(25.04.2013 அன்று, திருவாரூர் கீழ வீதியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி)

புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் மனமகிழ்வுடன் நம்மால் அதில் ஈடுபட இயலவில்லை. இந்தப் பொதுக்கூட்டத்திற்குப் புறப்படும் வேளையில் கூட,மரக்காணம் அருகில்,தலித் மக்கள்தாக்கப்பட்ட,அவர்களின் வீடுகள்சேதமாக்கப் பட்ட செய்தியைத் தொலைக்காட்சியில் காணநேர்ந்தது.அண்ணல் அம்பேத்கர் எந்த மக்களின் விடுதலைக்காகவும், மேம்பாட்டிற்காகவும் தன் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டாரோ,அந்த மக்கள் இன்னும் அதே துயரிலும்,இருளிலும் தான் மூழ்கிக்கிடக்கின்றனர்.பிறகு எப்படி நாம் அவருடைய பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும்?

ஒரு நூற்றாண்டிற்கு முன்,அனைத்துச் சமுதாய மக்களையும் அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் செய்த பார்ப்பனியத்திற்கு எதிராய்ப் ‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்’தொடங்கப்பட்டது. அவ்வியக்கமேதிராவிடஇயக்கம்.இன்றோ,அனைவராலும்ஒடுக்கப்படுகின்றசுரண்டப்படுகின்ற தலித் மக்களுக்கு எதிராகத் ‘தலித் அல்லாதோர் இயக்கம்’தொடங்கும் முயற்சிகள் தென்படுகின்றன.

சாதியும், வன்முறையும் சரித்திரத்தில் வென்றதில்லை. எனினும் நாம் தொடக்கத்திலேயே கவனமாக இருக்க வேண்டும்.

இன்றைக்கு மதுவிலக்குக் கோரி நாடு முழுவதும் நடைப் பயணம் நடத்துகின்றவர்கள், காந்தியப் பாதையில் பயணம் செய்வதாய்ச் சொல்கின்றவர்கள் எவரும்,தீண்டாமையை எதிர்த்து, சாதி ஒடுக்கு முறையை எதிர்த்துப் பயணம் நடத்துவதில்லை.

இன்றைக்கும் நம்மிடையே இரட்டை வாழ்விடங்கள்,இரட்டைக் குவளைகள்,இரட்டைச் சுடுகாடுகள் இருக்கவே செய்கின்றன. இவை நம் காலத்தின் அவமானச் சின்னங்கள்.

தில்லியில்,ஒரு பெண் குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்துப் பெரும் கலவரங்கள் நடக்கின்றன. கொந்தளிக்கும் அந்த மக்களை நாம் பாராட்டுகின்றோம். அதே வேளையில் அதற்குள் ஒளிந்திருக்கும் அரசியலையும் நாம் மறந்து விடக்கூடாது. போராட்டங்களின்பின்னணியில்பா.ஜ.க.வும்,சி.பி.எம்.கட்சியும் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.இருக்கட்டும்.சமூக அநீதிகளை எதிர்த்து யார் போராடி னாலும் நல்லதுதான்.ஆனால் தமிழ் நாட்டிலும் அப்படிப்பட்ட கொடூரமான பாலியல் வன்முறைகள், குழந்தைகளுக்கு எதிராகத் திருப்பூரிலும், திருவைகுண்டத்திலும் நடைபெற்ற போது, இங்கு ஏன் எந்த சலசலப்பும் இல்லை?

அதே பா.ஜ.க.வும், சி.பி.எம்.மும் ஏன் இங்கு அமைதியாய் உள்ளன? தில்லி அரசுக்கு எதிராக, அதன் ஆட்சித் திறனின்மையைச் சுட்டிக்காட்டிப் போராடும் கட்சிகள்,சென்னை அரசுக்கு எதிராய் ஏன் சுட்டு விரலைக்கூட நீட்ட மறுக்கின்றன?

இந்த அரசியல் ஒரு புறமிருக்கட்டும். பொதுவாக, பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும், லஞ்சம்,ஊழலுக்கு எதிராகவும் மக்களி டம் ஒருவிதமான எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது அல்லவா? இவையயல்லாம் எதிர்க்கப்பட வேண்டியவை என்னும் ‘பொதுப்புத்தி’ நம்மிடம் உள்ளதல்லவா? இதைத்தான் அண்ணல் அம்பேத்கர் ‘பொது மனசாட்சி’ (Public Conciousness) என்று அடிக்கடி குறிப்பிடுகின்றார்.

அந்தப் பொதுமனசாட்சி,தீண்டாமைக்கு எதிராக,சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக ஏன் எழவில்லை என்பதுதான் நம்முடைய கேள்வி.

இன்று இந்தியா முழுவதும் கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் 12 இலட்சம் பேர் உள்ளனர்.இதைவிடக் கொடுமை வேறு என்ன உள்ளது?நாம் எப்படி நாகரிகமான சமூகத்தில் வாழ்கிறோம் என்று கூறிக்கொள்ள முடியும்?

அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ள இன்றைய சூழலிலும்,தமிழ்நாட்டில் 27,000 உலர் கழிப்பறைகள் (Dry Latrines) உள்ளன. அவற்றுள் பெரும்பான்மையானவை திருச்செந்தூர் போன்ற ‘புனித ஸ்தலங்களில்தான்’உள்ளன.கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்கிவிட்டு வரும் எவரும் இந்தக் கொடுமையைக் கண்டிக்க முன்வரவில்லையே ஏன்? இவை எல்லாம் இயல்பான ஒன்றுதான் என்று கருதி விடுகின்றோமே, எதனால்? இவற்றுக் கெல்லாம் எது காரணம்?

இந்து மதமும், இந்து மனமும்தான் காரணம்.

ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் தாக்குகிறேன் என்று கருதாதீர்கள்! இந்து மதத்தை யும், வருண-சாதி அமைப்பை யும் பிரிக்கவே முடியாது. அந்த ‘வருணாசிரம அதர்மம்’ தான், நம் சொந்தச் சகோதரர்களின் மீது இவை போன்ற இழிவுகளைச் சுமத்தியது. அப்படிப்பட்ட இந்து மதக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் ‘இந்துமனம்’நமக்குள் ஒளிந்திருக்கிறது. அதனால்தான், இக்கொடுமை கண்டு சீறுகின்றவர்களாய் நாம் இல்லை.

அந்தச் சீற்றம் ஏற்பட்டு,அனைவருக்கும் சமத்துவம் ஏற்பட நாம் இணைந்து போராடும் நாள்தான், உண்மையான அம்பேத்கர் - பெரியார் பிறந்தநாள் ஆகும்!

Pin It