“இதுதானா நீங்கள் சாதியை ஒழித்தது?’’

“இதுதானா திராவிட மாடல்?’’

“இதுதானா திராவிட இயக்கம் சாதித்தது?’’

“பெரியார் மண் என்பது இதுதானா?’’

- சமூக ஊடகங்களில் இந்தக் கேள்விகள் பரவலாக விரவிக் கிடக்கின்றன. நாங்குனேரி மாணவர்களுக்கு எதிரான ஜாதீய வன்முறைக்குத்தான் என்றில்லை,

மேல்பாதி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்து இடைநிலைச் சாதியினர் போராடிய போதும், வேங்கை வயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட போதும் இது மாதிரியான குரல்கள் ஓங்கி ஒலித்த வண்ணமே இருந்தன, இருக்கின்றன.anna periyar and karunanidhiஇந்தக் குரல்களின் சொந்தக்காரர்கள் எல்லாம் யார் என்று பார்த்தால், எல்லோரும் சமூக ஆர்வலர்களோ, ஜாதியற்ற சமத்துவ சமூக விரும்பிகளோ, சமூகநீதிக் காவலர்களோ அல்ல. அத்தனைபேரும் ஜாதிப் பற்றாளர்கள்!

ஜாதிகாரணமாகத் தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கிற பட்டியல் சமூக மக்களைக் கூட ஜாதி வெறி ஆட்கொள்கிறது,

ஜாதி ஆதிக்கவாதிகளாக இருப்போரையும் கூட அது இழிவுபடுத்தி ஒரு கட்டத்தில் அழிவை நோக்கி இழுத்துப் போகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லா ஜாதிகளையும் கீழே தள்ளி நானே அனைவருக்கும் எஜமானன். “நானே மூளைபலம் மிக்க உயர்குடி. நாடாளும் அரசனே ஆனாலும் அவனும் எனக்குக் கீழேதான். ஆண்டவனே ஆனாலும் என்மந்திரத்துக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்” என்கிற உயர்ஜாதி ஆணவத்தில் இன்றளவும் மேலாதிக்கம் செய்கிறவர்கள் பார்ப்பனர்கள்.

பார்ப்பனர் அல்லாத சமூக மக்களையெல்லாம் பொய் கதைகள் புனை சுருட்டுகள், புராண இதிகாசக் கற்பனைகளால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமை கொண்டிருந்த பார்ப்பன சமூகத்தை அதன் மேல்ஜாதி ஆதிக்கத்தை எதிர்த்து இதர சமூக மக்களிடம் சமத்துவத்தைப் பேசி அணிதிரட்டி, சமூக நீதிக்காகப் போராடி அதில் குறிப்பிட்ட அளவு வெற்றியும் ஈட்டியிருக்கிற இயக்கம் திராவிட இயக்கம்.

பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூக மக்களிடையே இருந்த ஜாதிப் பிரிவினைகளை மெல்லக் குறைத்து சமத்துவ சமூகம் நோக்கிய பகுத்தறிவு பயணத்தில் இணைந்து பயணிக்கச் செய்தது திராவிட இயக்கம்.

பிரிந்து விழவேண்டிய தன்அடிமைகளை இப்படி வேற்றுமை களைந்து இணைந்து எழவைத்தாரே என்கிற கோபம்தான் பெரியார் மீது அக்கிரஹார வாசிகளுக்கு இன்னமும் கனன்று கொண்டே இருக்கிறது.

பெரியாரின் சமத்துவ சமூகக் கனவுகளுக்கு வண்ணம் தீட்டி, வடிவம் கொடுத்து உயிர்ப்பிக்கவும் செய்கிறதே திராவிட மாடல், என்கிற வன்மம்தான் திமுக மீது அவர்கள் வெறுப்பைக் கக்குவதன் காரணம் .

திராவிட இயக்க எதிர்ப்பை, பெரியார் எதிர்ப்பை, திமுக எதிர்ப்பை இவர்கள் நேரிடையாக கையாளத் துணிவற்று தங்கள் குலவழக்கப்படி சுக்ரீவன்களையும் விபீஷணன்களையும் அனுமன்களையும் ஏவி விடுகிறார்கள்.

அந்த ஏவல் கூட்டத்தின் கூக்குரல் தான் மேற்கண்ட ஏளனக் கேள்விகள்.

இதைக் கூக்குரல் என்பதை விட ஊளைச் சத்தம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

திராவிட இயக்கம், பிரிந்து கிடக்கும் சமூகத்தை ஒன்றுபடுத்தி உரிமை முழக்கம் எழுப்பச் செய்த இயக்கம்!

பகை இலக்கைச் சரியாக அடையாளப்படுத்தி அவன் சூழ்ச்சியின் ஆணிவேரை அசைத்துப் பகை வென்ற தலைவர் பெரியார்.

திராவிட இயக்கமும் பெரியாரும் மேடையில் போட்ட தீர்மானங்களை கோட்டைக் கொத்தளத்து ஆணைகளாக மாற்றியது திமுகழகம்! மாற்றி வருவது திராவிட மாடல்!

நீங்கள்தான் மாமன்னன் ரத்தினவேலு கதாபாத்திரத்தைக் கொண்டாடினீர்கள்? ஆதிக்கத் திமிரும், ஜாதி ஆணவமும், காட்டுமிராண்டித்தனமுமான ஒரு பிம்பத்தை ரசித்துக் கொண்டாடுகிற உங்கள் மனோபாவத்தால் தூண்டப்பட்ட சிறுவர்களில் சிலர் இன்று சிறையில் கிடக்கிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருவர் உயிருக்குப் போராடியபடி மருத்துவமனையில் கிடக்கிறார்கள். இந்தப் பேரதிர்ச்சியில் ஒருவர் இறந்தே போய்விட்டார்.

இந்தச் சமூகத்தை இப்படிச் சிதைத்துப் போட்ட குற்றவாளிகள் நீங்கள். குலப்பெருமை, ஜாதிப்பெருமை பேசி பிஞ்சு மனதில் நஞ்சைக் கலந்த நாசகாரர்கள் நீங்கள். திராவிட மாடல் குறித்தும், பெரியார் குறித்தும் எந்தக் கேள்வியும் எழுப்புவதற்குத் தகுதியற்றவர்கள் நீங்கள்.

ஆனால், உங்களுக்கும் சேர்த்து, சமத்துவத்தை, சமூக நீதியை வேண்டுகிறது திராவிட இயக்கம். உங்கள் வளரிளம் தலைமுறைக்கும் சேர்த்து கல்வியை, அறிவைப் புகட்டி அவர்களையும் மானத்தோடு வாழவைக்கப் போராடுகிறது திராவிட மாடல்.

மானத்தை விற்று ஈனத்தைச் சுவைப்போராக இருப்போர் கொஞ்சம் திருந்துங்கள்! பெரியாரைப் படித்து திராவிடத்தைக் கரம்பிடித்து திராவிட மாடலின் துணையோடு கரைசேருங்கள்!

ஆம், மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!

- காசு. நாகராசன்

Pin It