cho-ramasamy 400தலைவர் கலைஞர் பேசும் பொதுக் கூட்டம் என்றால், மக்கள் கூட்டம் அலை மோதிக்கொண்டு திரண்டு வருவார்கள். அப்படித் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்த கலைஞர் ஒருமுறை, ‘இங்கே பெருமளவில் மக்கள் என் பேச்சைக் கேட்கக் கூடியிருக்கிறீர்கள். இவர்கள் எல்லோரின் வாக்குகளும் நமக்குக் கிடைக்கும் என்று நான் நம்பவில்லை’ என்றார். திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு சமூக, அரசியல் சாதனைகளில் வெற்றி பெற்ற இயக்கம்.

தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி, என்றாலும் கலைஞர் சொன்னதுபோல நடந்தும் இருக்கிறது. கலைஞரின் இந்த வாக்குதான் பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திரமோடி குறித்து நம் கணிப்பு.

திருச்சியிலும், வண்டலூரிலும் மோடியை முன்னிறுத்தி மக்கள் கூட்டத்தைக் கூட்டிய பா.ஜ.க.வினர், அந்தக் கூட்டம் ஏதோ மோடியைப் பார்க்கத்தானாக வந்த கூட்டம் போல குதித்துக் கொண்டு, தமிழகத்தில் மோடி அலை வீசுவதாக கூறிக்கொண்டிருக் கிறார்கள். மோடி கூட்டத்திற்குக் கூட்டி வரப்பட்ட மக்கள், அக்கட்சிக்கு வாக்கு களாக மாறுவார்களா என்றால், இல்லை.

துக்ளக் சோ சொல்கிறார், “தமிழகத்தில் பா.ஜ.க. வலுவான கட்சியாக இல்லை என்ற போதிலும் மோடி அலையைத் தமிழகத்தில் உணர முடிகிறது.” ‘என்ற போதிலும்’ மோடி அலையைத் தமிழகத்தில் ‘உணரமுடிகிறது’ என்று தூங்கலோசையில் பேட்டி கொடுக்கும் சோ ராமசாமி மோடியின் நெருக்கமான நண்பர். அவரே அப்படிச் சொல்லும்போது நம்முடைய வைகோ என்ன சொல்கிறார் தெரியுமா? “தமிழக அரசியல் கடந்த பல ஆண்டுகளாக அ.தி.மு.க., தி.மு.க, என்ற சுழலில் சிக்கி உள்ளது. மோடி அலை இந்தச் சுழலை உடைக்கும். மோடியின் மிகப்பெரிய வெற்றி எதிர்காலத்தில் தமிழகத்திலும் பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கும்.”

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோருடன் இருந்து, அரசியல் நடத்திய வை. கோபால்சாமி மீது நமக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. ஆனால் கவுண்டமணியைப் பார்த்து நடிகர் செந்தில் பேசும் வசனங்களைப் போல, மோடியைப் பார்த்து வைகோ பேசும் வசனங்களைக் கேட்கும் போது, சேராத இடந்தனிலே சேர்ந்த பாவம், அவரை இப்படிப் பேச வைத்திருக் கிறது என்பதும் நமக்குப் புரியாமல் இல்லை. ஆனால் வைகோவிற்குத்தான் புரியவில்லை.

அவர் சொல்கிறார் அ.தி.மு.க. என்ற சுழலை மோடி அலை உடைக்கும் என்று. இதற்கும் சோ ராமசாமியே பதில் சொல்கிறார்.

“ஒருவேளை பா.ஜ.க.வால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலோ, மற்ற கட்சிகள் பா.ஜ.க.வை ஆதரிக்க முன் வராவிட்டாலோ, அந்தக் கட்சி வேறு யாரையாவது ஆதரிப்பதைவிட, முதல்வர் ஜெயலலிதாவை ஆதரிக்கலாம். முலாயம் சிங் பிரதமராக பா.ஜ.க. ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை.

மாயாவதி, ஜெயலலிதா இருவரில் யாரை ஆதரிக்கலாம் என்றால், நிச்சயமாக ஜெயலலிதாவுக்குத்தான் பா.ஜ.க. ஆதரவு அளிக்கும்.” தெளிவாகச் சொல்கிறார் சோ. தெளிவாக இருக்கிறது பா.ஜ.க. - ஜெ உள்ளார்ந்த உறவு. பிறகு எப்படி அ.தி.மு.க. சுழலை மோடி அலை உடைக்கும் என்கிறார் வைகோ?

ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய காங்கிரஸ் அரசு செய்த துரோகத்தை பா.ஜ.க. செய்யாது. வாஜ்பேயி பிரதமராக இருந்த போது, ஈழத்தமிழர் பிரச்சினையை அணுகியது போல மோடியும் பிரதமராகி அணுகுவார் என்கிறார் வைகோ.

வேறு வழியில்லை. சோ சொல்வ தைக் கேட்போம். “கூட்டணி நிர்பந்தத் தினால் அவர் இப்படிப் பேசி இருக்கலாம். ஆனால் வைகோ மிகவும் வற்புறுத்துகிற தனி ஈழம், பா.ஜ.க.வினால் ஏற்கப்பட வில்லை. இலங்கை பிளவுபடுவதை பா.ஜ.க.வும் காங்கிரசைப் போலவே எதிர்க்கிறது. அதைத் தவிர விடுதலைப் புலிகளை வைகோ ஆதரிப்பதைப்போல, பா.ஜ.க. ஆதரிக்கவில்லை. மாறாக கடுமை யாக எதிர்க்கிறது. ஆகையால் இலங்கைப் பிரச்சினையில் வைகோ நிலையிலிருந்து பா.ஜ.க.வின் நிலை மாறுபட்டது.” ஆர்.எஸ்-.எஸ்சின் வழித் தோன்றல், பா.ஜ.க.வின் பினாமி, மோடியின் குரல் சோ என்பதை மறந்து விடக் கூடாது.

மோடி, வைகோ சந்திப்புக்குப் பின்னர், ம.தி.மு.க. அலுவலகம் வெளி யிட்ட அறிக்கையில், “நீங்கள் இந்தியில் உரையாற்றினாலும், அம்மொழியைப் புரிந்து கொள்ளாதவர்களைக் கூட, உங்களின் உணர்ச்சி மிக்கக் குரல், உங்களின் கரங்களும், முகமும் வெளிப்ப டுத்தும் பாவனை மக்களை வசீகரித்தது. நீங்கள் ஆற்றிய உரை உன்னதமான சொற் பொழிவாகும்” என்று மோடியிடம் வைகோ புழுங்காகிதம் அடைந்துள்ளார்.

35 ஆண்டுகளுக்கு முன்னால், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இந்தியில் பேச வேண்டும் என்றும், ஐ.நா.வில் இந்தியைக் கொண்டு வர அன்றைய காலகட்டத்தில் 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்றும் பேசியவர், அடல் பிஹாரி வாஜ்பேயி. அவரின், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வின் மறுபதிப்பு, மோடி.

ஆர்.எஸ்.எஸ்.சின் ஏக இந்தியா கொள்கையால் நாளை இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என்று மோடி சொன்னால் என்ன செய்வார் வைகோ?

தந்தை பெரியாரின் பாசறையில் சாதி, மத எதிர்ப்பு எனும் பகுத்தறிவுப் பாடம் படித்த வைகோ, ம.தி.மு.க. உறுப்பினர் இல்லத் திருமணத்தில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட்டில், மோடி அர்ச்சுனனாகவும், வைகோ அவருக்குத் தேரோட்டும் கண்ண னாகவும் வடிவமைக்கப்பட்டிருந்ததை மிகவும் ரசித்துப் பார்த்து, “மோடி அலை வீசுகிறது” என்று சொல்லியிருக்கிறார்.

கருப்புத் துண்டு காவியாகிப் போனது வைகோவின் தோளில். அதனால்தான் சேதுக் கால்வாய்த் திட்டம், சுற்றுச் சூழல் - கடல்வாழ் உயிரினப் பாது காப்பு என்ற போர்வைக்குள் ராமர் பால மாகிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

பா.ஜ.க.வின் நாடகத்தில் வைகோ வேடம் ஒருபுறம் இருக்க, மோடி புதிதாக ஒரு வேடத்தைப் போட்டுக் கொண்டு திரிகிறார்.

பா.ஜ.க.வில் சாதி மதம் என்ற பாகுபாடு இல்லையாம். உயர்வு தாழ்வு என்பது பா.ஜ.க.வில் இல்லையாம். தீண்டாமை என்பது பா.ஜ.கவுக்கு உடன்பாடுடையது அல்லவாம். பா.ஜ.க. மதச் சார்பற்ற, இனச்சார்பற்ற ஒரு சுயம்புவான கட்சியாம்.

இந்துத்துவ ரிக் வேத நூலில் சதுர் வருணப் பிறப்பு சொல்லப்படவில்லையா? கீதையில் நான்கு வருணங்களைப் படைத்தவன் நானே என்று கண்ணன் சொல்லவில்லையா? அயோத்தியில் ராமன் கோயில் கட்டியே தீரவேண்டும் என்று ரத யாத்திரை நடத்தி, செங்கல் சேகரித்து, கரசேவை என்ற பெய ரால் மசூதியை இடிக்க வில்லையா? அதற்குப் பின்புலமாக ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, மோடி இருக்க வில்லையா?

சாவர்க்கர், கோல்வால்கர், போன்றோரின் அகண்ட இந்து பாரதத்தை நோக்கமாகக் கொண்ட இவர்கள் மதச்சார் பின்மை பற்றிப் பேசுவது சாத்தான் வேதம் சொல்வதற்குச் சமம். கேரள மாநிலம் கொச்சியில் பேசிய மோடி, தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு அம்பேத்கர் அளித்த உரிமை களைப் பறிக்க சதி நடக்கிறது என்றும், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு காங்கிரசால் இல்லாமல் போய்விடும் என்று பேசியிருக்கிறார்.

காங்கிரஸ் இருக்கட்டும். இங்கே தமிழ்நாட்டில் என்ன வாழ்கிறது. தலைவர் கலைஞரால் புதிய தலைமைச் செயலக மாகக் கட்டப்பட்ட கட்டிடம், பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது ஜெய லலிதாவால். அங்கே அரசியல் சாசனப் படி, மோடி சொல்லும் டாக்டர் அம்பேத் கரால் உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதா? இல்லையே!

“நான் பாப்பாத்திதான்” என்று சட்டப்பேரவையில் முழங்கிய ஜெயலலிதா அரசுதானே இதைச் செய்கிறது. இவரைத் தானே மோடிக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஆக்க வேண்டும் என்று சோ கூட்டாளிகள் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் சின் இந்துத்துவாதான் பா.ஜ.க. பா.ஜ.கவின் இந்துத்துவாதான் மோடி. மோடி அலை வேறு, மோடி முகம் வேறு. தமிழகத்தில் மோடி அலை ஒரு கானல் நீர். மோடி முகம் ஆபத்தின் அடையாளம். வைகோவிற்கு இது புரிந்தால் என்ன? புரியாவிட்டால் என்ன?

மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதுபோதும்!

Pin It