“கொலை வாளினை எடடா - மிகு

கொடியோர் செயல் அறவே”

என்று போர்ப்பரணி பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் நினைவுநாள் ஏப்ரல் 21.

புதுச்சேரியில் (29.04.1891) பிறந்த பாரதிதாசன் சமுதாயச் சீர்திருத்தம், கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, பெண் விடுதலை, மூடநம்பிக்கை ஒழிப்பு குறித்துப் பல்வேறு பாடல்களை இயற்றிய திராவிட இயக்கக் கவிஞராவார்.

இந்நாள்களில் இராமராஜ்ஜியம் குறித்துப் பொய்யான பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. கவிஞரோ,

”பன்னீ ராயிரம் பாடிய கம்பனும்

இப்பொது மக்கள்பால் இன்தமிழ் உணர்வை

எழுப்பிய துண்டோ இல்லவே இல்லை”

என்றும், “இராமாயணம் என்ற நலிவுதரும்கதை” (சஞ்சீவி பர்வதத்தின் சாரல்) என்றும் அன்றைய காலகட்டத்திலேயே இராமாயணத்தை, அதனை இயற்றிய கம்பரை இடித்துரைத்துள்ளார்.

தமக்குப்பின் ஒருபாட்டுப் பரம்பரையையே விட்டுச் சென்றவர் கவிஞர். ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி, புதுச்சேரி வந்தபோது அவரைக் காவலருக்குத் தெரியாமல் கட்டுமரத்தில் ஏற்றி நடுக்கடல் வரை கொண்டு சென்று வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்த நெஞ்சுரம் மிக்கவர் புரட்சிக் கவிஞராவார்.

”பிள்ளை பெறுவது என்பது பெண்களின் கடமை அல்ல; அவர்களது உரிமை. அவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டல் அவர்களைப் பிள்ளை பெற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தக்கூடாது” என்று பெண்ணுரிமைக் குரல் கொடுத்த தந்தை பெரியாரின் கருத்தை, ”காதலுக்கு வழிவிட்டுக் கருப்பாதை சாத்த / கதவு ஒன்று கண்டறிவோம்” என்று கவிதையில் வடித்தார் கவிஞர். தமது முதல் நூலைக் குத்தூசி குருசாமியின் மனைவி குஞ்சிதம் அம்மையார் வெளியிட பெண்மைக்கு முன்னுரிமை தந்த செயல்வீரர் புரட்சிக் கவிஞர்.

”தொண்டு செய்து பழுத்த பழம்” என்ற பாடலால் தந்தை பெரியாரை நமது கண்முன்னே நிறுத்திய பகுத்தறிவுக் கவிஞரின் நினைவு நாளில், அவரது கவிதைக் கனவுகளை நனவாக்க உறுதி ஏற்போம்.

Pin It