வரும் கல்வி ஆண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள்,உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கடந்த 10ஆம் தேதி தமிழகச் சட்டப் பேரவையில், பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின் போது கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தின் போது தமிழை ஒரு பாடமாகச் சொல்லித்தரும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கே இனி அரசின் அங்கீகாரம், சலுகைகள் கிடைக்கும் என்றும், பூகோளம், வரலாறு, கணிதம், சமூக அறிவியல் போன்ற பாடங்கள் தமிழ் வழியில்தான் கற்பிக்க வேண்டும் என்றும், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக நடத்துவதோடு,பிற பாடங்களை ஆங்கில மொழியில் நடத்துவதை மாற்றி மூன்றில் இரண்டு பாடங்கள் தமிழ்வழியில் கற்பிக்க வேண்டும் என்றும்,அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றுமுதல் பத்தாம் வகுப்பு வரையும் தமிழை ஒரு பாடமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பல்வேறு பயனுறு திட்டங்களை அறிவித்தும், நடைமுறைப்படுத்தியும் வந்தது அன்றைய அரசு.

ஆனால் அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர்க்கல்வியில் கைவைத்து, நீதிமன்ற அறிவுரையை ஏற்று அதை நடைமுறைப்படுத்தினாலும்,ஏதாவது ஒரு வகையில் தன் மூக்கை நுழைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த அறிவிப்பு.

இன்று நாடெல்லாம் தமிழ்வழிக் கல்வி கோரிக்கையும் உணர்வும் மேலோங்கி வருகிறது. நீதிமன்றங்களில் தமிழ் வழக்கு மொழியாக ஆகி,அதன் நடைமுறைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலிமை பெற்றுக் கொண்டு வருகிறது.

எந்த ஒரு நாடும் தாய் மொழியைப் புறக்கணித்து வளர்ந்ததாக வரலாறே இல்லை.

ஆங்கிலம் அல்லாமல் தத்தம் தாய்மொழியையே ஆட்சி மொழியாகவும்,பயிற்று மொழியாகவும் கொண்டுள்ள நாடுகள் பல இருக்கின்றன.அவை முன்னேறிய நாடுகளாகவும் இருக்கின்றன என்பது கூடுதல் செய்தி.அண்டை மாநிலங்களில் கூட அவரவர் தாய் மொழியே கல்வியின் முதன் மொழியாகப் பயன்பட்டு வருகின்றன.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அ.தி.மு.க. ஆட்சி வரும்போது எல்லாம், தமிழை ஏதோ ஒரு வகையில் புறக்கணிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.

ஒருவனின் வரலாற்றை அழிக்க வேண்டுமானால்முதலில் அவனுடைய மொழியை அழித்துவிடு என்பார்கள்.அதுபோன்றதொரு வேலையைத்தான் இன்றைய அ.தி.மு.க. தலைமை மறைமுகமாகச் செய்ய முயல்கிறதோ என்ற அய்யம் ஏற்படுகிறது.

செம்மொழி நூலகமும்,செம்மொழிப் பூங்காவும் சிதைக்கப்பட்டுவிட்ட நிலையிலும் கூட, தமிழறிஞர்களும்,தமிழ்த் தேசிய வாதிகளும், தமிழ்மொழி, இன உணர்வாளர்களும் ஜெயலலிதாவின் இதுபோன்ற இன அடையாள அழிப்பு முயற்சிகளைக் கண்டிக்காமல் அமைதி காப்பது என்ன அறம் சார்ந்தது என்பது நமக்குப் புரியவில்லை?

Pin It