கவசத்தால் உருவாகாது என்று பல ஆய்வு முடிவுகளும் கூறுகின்றன. (எ-கா: 2020 அக்டோபர் National Institute of Health ஆய்வு). எந்த ஆய்வையும் செய்யாதவர்கள், வதந்தி பரப்புவதற்கு மட்டும் கூச்சப்படுவதேயில்லை. தடுப்பூசி மருந்தில் ஒரு எலக்ட்ரானிக் சிப் உள்ளதாகவும், தடுப்பூசி போடப்பட்டவர்களை கண்காணிப்பதற்கு அது பயன்படும் என்றும் போலி அறிவியல் கருத்துகள் பரப்பப்பட்டன. ஊசிமுனை எவ்வளவு மெலிதானது? அதற்குள் ஒரு எலக்ட்ரானிக் சிப்பை நுழைக்க முடியுமா? உலகின் 800 கோடி மக்களையும் கண்காணிக்க வேண்டுமென்றால் எத்தனை பேரை வேலைக்கு அமர்த்த வேண்டும்? யாரோ 13 இலுமினாட்டி குடும்பங்களுக்கு இதுதான் வேலையா? நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா?

நடிகர் விவேக் இறந்த போது, இந்தியாவில் 12 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தது. தடுப்பூசி போட்ட சில நாட்களுக்குள் இறந்தவர்கள் 180 பேர். விவேக்கையும் சேர்த்து 181. அதாவது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இறந்தவர்கள் 0.00015ரூ பேர். அதாவது, 20 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டால், அதில் 3 பேர் இறக்கின்றனர். அந்த 3 பேரும் தடுப்பூசியால் தான் இறக்கின்றனர் என்று நிரூபிக்கப்படவில்லை. அவர்கள் தடுப்பூசியால் தான் இறக்கின்றனர் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அப்படிப் பார்த்தாலும் தடுப்பூசி போட்டவர்களில் 99.999% பேருக்கு மேல் நலமாக உள்ள போது, இதை முழுமையான தோல்வி என்று எப்படி சொல்ல முடியும்?

180 உயிரிழப்பை சுழியம் ஆக்குவதை நோக்கி ஆராய்ச்சிகள் நகர்ந்தால் போதுமல்லவா!! நாம் அனைவரும் காய்ச்சலுக்கு உட்கொள்ளும் paracetamol மாத்திரையைத் தின்று உயிரிழந்தவர்களும் உண்டு. எந்த ஒரு மருந்தும் 100% அனைவருக்கும் ஒத்துக்கொள்ளும் என்று கூறிவிடவே முடியாது.

WhatsApp forward செய்திகளாக வரும் மருத்துவத் தகவல்களும் நம்பகத் தன்மையற்றவை தான். அதிசயப் பழம், அபூர்வ மூலிகை என்றெல்லாம் வரும் விளம்பரங்கள் பெரும்பாலும் மோசடியானதாகவே இருக்கின்றன. டெங்கு காய்ச்சலின் போது, சில பாரம்பரிய மருத்துவர்கள் பப்பாளி இலையை பரிந்துரைத்தனர். அதனை ஆய்வுக்கூடத்தில் வைத்து சோதித்துப் பார்த்தபோது, அது இரத்தத்தட்டுகளின் (Platelets) எண்ணிக்கையை அதிகரிப்பதை கண்டுபிடித்தனர். இதன் விளைவாக பல நவீன மருந்து நிறுவனங்கள் தாமாக முன்வந்து பப்பாளி இலை மாத்திரைகளை சந்தைப்படுத்தின. இவ்வாறாக ஒரு பழமோ இலையோ கீரையோ மருத்துவ குணம்மிக்கதாக இருந்தால், அது ஆய்வுக்குப் பின் தானாகவே மருந்து நிறுவனங்களின் உற்பத்திப் பொருளாக மாறிவிடும். அப்படி மாறாத ஏதோ ஒன்று, ரகசிய மூலிகை, அதிசயக் கனி என்று விளம்பரப்படுத்தப்பட்டால், அது பெரும்பாலும் ஏமாற்றுவேலையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல, சிசேரியன் பிரசவ முறை பற்றிய தேவையற்ற அச்சங்களும் மக்கள் மனத்தில் உள்ளன. இயற்கையான வலிமிகுந்த பிரசவ முறைக்கு “சுகப்”பிரசவம் என்று பெயர் வைத்தது யாரென்று தெரியவில்லை. இந்த இயற்கையான முறையில் குழந்தை பிறந்தால், அது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவியாக இருக்கும் தான். ஆனால் இந்த சுகப்பிரசவம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் போது, தாயின் உயிரையும் குழந்தையின் உயிரையும் காப்பாற்ற சிசேரியன் அறுவை சிகிச்சை அவசியமாகிறது. வேண்டுமென்றே பணத்துக்காக மருத்துவர்கள் இதைச் செய்வதாக பரவலாக ஒரு தவறான நம்பிக்கை சமூகத்தில் நிலவுகிறது. எல்லா துறைகளிலும் பணத்துக்காக நெறிதவறி நடப்பவர்கள் இருப்பதைப் போலவே மருத்துவத் துறையிலும் அவ்வாறு ஒரு சிலர் இருக்கலாம். ஆனால் இதை பொதுமைப்படுத்த முடியாது. சிசேரியனால் காப்பாற்றப்பட்ட உயிர்கள் ஏராளம். 20 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் 3 லட்சம் பிரசவங்களுக்கு 3000 மரணங்கள் நிகழ்ந்து வந்தன. சிசேரியன் பரவலாக மாறியபின், இன்றைய தேதியில் அதே 3 லட்சம் பிரசவங்களுக்கு 130 மரணங்கள் நிகழ்கின்றன. இறப்பு விகிதம் 30 மடங்கு குறைந்துள்ளதை காண முடிகிறது. எனவே, உயிர் காக்கும் சிசேரியன் முறையை கண்மூடித்தனமாக எதிர்ப்பது தேவையற்றதாகும். சிலர் சிசேரியன் பற்றிய மூடநம்பிக்கைகளால் பயந்துபோய், YouTube பார்த்து வீட்டிலேயே பிரசவம் செய்ய முயற்சிக்கின்றனர். சமீப காலங்களில் இதனால் உயிரிழப்புகளும் நடந் துள்ளன. புகைப்படக்கருவி வந்தபோது, மக்கள் அதனை அபசகுனமாகப் பார்த்தனர். ஆனால் இன்று அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறோம். எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்புமே முதலில் எதிர்க்கப்படும்; பின்பு முழுமனதாக ஏற்கப்படும்!

குடிமுறைப் பொறியியல் (Civil Engineering), கட்டிடக்கலை (Architecture) ஆகியவை அறிவியலின் பிரிவுகளாகும். வாஸ்து சாஸ்திரம் என்பது போலி அறிவியல் ஆகும். கணிதம் (Mathematics) அறிவியலாகும். ஆனால் பெயரின் எழுத்துகளை மாற்றினால் வாழ்க்கையே மாறிவிடும் என்று பிதற்றும் எண்கணிதம் (Numerology) ஒரு போலி அறிவியலாகும். இது போல் இன்னும் ஆயிரக்கணக்கான அறிவியல் எள போலி அறிவியல் உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும். பகுத்தறிவு இயக்கத்தில் இருக்கும் நமக்கு, எது அறிவியல்? எது போலி அறிவியல்? என்கிற வேறுபாடு தெரிந்தால் தான், நாம் மக்களை தெளிவு பெறச் செய்ய முடியும். எனவே, நாம் தெளிவோம்! பிறரையும் தெளிவுறச் செய்வோம்!

(சேலம் திராவிடர் விடுதலைக் கழக மாநில மாநாட்டில் ஆற்றிய உரை)

- ம.கி.எட்வின் பிரபாகரன்

Pin It