தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்புகளை அளித்து வரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை பதவி நீக்கம் செய்ய கோரும் இம்பீச்மென்ட் தீர்மானத்திற்கான மனுவை தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 120 மக்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் வழங்கியிருக்கிறார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1950 பிரிவு 124 (4) மற்றும் நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968 ஆகியவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்கம் தொடர்பான வழிமுறைகளைக் குறிப்பிடுகிறது. மேற்கூறிய பிரிவுகள் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி நீக்கத்திற்கும் பொருந்தும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 128 குறிப்பிடுகிறது. அதன்படி நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அவர்களின் மீது இம்பீச்மென்ட் கொண்டுவர எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரி மக்களவையில் குறைந்தபட்சம் 100 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களும் கையெழுத்திட்டு மனு அளிக்க வேண்டும். பின்னர் அந்த மனுவை மக்களவைத் தலைவர் ஏற்றுக்கொண்டால் 3 நபர்களைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் பொதுவாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்லது ஒரு மூத்த நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, சட்ட நிபுணர் என 3 பேர் இருப்பார்கள். இந்தக் குழு நீதிபதி மீதான புகாருக்கான ஆதாரங்களை ஆராய்ந்து விசாரிக்கும். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நீதிபதியின் விளக்கத்தையும் விசாரணைக் குழு கேட்கும். இதன் பிறகு விரிவான அறிக்கையை மக்களவைத் தலைவரிடம் விசாரணை குழு சமர்ப்பிக்கும். நீதிபதி மீது தவறு உறுதி செய்யப்படும் பட்சத்தில் அந்தத் தீர்மானம் மீது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதமும் அதன் பின்னர் வாக்கெடுப்பும் நடத்தப்படும். பதவிநீக்கம் செய்ய அவையின் மொத்த உறுப்பினர்களில் 50% ஆதரவு அல்லது அப்போது அவையில் இருக்கும் உறுப்பினர்களில் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். இல்லாவிட்டால் தீர்மானம் நிராகரிக்கப்படும். ஒருவேளை ஆதரவு கிடைத்துவிட்டால், அந்தத் தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிபதியை பதவி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிடுவார். இதுவே இம்பீச்மென்ட் தீர்மானத்திற்கான நடைமுறை.

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் தான் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் வழங்கி வருகிறார் என்று மக்கள் சந்தேகிக்கும் சூழலில் அவர் மீதான இம்பீச்மென்ட் மனுவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்பாரா என்பது ஐயம் தான்.

Proved Misbehaviour, Incapacity, Dishonesty, Failure to perform duty, Lack of Integrity போன்ற அம்சங்களை இம்பீச்மென்ட் தீர்மானத்திற்கானஅடிப்படைகளாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்திருக்கிறது. இவை அனைத்துமே நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அவர்களுக்கு பொருந்துவதால் இந்தியா கூட்டணி கட்சிகள் இவரை பதவி நீக்கம் செய்யக் கோரி இம்பீச்மென்ட் மனுவை சமர்ப்பித்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 75 ஆண்டுகளில் 9 நீதிபதிகள் மீது மட்டும் தான் இம்பீச்மென்ட் தீர்மானம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி பதவிக்கு வருவதற்கு முன்பு உச்சநீதிமன்ற நீதிபதி ராமசாமி (1993), கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென் (2011), சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் (2011) ஆகிய மூன்று நீதிபதிகள் மீது மட்டுமே இம்பீச்மென்ட் கொண்டு வரப்பட்டது.‌ மூவருமே தார்மீக அடிப்படையில் தங்களது பதவியை விட்டு விலகினர். பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தற்போது வரை ஆறு நீதிபதிகள் மீது இம்பீச்மென்ட் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கங்குலி (2015) மீதான புகார் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற விசாரணை குழுவின் முடிவாலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.நாகர்ஜுனா ரெட்டி (2017) மீதான புகார் மனுவில் கையெழுத்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை திரும்பப் பெற்றதாலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா (2018) மீதான புகார் மாநிலங்களவையில் போதிய ஆதரவில்லை என்பதாலும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.‌ அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் (2024), அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா (2025) மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் (2025) மீதான புகார்கள் தற்போது நிலுவையில் இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள இம்பீச்மென்ட் தீர்மானம் பா.ஜ.க ஆதரவுடன் தோற்கடிக்கப்படலாம். ஆனாலும் இந்திய நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் ஒரு நீதிபதியின்‌ சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் குறித்து நாடு தழுவிய அளவில் விவாதிக்க இதுவே சரியான வழிமுறையாகும். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் முடிவு எப்படி அமைந்தாலும், "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்று கருதி நீதி பரிபாலனம் செய்யாமல் மதச்சார்புடன் நடந்து கொள்ளும் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அவர்கள் நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதே மக்கள் மன்றத்தின் தீர்க்கமான முடிவாகும்.

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.