“Great popular movements are not mere accidents of history. They are the outcome of the urge of the people for an assertion of the true nature of their corporate personality. Often humble and obscure at their source, they swell into oceanic proportions on their march towards their destination. Generally, these movements are noticed only when they reach their final crescendo. We then work back laboriously to trace their beginning.”

- S.Vedaratnam, A Plea for Understanding: A Reply to the Critics of the Dravidian Progressive Federation

“மாபெரும் மக்கள் இயக்கங்கள் வரலாற்றின் வெறும் விபத்துகள் அல்ல. அவை, மக்கள் தங்கள் நிறுவன ஆளுமையின் உண்மைத் தன்மை மீது கொண்ட உறுதிப்பாட்டின் தூண்டுதலால் விளைந்தவை. பெரும்பாலும் அடக்கமாகவும் ஆரவாரமின்றியும் தோன்றும் அவ்வியக்கங்கள், தங்கள் இலக்கை நோக்கி அணிவகுத்துச் செல்லும் போது கடல் விகிதத்தில் பெருகுகின்றன. பொதுவாக, இவ்வியக்கங்கள் அவற்றின் உச்சத்தை எட்டும் போது மட்டுமே கவனிக்கப்படுகின்றன. அதன்பிறகு, அவற்றின் தொடக்கத்தைக் கண்டறிய நாம் கடினமாக உழைக்கிறோம்.”

rule of the commoner1951ஆம் ஆண்டு நடைபெற்ற திமுகவின் முதல் மாநில மாநாட்டில், கழகத்தின் மீதான விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட துண்டறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை. இவ்வரிகளுக்கு ஏற்ப இன்று தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் திராவிட இயக்க அரசியலின் அடித்தளமாய் அமைந்து ஆலமரமாய் உறுதியோடு நிற்கும் திமுக கழகத்தின் தோற்றம் குறித்தும், தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் அரசியல் குறித்தும் ஆய்வு செய்து, “Rule of the commoner” (சாமானியர்களின் ஆட்சி) என்கிற நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்நூலில் இடம்பெற்றுள்ள தொடக்க வரிகளும் இதே வரிகள்தான்.

சிறந்த ஆய்வாளர்களான, விளங்கும், அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன், அசோகா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், ஆய்வாளர் வி எம் எஸ் சுபகுணராஜன் ஆகியோர் இணைந்து இந்நூலை உருவாக்கி இருக்கிறார்கள்.

மூவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, மூவருமே 1960,70களில் தமிழ்நாட்டு அரசியலில் திமுகவின் எழுச்சி தொடங்கிய காலகட்டத்தில் வளர்ந்தவர்கள்.

இந்திய ஒன்றியம் குடியரசாக உருவானதற்குப் பின்பு, இந்தியாவில் தன்னந்தனியாக, உறுதியான மாநிலக் கட்சியாக உருவானது திராவிட முன்னேற்ற கழகம்.

காலங்காலமாக ஒடுக்கப்பட்டு, கல்வி மறுக்கப்பட்ட எளிய பின்னணியில் இருந்து வந்த சாமானியர்களால் உருவாக்கப்பட்ட இவ்வியக்கம் அதன் தொடக்கம் முதல் சந்தித்த விமர்சனங்கள், இடர்ப்பாடுகள், அரசியல் வன்மங்கள் ஆகியவற்றைக் கடந்து திமுக உருவாக்கிய சாமானியர்களின் ஆட்சியைப் பற்றிய ஆய்வாக இந்நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

முதன்மைக் கூறாக இந்நூல் திமுகவின் அரசியலாக சொல்லப்படுவது, திராவிட உணர்வையும் தமிழ் உணர்வையும் இணைத்து திமுக உருவாக்கிய அரசியலின் கருப்பொருள் ஆரிய - திராவிட, பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் அரசியலே என்பதாகும்.

 1949 இல் திமுக கழகம் தொடங்கிய காலம் முதல் 1967இல் சாமானியர்களின் ஆட்சியாக திமுகவின் ஆட்சி தமிழ் நாட்டில் மலர்ந்தது வரையிலான காலகட்டத்தில் உருவாகி, இன்று வரை நிலைபெற்றிருக்கும் வெகு மக்கள் அரசியல் இந்நூலில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

திமுகவின் மீது வைக்கப்பட்ட மூன்று முக்கியமான விமர்சனங்களுக்கு ஆய்வுப் பூர்வமான பதிலை இந்நூல் அளித்திருக்கிறது. அரசியல் முதிர்ச்சியில்லாத, தமிழ் இனவாத இளைஞர்களால் ஆட்சி நடத்த முடியாது என்றும், கல்வியறிவு இல்லாத, படிக்காத, நாகரிகம் குறைந்த இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிர்வாகம் கெட்டுப் போய்விடும் என்றும், வார்த்தை ஜாலம் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் என்றும், கூத்தாடிகளாக நாடகம் திரைப்படம் என்று இயங்கும் இவர்கள் அரசியலுக்குத் தகுதியற்றவர்கள் என்றும் அன்றைய காங்கிரசாரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோல் இடதுசாரிகள், திமுக மார்க்சியத் தத்துவங்களைப் புறக்கணித்து முதலாளித்துவத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிலர், பார்ப்பனியத்தை எதிர்க்கிற பெயரில் இடைநிலை ஆதிக்க சாதிகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிப்பதே திமுகவின் அரசியல் என்றும் முன்வைத்த விமர்சனங்களுக்குத் திமுகவின் அடித்தட்டு மக்கள் நலனில் இருந்து தொடங்கும் அரசியல் செயல்பாடுகள் ஆய்வுகுட்படுத்தப்பட்டு இந்நூலில் பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

திமுக முன்வைத்த சுய நிர்ணய உரிமையுடன் கூடிய திராவிடக் கூட்டமைப்பு பற்றியும் இதை வைத்து தமிழ்த் தேசியர்கள், திமுக திராவிடம் என்கிற பெயரில் தமிழர் உரிமைகளுக்கு எதிரானது என்று சொல்லும் விமர்சனங்களுக்கும் இந்நூலில் பதில் ஆய்வுப்பூர்வமான பதில்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

சாமானியர்களின் கட்சியாகத் தோன்றி, ஆட்சியைப் பிடித்து, திராவிட இயக்க அரசியலை வெகுமக்கள் அரசியலாக்கியிருக்கும் திமுகவின் வரலாறு உலக அரசியல் வரலாற்றில் முதன்மை பெறுவதை எந்த முன்முடிவும் இன்றி இந்நூலைப் படிப்பவர்களால் விளங்கிக் கொள்ள முடியும்.

- மா.உதயகுமார்

Pin It