local body election countingஆளுங்கட்சி என்னும் அதிகாரம், அள்ளிக் கொட்டிய பணம் எல்லாவற்றையும் தாண்டி, எதிர்க்கட்சியான திமுக, உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்களைப் பெற்று வெற்றி முகம் காட்டியுள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குனேரி, இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றியைக் கணக்கில் கொண்டு, தமிழக உள்ளாட்சித் தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்ற மமதையில் இருந்தது ஆளுங்கட்சியான அதிமுக.

ஆனால், மக்கள் முடிவை மாற்றிச் சொல்லியுள்ளனர். இன்னும் சில இடங்களுக்கு மட்டுமே முடிவு வர வேண்டி இருக்கும் சூழலில், 04-01-2020 காலை நிலவரப்படி மாவட்டக் கவுன்சில், ஒன்றியக் கவுன்சில் என இரு நிலைகளிலும், திமுக கூடுதல் இடங்களைப் பெற்று முன்னணியில் உள்ளது.

தேர்தல் முடிவுகளின்படி,

   திமுக  அதிமுக
 மாவட்டக் கவுன்சில்  272  240
 ஒன்றியக் கவுன்சில்  2,356  2,136

கடந்த பல ஆண்டுகளாக, உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெற்றுள்ளது. இப்போது அந்த வரலாறு திருத்தி எழுதப்பட்டுள்ளது.

பொதுவாக உள்ளாட்சித் தேர்தல்களில் பிற கட்சிகளும், சுயேட்சைகளும் சில இடங்களில் வெற்றி பெறுவதுண்டு.

ஆனால் இம்முறை அந்த நிலையிலும் ஒரு மாற்றம் தெரிகிறது. மிக மிகப் பெரும்பான்மையான இடங்களை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே பங்கு போட்டுக் கொண்டுள்ளன.

இந்த முடிவுகளும் கூட முழுமையானவை என்று சொல்ல முடியாது. பல இடங்களில் அதிமுக பல தில்லுமுல்லுகளை அரங்கேற்றியுள்ளது.

கடுமையான போராட்டங்களுக்குப் பின்பே திமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அஞ்சல் வாக்குகளை யார் முன்னிலையில் எண்ணிணீர்கள் என்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில், தேர்தல் அதிகாரியைப் பார்த்துக் கேட்க, அவர் விடை சொல்ல இயலாமல் தவிக்கும் காட்சி காணொளியாக நாடெங்கும் பரவிக் கொண்டுள்ளது.

இது, ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு! இப்படித்தான் பல இடங்களில் நடந்துள்ளது.

எனினும் இவை எல்லாவற்றையும் தாண்டி இத்தேர்தலில் திமுக கூட்டணி பெற்றுள்ள வெற்றி ஒரு மாபெரும் வெற்றியாகும்!

- சுப.வீரபாண்டியன்

Pin It