ஓலைச் சுவடிகளுள் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சுக்குக் கொண்டுவந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவரான உ.வே.சாமிநாதரின் மாணவர் ---

திராவிட இயக்கத் தலைவர்களான நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரின் ஆசிரியர் - -

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர்.பிட்டி.தியாகராயர் அவர்களின் பரிந்துரையால், சென்னை  சட்டக் கல்லூரியில் பேராசிரியராக அமர்த்தப் பட்டவர் -

நீதிக் கட்சியின் அன்றைய உறுப்பினர்களுள் ஒருவரான எம்.ஏ. முத்தையா செட்டியார் அவர்களால் பாராட்டப்பட்டு, தமிழ்ப் பணிக்கான செப்புப் பட்டயம் பெற்றவர் --

சென்னைப் பல்கலைக் கழகத்தின், சென்னை மாகாணக் கலைச் சொல்லாக்கக் குழுவின்  உறுப்பினர் - -

தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் --

தமிழறிஞர் பேராசிரியர், வழக்கறிஞர், மொழி பெயர்ப்பாளர், சிறந்த சொற்பொழிவாளர், சைவசித்தாந்தச் சிந்தையாளர், தமிழ், ஆங்கிலம், மலையாளம், வடமொழி ஆகிய மொழிகளில் தேர்ந்த பன்மொழிப்புலவர் என்ற பெருமைகளுக்கு உரியவர் கா.சு.பிள்ளை என்று அழைக்கப்படும் பேராசிரியர் கா.சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள்.

இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி.

இவரின் தாயார் மீனாட்சியம்மையார், தந்தை காந்திமதிநாதப் பிள்ளை.

இந்த இணையரின் நான்காம் மகனாக 1888ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 5ஆம் நாளில் பிறந்தவர் கா.சு.பிள்ளை.

இவரின் தொடக்கக் கல்வி திண்ணையில் தொடக்கியது.

1906ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் தேர்வில் சென்னை மாகாணத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

1908ஆம் ஆண்டில், சென்னை மாகாணக் (மாநிலக்) கல்லூரியில் ‘கலை உறுப்பினர்” (Fellow of Arts)) தேர்வில் வெற்றிபெற்றார்.

தொடர்ந்து மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய புலவர் தேர்வில் முதல் மாணவராகத் தேறினார்.

இதன் பெருட்டு ஆங்கிலேயரால் உருவாக்கப் பட்ட ‘பவர் மூர்கெட்’ என்ற விருதைப் பெற்றார்.

1910ஆம் ஆண்டில் வரலாறு சிறப்புப் பாடத்தில் இளங்கலைப் பட்டமும், 

1913ஆம் ஆண்டில் ஆங்கில இலக்கியம்,

1914ஆம் ஆண்டில் தமிழ் இலக்கியம் ஆகியனவற்றில் முதுகலைப் பட்டங்களையும் பெற்றார்.

1917இல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமுதுகலைப் பட்டம் பெற்றார்.

1919ஆம் ஆண்டு நீதிபதி சேசகிரியின் உதவியால் இவர் சட்டக்கல்லூரி விதிவுரையாளர் ஆனார்.

அந்தக் காலத்தில், கல்கத்தாவில் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் பெயரில் அமைந்த விருதைப் பெறவேண்டும் என்றால், தேர்ந்த சட்டத் தலைப்பு ஒன்றில் பன்னிரண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டும் என்று ஒரு விதி இருந்தது.

பேராசிரியர் கா.சு.பிள்ளை அவர்கள், கல்கத்தா சென்று ‘குற்றங்களின் நெறி முறைகள்’ என்ற தலைப்பில் பன்னிரண்டு சொற்பொருக்காற்றி தாகூர் விருதைப் பெற்றுத் திரும்பினார்.

இவ்விருது பெற்ற ஒரே தமிழர் இவர் மட்டும்தான்.

நீதிக் கட்சித் தலைவர் சர் பிட்டி.தியாகராயர் பரிந்துரையால் சென்னை சட்டக்கல்லூரிப் பேராசிரியராக இருந்த கா.சு.பிள்ளை அவர்கள், அப்பல்கைக் கழகத்தில் உருவாக்கப் பட்ட சில விதிமுறைகள் காரணமாக 1927ஆம் ஆண்டு பதவியை இழந்தார்.

1929-1930ஆம் ஆண்டு, 1940--1941ஆம் ஆண்டு, 1943-1944ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவர் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இங்கேதான் நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் இருவரும் பேராசிரியர் கா.சு.பிள்ளையிடம் மாணவர்களாகப் பயின்றனர்.

தமிழ்மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் தமிழ் இலக்கண--இலக்கியம், வரலாறு, சைவ இலக்கியங்களைப் படித்து அவைகளை ஆய்வு செய்யத் தொடங்கினார், பல நூல்கள் எழுதினார்.

திருநெல்வேலியில் 1934ஆம் ஆண்டு, முதல் முதலாகச் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டிற்காகக் கடுமையாக உழைத்த பேராசிரியர் கா.சு.பிள்ளை, மாநாட்டின் வரவேற்புக் குழு உறுப்பினராக இருந்தார்.

அம்மாநாட்டில் எடுக்கப் பெற்ற முடிவின்படி, அதே ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ‘சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார்.

அதன் தலைவராகப் பொறுப்பேற்று 1938ஆம் ஆண்டுவரை நான்கு ஆண்டுகள் திறம்படச் செயலாற்றி இருக்கிறார் கா.சு.பிள்ளை.

‘மணிமாலை’ என்ற பெயரில் சொந்தமாக மாத இதழ் நடத்தியிருக்கிறார்.

திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் வெளியிடப்பட்ட புகழ்பெற்ற ‘செந்தமிழ்ச் செல்வி’ என்ற மாத இதழில் இவர் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.

என்னதான் வைச சித்தாந்தச் சிந்தனையாளராக இருந்தாலும், திராவிட இயக்கக் கருத்துகளின் தாக்கம் இவரை விட்டு வைக்கவில்லை.

இவர் தன் கட்டுரைகள் மூலம் சாதி மறுப்புத் திருமணங்களை வரவேற்றார். கைம் பெண்களின் மறுமணம் வேண்டும் என்றார். பெண் விடுதலை தேவை என்று சொன்ன இவர், பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு வேண்டும் என்றும் குரல் எழுப்பினார்.

தமிழ்நாட்டில் தமிழே கட்டாயப் பயிற்றுமொழி ஆகவேண்டும், கோயில்களில் தமிழ் வழிபாட்டுமொழி ஆகவேண்டும் என்று எழுதினார்.

“காலப் போக்கில் தமிழைப் புதிய கலைக்கண் கொண்டு ஆராய வேண்டும். இல்லை என்றால் உலகில் தமிழனுக்கு இடமே இல்லாமல் போய்விடும். தமிழைப் புதிய முறையில் ஆய்வு செய்தால்தான், நமது பழைய இலக்கண ஆசிரியர்களுடைய பெருமையும், அவர்களின் நுட்பமும் புலப்படும்” என்றார் கா.சு.பிள்ளை.

இப்பெருமகனாரின் நினைவாகத் திராவிட இயக்கத் தலைவர்களுள் ஒருவரான மீ.சு.இளமுருக பொற்செல்வி கரூர் மாவட்டம், குளித்தலையில் கா.சு.பிள்ளை நினைவு இலக்கியக் குழு ஒன்றை அமைத்துப் பெருமைப் படுத்தியிருக்கிறார்.

6 ஆங்கில நூல்கள், 60 தமிழ் நூல்கள் எழுதி இருக்கிறார்.

“கோயில்களில், மடங்களில் முடங்கிக் கிடக்கும் பொருள்களை, ஏழைகளின் கல்வி நலனுக்குச் செலவிட வேண்டும்” என்று சைவ சித்தாந்த வடிவில் இருந்த திராவிடக் கருத்தாளரான -

பேராசிரியர் கா.சு.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், வாதநோயினால் அவதியுற்று 1945ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 30ஆம் நாள் தன் 57ஆம் வயதில் மரணத்தைத் தழுவினார்.   

Pin It