31.12.2022 அன்று சென்னை, தேனாம்பேட்டை, அன்பகத்தில் நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் :

தீர்மானம் 1

சமூக நீதிக்கு எதிரான, பார்ப்பனர்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கண்டித்து 22-01-2023 ஞாயிறு அன்று, கோவையில் ஒரு மாநாடு நடத்தப்படும்.

 தீர்மானம் 2

 தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியும் , சனாதனப் பிற்போக்குக் கருத்துகளைப் பரப்பியும், சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் போக்கைக் கண்டித்தும், இந்தித் திணிப்பை எதிர்த்தும், சேதுக் கால்வாய்த் திட்டத்தை மீண்டும் தொடங்கக் கோரியும் 28-01-2023 அன்று திருச்சியில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.subavee 730தீர்மானம் 3

மத வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தேசத்தந்தை காந்தியாருக்கு 30-01-2023 அன்று சென்னையில் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும். அதில் பங்கேற்று உரையாற்ற பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்படுவார்கள்.

தீர்மானம் 4

 மதமாற்றத் தடைச் சட்டம், பொது சிவில் சட்டம் ஆகியனவற்றைக் கொண்டு வர முயற்சி செய்யும் இந்திய ஒன்றிய அரசின் பாசிச, சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து, வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி வேலூரிலும், பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தூத்துக்குடியிலும் இரண்டு மாநாடுகள் நடத்தப்படும்.

தீர்மானம் 5

வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்கும் நடைமுறையை செயல்படுத்துவது குறித்து ஆர்‌.வி.எம் முறை (ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு முறை) அரசியல் கட்சிகளின் கருத்தைக் கேட்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இந்த முயற்சியை எதிர்த்திட வேண்டும் என்றும், யாராகிலும் அவரவர் இருப்பிடம் சென்றே வாக்களிக்கும்படி செய்ய வேண்டும் என்றும் இக்குழு அனைத்துக் கட்சிகளையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6

தமிழ்நாட்டு அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் சரியான அளவில் சென்று சேரும் வகையில் மக்கள் ஐடி என்கிற அடையாள அட்டை வழங்குவதாகத் தமிழ்நாடு அரசு எடுத்திருக்கிற நடவடிக்கையை இச்செயற்குழு பாராட்டி வரவேற்கிறது. மேலும், இந்த அடையாள அட்டையை எக்காரணம் கொண்டும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த எவருக்கும் வழங்கிவிடக் கூடாது என்றும், இது விசயத்தில் தமிழ்நாடு அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைச் செயலை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்விசயத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்நாடு அரசையும், பட்டியல் சமூக மக்களைக் கோவிலுக்குள் அழைத்துச் சென்று தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக, உறுதியான நடவடிக்கையை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோரையும் இச்செயற்குழு உளமாறப் பாராட்டுகிறது.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It