1992 ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 6 ஆம் நாள். இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கருப்பு நாள்!

16 ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் பாபரால் கட்டப்பட்டு, இஸ்லாமியர்களின் வழிபாட்டு இடமாகவும், தொல்பொருள் நினைவுச் சின்னமாகவும் விளங்கிக் கொண்டிருந்த பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக ஆக்கப்பட்டது. அதில் இருந்து 10 நாட்களுக்குப் பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி மன்மோகன்சிங் லிபரான் தலைமையில் ஒரு விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டு, அது 48 தடவைகள் கால நீட்டிப்புப் பெற்று, 17 ஆண்டுகளுக்குப் பின் 2009 ஜூன் 30 ஆம் தேதி தன் அறிக்கையை ஏறத்தாழ 1000 பக்கங்களுடன் மத்திய அரசிடம் அளித்தது லிபரான் கமிசன்.

இவ்வறிக்கை 2009 நவம்பர் 24 ஆம் நாள், நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை இரு அவைகளிலும் வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம். இந்த அறிக்கையில், பாபர் மசூதி இடிப்பு இந்துக்களின் மனக் குமுறலால் ஏற்பட்டது அல்ல என்றும், திட்டமிடப்பட்ட செயல் இது என்றும் குறிப்பிட்டுள்ள நிலையில், 68 பேர்களின் மீது இவ்வறிக்கை குற்றம் சுமத்தியுள்ளது.

இதில் முதல் இடத்தில் முன்னாள் பிரதமரும், முன்னாள் ஆர்.எஸ்.எஸ் காரருமான அடல் பிகாரி வாஜ்பேயி, முன்னாள் ஆர். எஸ். எஸ் காரர் லால் கி­ன் அத்வானி உட்பட ஆர். எஸ். எஸ் சின் அரசியல் பிரிவுக் கட்சியான பாரதிய ஜனதாவின் முரளி மனோகர் ஜோ´, அந்நாளைய உத்திரபிரதேச முதல்வர் கல்யாண்சிங், விஸ்வ இந்து பரிசத் கிரிராஜ் கிஷோர், விஸ்வ இந்து பரிசத் அசோக் சிங்கால் என ஒரு பட்டியலே நீளுகிறது.

பாபர் மசூதியை இடிப்பதற்கு சங்பரிவாரங்கள் திட்டமிட்டதாகவும், இதில் மிதவாதிகளாகத் தங்களைக் காட்டிக் கொண்ட வாஜ்பேயி, அத்வானிக்குப் பங்கு இருக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதுமட்டுமல்ல, இந்தத் தலைவர்களுக்குச் சந்தேகத்தின் பலனைக் கொடுத்து, பாபர் மசூதி இடிப்புக் குற்றத்தில் இருந்து விடுவித்து விடக் கூடாது என்று லிபரான் கமிசனின் அறிக்கையில் கூறியிருப்பது முக்கியமான செய்தி.

தொடர்ந்து மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு மாறாக இவர்கள் நடந்துள்ளனர். செய்யக் கூடாத குற்றச் செயலைச் செய்துள்ளனர் இந்தப் போலி மிதவாதிகள். இதைவிடப் பெரிய துரோகமோ, குற்றமோ ஜனநாயகத்தில் நடந்து இருக்க முடியாது என்று அழுத்தமாகச் சொல்லியிருப்பதில் இருந்து பா.ஜ.க. ஒரு மிதவாதக் கட்சியல்ல, அதன் தலைமைத் தலைவர்கள் உள்பட பிறரும் போலி மிதவாதிகள் அதாவது தீவிரவாதிகள் என்ற தொனியில் அறிக்கை இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

பாபர் மசூதி இடிப்பதில் ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்துபரிசத், பஜ்ரங்தள், சிவசேனை மற்றும் பாஜகவின் முன்னணித் தலைவர்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது என்பதை நீதிபதி லிபரான் தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார். முக்கியமாக, இந்துக்களின் மனக் குமுறலால், தன்னிச்சையாக வெளிப்பட்ட ஆவேசம் மசூதி இடிப்பு என்றும், முன்கூட்டியே திட்டமிட்டு இது நடத்தப்பட்டதல்ல என்றும், வ ெளிநாட்டுச் சக்திகள் அரங்கேற்றிய சதி என்றும் தமது கற்பனைக்கேற்பப் பலர் பல விதமாகக் கூறினர் என்று தன் விசாரணை பற்றிக் கூறும் லிபரான், ஆனால் இவை எல்லாமே பொய் என்று திட்ட வட்டமாகத் தனது விசாரணை முடிவில் பதிவு செய்துவிட்டார். இது ஒரு முக்கியமான அறிக்கை.

மதம் சாரா நாடென்றும், ஒருமைப்பாடு என்றும் பேசிக் கொண்டிருக்கும் இந்தியாவில், பாபர் மசூதி இடிப்புக்குப் பின் நிகழ்ந்த மதக் கலவரம், தீயிட்டுக் கொளுத்தி அழிக்கப்பட்ட உயிர்கள், இப்படி மனித மாண்புக்கு அப்பாற்பட்டு அனைத்தும் நடந்தேறியது என்றால், அதற்கு ‘ அகண்ட பாரத் ’, ‘ ராமர் பூமி ’ என நச்சு விதைகளைத்தூவும் இந்துத்துவ அமைப்புகளே காரணம் என்பதும் இப்பொழுது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந்த அறிக்கையைப் பார்த்தால் இந்தியாவின் எதிர்காலம் இப்பொழுதே தெரிகிறது அச்சத்துடன் இருட்டாக! உரிய நடவடிக்கையை அரசு எடுத்தால் மட்டுமே, மக்களுக்கு நம்பிக்கை வரும் - ஒரு ஒளிக்கீற்றாக!

- எழில்.இளங்கோவன்

Pin It