திராவிடம் எனில் சமூகநீதியே என்பதால், திராவிடத்தை நோக்கி வீசப்படும் அம்புகள் அனைத்தும் சமூகநீதிக் கோட்பாட்டைத் தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனை உணர்ந்து, சமூகநீதி ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து வெளிப்பட வேண்டிய நேரம் இது.

arjun sambath 200திராவிட இயக்கக் கோட்பாடுகளைத் தகர்க்க நினைக்கிறவர்கள் தந்திரமான பல வழிகளைக் கையாள்கின்றனர். வரலாற்றைத் திரித்து உரைப்பது, சமமற்றவர்களைச் சமமாகக் காட்டுவது, இன்றைய கட்சிகளைத் தாக்குவதுபோல் தொடங்கி, இயக்கத்தின் ஆணிவேரையே அசைக்க முயல்வது, இனம், மொழி சார்ந்த கோட்பாடுகளைத் தீவிரமாக முன்னெடுப்பதுபோல் முகம் காட்டுவது ஆகியன அவர்கள் கையாளும் வழிகளாக உள்ளன. ஒரு பக்கம் இந்துத்துவம் பேசுகின்றவர்களும் இன்னொரு பக்கம் தமிழ்த்தேசியம் பேசுகின்றவர்களும், இவ்வழிமுறைகளைக் கையாள்கின்றனர். நேரடியாகச் சொல்வதென்றால், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் அறிக்கைகளும் பேச்சுகளும் மேற்காணும் நிலைக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. இவர்கள் மூவருமே பார்ப்பனர் அல்லாதார் என்பதும், பார்ப்பனிய எதிர்ப்பாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்கின்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒற்றுமையாகும்.

அண்மையில் அர்ஜூன் சம்பத், சென்னை ஐ-.ஐ.டி., பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத் தடை தொடர்பான போராட்டத்தில் ஒரு விந்தையான நிலையை முன்னெடுத்துள்ளார். அம்பேத்கர் கொள்கை வேறு, பெரியார் கொள்கை வேறு என்பதால், அம்பேத்கரின் கருத்துகளைப் பரப்புவதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றும், பெரியாரின் கருத்துகளைப் பரப்ப ஒரு நாளும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் (அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் இவர் யார்?) கூறி அவர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். ஏறத்தாழ பா.ஜ.க.,வும் இன்று அதே நிலையை எடுத்துள்ளது. அம்பேத்கரைத் தங்கள் பக்கம் வளைத்துப் போட்டுவிட வேண்டும் என்று அவர்கள் மிக விரைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். “நான் இந்துவாகப் பிறந்தேன், இந்துவாகச் சாக மாட்டேன்”என்று உறுதி மொழி எடுத்து அதனை நிறைவேற்றியும் காட்டியவர் அண்ணல் அம்பேத்கர். ஆனால் அவர் இந்துத்துவத்திற்கு எதிரானவர் இல்லை என்றும் அவரை நவீன மனு என்றும் இந்த இந்துத்துவாதிகள் வாதிடுகின்றனர். இந்துத்துவத்திற்கு ஆதரவானவர் என்பதால்தான் அயல்நாட்டு மதங்களான இசுலாமையோ, கிறித்துவத்தையோ ஏற்காமல், இந்திய மதங்களுள் ஒன்றான பவுத்தத்தை அவர் தழுவினார் என்று விளக்கம் கூறுகின்றனர்.

அம்பேத்கர் 1927ஆம் ஆண்டு மனுநீதியை எரித்தவர். இந்துத்துவத்தை எதிர்த்துப் பல்வேறு கட்டுரைகளையும், ஆய்வுரைகளையும் அவர் எழுதியுள்ளார். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு இன்று நூல்களாகவும் வெளிவந்துள்ளன. இத்தனைக்கும் பிறகு அவரை இந்துத்துவ தலைவர் என்று கூச்சநாச்சமில்லாமல் அவர்களால் மட்டும்தான் கூறமுடியும். அர்ஜூன் சம்பத் போன்றவர்களின் அடிமை விலங்கையும் உடைப்பதற்குத்தான் அய்யா பெரியார் பாடுபட்டார். என்னதான் தன்னை இந்து என்று அவர் பேசிக்கொண்டாலும், இராம.கோபாலனும் அவரும் ஒருநாளும் ஒன்றாக முடியாது. முகநூலில் வழக்கறிஞர் ஜீவன் எழுதி இருப்பது போல, “அவர்கள் கோயிலுக்குள் கருவறையில் நின்று மணியடிப்பார்கள். இவரோ (அர்ஜூன்சம்பத்) கோயிலுக்கு வெளியே செருப்பு டோக்கன் போடலாம்”. அவ்வளவுதான்! இந்தச் சமூகஅநீதியைச் சற்றும் உணராமல், இந்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கும் அர்ஜூன் சம்பத்துகள், விளங்கியோ விளங்காமலோ திராவிட இயக்கத்தை எதிர்த்துக் கொடிபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

pe maniarasan 217விளங்கியே அதனைச் செய்கிறார் தோழர் மணியரசன். அம்பேத்கரை ஏற்றுக்கொண்டு, பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் எதிர்ப்பதில் அர்ஜூன் சம்பத்துக்கும், மணியரசனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தமிழ்தேசக் குடியரசே தங்கள் இலக்கு என்று கூறும் அவர், கிளை மரத்தில் அமர்ந்து அடி மரத்தை வெட்டும் வேலையை அயராது செய்து கொண்டிருக்கிறார். அண்மையில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள் என ஓர் அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கிறார். 1965ஆம் ஆண்டு மொழிப்போரின் 50ஆம் ஆண்டு நினைவாகச் சில ஊர்களில் ஆர்ப்பாட்ட அறிவிப்பை அவர்கள் இயக்கம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழ் மொழி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த அறிவிப்பின் முன்னுரையாக மிகப்பெரிய வரலாற்றுப் பொய்கள் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன.

“மறைமலை அடிகள் 1916இல் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம், சமற்கிருதத் திணிப்பைத் தடுக்கவும் மற்ற அயல் மொழிகளின் நுழைவைத் தடுக்கவும் நிறுவப்பட்டதுதான்”என்கிறார் மணியரசன். தொடர்ந்து, “1965 ஜனவரி 25 தொடங்கி மார்ச் பதினைந்துவரை 50 நாள் மாணவர்களும் மக்களும் சேர்ந்து நடத்திய தமிழ்த்தேசியப் போர் அது. இந்திய அரசு இராணுவத்தை அனுப்பி மாணவர்களையும், மக்களையும் சுட்டுக் கொன்றது. 300 பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர். 10 பேர் வரை தீக்குளித்தும், நஞ்சுண்டும் மாய்ந்தனர்”என்று வரலாற்றின் ஒரு பாதியைக் குறிப்பிடும் அவர், “1938 மொழிப்போர் ஈகம், 1965 மொழிப்போர் ஈகம் ஆகியவற்றைச் சொல்லி வளர்ந்து, ஆட்சியைப் பிடித்த தி.மு.க....” என்று தன் அறிக்கையைத் தொடர்கின்றார். எந்த இடத்திலும், 1938ஆம் ஆண்டு மொழிப்போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்களிப்பையும், 1965ஆம் ஆண்டு மொழிப்போரில் தி.மு.கழகத்தின் பங்களிப்பையும், குறிப்பிட்டு விடாமல், கவனமாக வரலாற்றுப் பொய்களை வாரி இறைக்கின்றார்.

மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் தமிழ் இனத்தின் போற்றுதலுக்கும் வரவேற்புக்கும் உரியது என்பதை நன்றி உணர்வுடையவர்கள் எவரும் மறுக்கமாட்டார்கள். ஆனால், அவ்வியக்கம் தமிழ் அறிஞர்கள், உணர்வாளர்கள் மத்தியில் மட்டும்தான் நிலைபெற்றிருந்தது என்பதையும் மறுக்க முடியாது. தமிழ் இன, மொழி உணர்வை உழைக்கும் வெகுமக்களிடமும் கொண்டு போய்ச்சேர்த்தது தி--.மு.கழகம்தான் என்பதை மறைக்க நினைப்பது மனசாட்சி உள்ளவர்களின் செயலாக இருக்க முடியாது. 1950களில் தங்களின் சமற்கிருதப் பெயர்களை எல்லாம் தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொண்டவர்கள் தி.மு.கழகத்தினர். நமஸ்காரம் நலிவடைந்து ‘வணக்கம்’வழக்கிற்கு வந்ததே தி.மு.கழகத்தின் எழுச்சிக்குப் பின்னர்தான் என்பதை இன்றைய ஆய்வாளர்கள் கூட ஏற்கின்றனர். ஆனால் மணியரசனுக்கு ஏற்க மனம் வரவில்லை.

65இல் தி.மு.கழக ஆதரவுடன் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தமிழ்த்தேசியப் போர் என்கிறார் அவர். போராட்டத்திற்குத் தலைமை வகித்த, எல்.கணேசன் உள்ளிட்ட மாணவர்கள் பெரும்பான்மையோர் திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள். 10 பேர் வரை தீக்குளித்தும், நஞ்சுண்டும் மடிந்தனர் என்று எழுதும் அவர், நெஞ்சில் நேர்மை இருந்தால் அவர்கள் யார் யார், எந்தெந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதையும் சேர்த்து எழுதியிருக்க வேண்டும். அப்படி எழுதியிருந்தால், செத்துப் போனவர்கள் பலர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்னும் உண்மை வெளிப்பட்டிருக்கும். யாரோ செய்த ஈகத்தை அறுவடை செய்வது தி.மு.க-.வா, அறுவடை செய்ய நினைப்பது இவர்களா என்பதை காலம் ஒரு நாள் உணர்த்தும்.

seeman 289கடந்த 24ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மாநாட்டில் வரவேற்புப் பாதாகைகளில் வழிகாட்டித் தலைவர்களின் வரிசை ஒன்று இடம் பெற்றிருக்கிறது. அதில் முதலில் இடம் பெற்றிருக்கிற படம் ஹிட்லரின் படம்தான். நாம் தமிழர் கட்சி, ‘நாம் ஹிட்லர் கட்சி’என்றாகிவிட்டதோ என்னவோ! நாங்கள் ஆட்சிக்கு வந்தால்(?), அன்பான சர்வாதிகாரம் அமுல்படுத்தப்படும் என்கிறார் சீமான். அது எப்படி? கத்தியால் கழுத்தை அறுக்கும்போது, மெதுவாக அறுப்பார்களோ என்னவோ? தங்கள் ஆட்சியில் கோட்டு, சூட்டு, கூலிங்கிளாஸ், தொப்பியைத் தலையில் போட்டுக்கொண்டு, ஆடு, மாடு மேய்க்கும் வேலை அரசாங்க வேலையாக்கப்படுமாம். பாவம், வெயிலில் வெந்து செத்துப் போய்விடுவார்களே நம் மக்கள் என்று வேதனையாக இருக்கிறது. ஆடு, மாடுகளை இலவசமாய்க் கொடுத்தார் அந்த அம்மையார்.  அதனை விரிவுபடுத்தி வேறு திட்டம் வைத்திருக்கிறார் சீமான்.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியை ஒழிப்போம் என்று கூறும் அவர், மறைமுகமாக ஜெயலலிதாவை ஆதரிக்கிறார். ஜெயலலிதாவும், அவர் மீது வழக்குப் போடுவது போல் பாவனை செய்கிறார். ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட ஊழல் வழக்கே ஜனநாயகம் இல்லை என்பது சீமானின் வாதம். அப்படித்தான், தந்தி தொலைக்காட்சி நேர்காணலில் அவர் சொன்னார். ‘தள்ளிவிட்டுக் கூட இல்லை, தானாகக் கீழே விழுந்தவரை, தடிகொண்டு எல்லோரும் அடிப்பது என்ன ஜனநாயகம்?’ என்று ஜெயலலிதாவுக்காக உருகி உருகிப் பேசினார்.

இவர்களுக்கு மட்டுமில்லை, அய்யா பழ.நெடுமாறன், (சசிகலா)நடராசன், தமிழருவி மணியன் எல்லோருக்கும் ஒரே நோக்கம்தான். எப்படியாவது தி.மு.க.வை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்பது!

அது ஒருநாளும் நடக்காது!

Pin It