அண்ணல் அம்பேத்கர் அவர்களே வணக்கம். நாளை ஏப்ரல் 14, உங்கள் பிறந்தநாள். எங்கள் ‘கருஞ்சட்டைத் தமிழர்’ களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அண்ணலே! மதவாதம், இனவாதம், சாதியவாதம், சர்வாதிகாரம் உள்ளிட்ட கொடுமைகளை எதிர்த்து மக்களுக்காக, சமத்துவத்திற்காக உங்கள் நண்பர் தந்தை பெரியாருடன் போராட்டங்கள் நடத்தினீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் இவைகளைச் சீரழித்த நரேந்திர மோடி, மீண்டும் பிரதமராக ஆகவேண்டும் என்று கடந்த 10ஆம் தேதி வேலூர் பிரச்சாரத்தில் பேசினார்.

அண்ணலே, தமிழ் தெரியவில்லையே என்று வருந்துகிறேன் என்று (மகிழ்ச்சியுடன்) வேலூரில் பேசினார்.

அயர்லாந்தைச் சேர்ந்த ராபர்ட் கால்டுவெல், கனடாவைச் சேர்ந்த ஜி.யு.போப், இத்தாலியைச் சேர்ந்த ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) போன்ற அயலவர்கள் எல்லாம் இங்கு வந்து தமிழ் படித்துத் தேர்ந்தார்கள். ஆனால் இங்கே இருக்கும் மோடிக்குத் தமிழ் தெரியவில்லையாம், வருந்துகிறாராம். என்னே உலக மகா நடிப்பு!

தி.மு.க ஊழலுக்குக் ‘காப்பிரைட்’ டாம், சொன்னார் மோடி. அங்கே அவர் தேர்தல் பத்திர ஊழல் குறித்து வாயேதும் திறக்கவில்லையே ! ஏன்? ‘பிஎம்’ கேர் ஊழலைப் பற்றிப் பேசவே பதறுகிறார் மோடி. அவை மோடிக்கு ஊழலாகத் தெரிய வில்லையா?

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் பள்ளிக் ‘குழந்தை’ களிடம் எல்லாம் போதைப்பொருள் புழக்கத்தில் இருக்கிதாம். ஒரு பிரதமர் பேசக்கூடிய பேச்சா இது! போதைப் பொருள்களின் குடோனாக குஜராத் அல்லவா திகழ்கிறது. இதுவும் அவருக்குத் தெரியாமலா இருக்கிறது!

மொழியாலும், மதக்தாலும், ஜாதியாலும் தி.மு.க மக்களைப் பிரிக்கிறதாம். மோடி தன்னை நினைத்துக் கொண்டே இப்படிப் பேசுகிறார், என்பது தெளிவாகத் தெரிகிறது.

கச்சைத் தீவை காங்கிரஸ் கட்சி இலங்கைக்குத் தாரைவார்த்து விட்டது என்று நீலிக்கண்ணீர் வடித்த அவர், அவரின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ஏன் அதை மீட்கவில்லை என்பதைப் பற்றி மூச்சே விடவில்லை மோடி!

தமிழ்நாட்டு மீனவர்கள் கடலில் சிங்களர்களால் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று அங்கே பேசினார் மோடி. உண்மைதான்!அந்தக் கொடுமையை ஏன் தடுக்கவில்லை பிரதமர். அதுகுறித்து ஏன் வாய் திறக்கவில்லை, அவர்.

தி.மு.க பெண்களை இழிவு படுத்துகிறதாம் சொன்னார் மோடி, வேலுரில். மணிப்பூரில் பெண்கள் நிர்வாண நிலையில் அவமானப் பட்டார்களே, யாரால் என்பதைச் சொல்வாரா அவர்? உலகம் சுற்றும் மோடி இன்றுவரையும் மணிப்பூருக்குள் நுழையவில்லையே?

பெருமகனாரே! இப்படியும் ஒரு பிரதமர் எங்களுக்கு வாய்த்து விட்டார். மக்களையும், சமத்துவத்தையும், பேணிய உங்கள் வழியில் நின்று, உங்கள் தோழர் பெரியார் அவர்கள் வழிநின்று ஜனநாயகம் காப்பாற்றப்பட, சர்வாதிகாரம் வீழ்த்தப்பட மோடியின் ஆட்சியை வீழ்த்தி, இந்திய அரசியல் சாசனத்தைக் காக்க ‘இந்தியா கூட்டணி’யை வெற்றி பெறச் செய்வோம்!

அடுத்த உங்கள் பிறந்த நாள் வாழ்த்தை நம்முடைய ‘திராவிட மாடல்’ ‘இந்தியா கூட்டணி’ ஆட்சியில் சொல்கிறோம்!

அண்ணல் அம்பேத்கர் அவர்களே! மீண்டும் உங்களுக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துகள்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It