வேளாண் மக்களிடம் இருந்து நிலங்களைப் பிடுங்கிவிட வேண்டும். அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது மோடியின் அரசு. அச்சட்டத்திற்கு உரிய நில அபகரிப்பு மசோதாவை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

நாடாளுமன்றம் நிராகரித்தால் அதைவிட்டு விட வேண்டும். இது சனநாயக மரபு. மாறாக மீண்டும் அவசரச் சட்டத்தைப் போட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைக்க முயல்வது சர்வாதிகாரத்தின் கூர்மை.

இந்தச் சர்வாதிகாரத்தைச் செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு. காரணம், பெற்ற பலனைத் திரும்பச் செலுத்தும் கார்பரேட்களுக்கான நன்றிக் கடன்.
இப்பொழுது, “சாலைப்போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்டம்” என்ற இன்னொரு சட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறது.

1939ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் மோட்டார் வாகனச் சட்டம் 1988இல் மாற்றிப் புதிதாக இயற்றப்பட்டது. வாகன உற்பத்தி, தகுதிச் சான்று, பதிவுக் கட்டணம், சாலை வரி, ஓட்டுனர் நடத்துனர் உரிமம், இழப்பீடு போன்றவைகளை உள்ளடக்கியது மோட்டார் வாகனச் சட்டம். இவை அனைத்தும் நடைமுறையில் எளிமையாக இருப்பவை.

எடுத்துக்காட்டாக, இச்சட்டப்படி புதிய ஓட்டுனர் உரிமம் பெற மூன்று மாதங்கள் போதும், செலவும் குறைவு. மோடியின் புதிய சட்டம் வருமானால், இதுவரை ஓட்டுனர்களாக உரிமம் பெற்றவர்கள், உரிமக் காலம் முடிந்தவுடன் அதைக் கிழித்துப் போட்டுவிட்டு புதிய உரிமம் பெற வேண்டும். அதற்கு ஆகும் காலம் 11 மாதங்கள், செலவோ ஆயிரங்களில்.

ஓட்டுனருக்கான தேர்வு, உரிமம் வழங்குவது, சாதாரண கனரக வாகனங்கள் உரிமம், சுமையின் அளவு, சாலை விதிகள், டோல்கேட் வசூல் வேட்டை, கட்டண நிர்ணயம் என்று மொத்த வாகன உரிமைகளும் கார்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்குள் அடிமையாய்ப் போய்விடும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இருக்காது. சாலை ஓர வாகனச் செப்பனிடும் கடை இருக்காது. சிறிய தனியார் வாகன உரிமையாளர்கள் இருக்க மாட்டார்கள். உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் அழிந்து போகும். இப்போதைய ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் இருக்காது.

இவை எல்லாம் பெரும் கார்பரேட்டுகளின் கைக்குள் அடக்கம் ஆகிவிடும். அவை என்ன விலை சொல்கிறதோ அதனை, போக்குவரத்துக் கட்டணம் உள்பட மக்கள் சுமக்கத்தான் வேண்டும், சுமந்து அழியத்தான் வேண்டும்.

இதுதான் மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத புதிய சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்டம்.

Pin It