வேலை நாளுக்குச் சட்டப்பூர்வமான அளவு, முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்க முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது. வேலை நாளுக்கான சட்டபூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும் என்று இம்மாநாடு முன்மொழிகிறது.

-  பன்னாட்டுத் தொழிலாளர் கூட்டமைப்பு, ஜெனீவா,1866

அமெரிக்க நாட்டில் 1873&-79 ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து, தொழில் உற்பத்தி பெருகியது. அமெரிக்காவின் முக்கியத் தொழில் மையமாக விளங்கிய சிகாகோ தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த ஜெர்மானியர்களும், செக்கோஸ்லேவியர்களும் பணிபுரிந்தனர். அவர்களது வாழ்க்கைநிலை பரிதாபகரமானதாக இருந்தது. வாரத்தின் ஆறு வேலை நாள்களில் அவர்கள் அறுபது மணி நேரத்திற்கும் மேலாக உற்பத்தியில் ஈடுபடுத்தப் பட்டனர். தொழிலாளர்களின் கோரிக்கையை முன்னெடுக்கும் தொழிற்சங்கங்கள் ஒடுக்கப்பட்டன.

இந்நிலையில், எட்டு மணி நேரத்தை வேலை நாளுக்கான அளவுகோலாக நடைமுறைப்படுத்துவதை வலியுறுத்தி, 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்தை அறிவித்தன. மே 4 ஆம் நாள், சிகாகோவின் “வைக்கோல் சந்தை சதுக்கம்” (Hay market) என்னும் இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் ஏழு காவல்துறையினரும், நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை அடுத்து நடைபெற்ற விசாரணையில், பலர் கைது செய்யப்பட்டு, இறுதியில்  நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.

தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், 1904ஆம் ஆண்டு, ஆம்ஸ்டர்டாமில் நடந்த பன்னாட்டு சோஷலிச மாநாடு, மே முதல் நாள் அன்று எட்டு மணி நேரம் வேலை நாளாக அறிவிக்கும் கோரிக்கையை முன்னிறுத்திப் போராடுமாறு தொழிற்சங்கங்களுக்கு அறைகூவல் விடுத்தது. இன்று உலக நாடுகளால் மே முதல் நாள், பன்னாட்டுத் தொழிலாளர் நாளாக நினைவுகூரப்படுகிறது.

மே முதல் நாளை 1967 மே தினமாகக் கொண்டாடப் பொது விடுமுறை அளித்தது அறிஞர் அண்ணாவின் தலைமையிலான தி.மு.க ஆட்சி. அறிவிக்கப்பட்ட விடுமுறை தினத்துக்கு 1969ஆம் ஆண்டு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்து, அந்த நாளுக்குச் சட்டம் இயற்றி சட்ட வடிவம் கொடுத்தது, கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சி. இவை வரலாற்றில் குறிப்பிடத்தக்க செய்திகள்.     

Pin It