உலகத் தமிழ் ஆய்வியல் நடுவம் நடத்திய 5 நாள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த எனக்கு, வழக்கத்தை விடக் கூடுதலாக நூல்களைப் படிக்க நேரம் கிடைத்தது. ஜெயமோகனின் இன்றைய காந்தி நூலைப் படித்து முடித்துவிட்டு, இப்போது இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ள அருண் ஷோரியின் ' Woshipping False Gods ' என்னும் ஆங்கில நூலைப் படித்துக் கொண்டுள்ளேன். இரண்டு நூல்களும், மாமேதை அம்பேத்காரைக் கொச்சைப்படுத்துவதில் போட்டி யிடுகின்றன. எனினும் நுட்பமான ஒரு வேறுபாட்டை இரு நூல்களுக்குமிடையில் காண முடிகிறது.

ஜெயமோகனே கூறுவது போல், அருண் ஷோரியின் நூல் ‘மட்டையடி’யாக உள்ளது. ஜெயமோகன், அப்படியில்லாமல், மிகவும் தந்திரமாகவும்,பதமாகவும் அதே செயலைச் செய்துள்ளார். இன்னொரு வேறுபாடு என்னவென்றால், அம்பேத்காரை மட்டுமின்றி, காந்தியார், நேரு, பெரியார் என அனைத்துத் தலைவர்களையுமே ஜெயமோகன் தன்னால் இயன்றவரை நூலுள் இழிவு படுத்தியுள்ளார்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், பக்கத்திற்குப் பக்கம் காந்தியாரைப் புகழ்வது போன்று நூல் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், வேறு யாரைக் காட்டிலும், காந்தியார்தான் மிகப் பெரும் இழிவுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார். ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரரால் மட்டும்தான் இவ்வளவு தந்திரமாக அல்லது வஞ்சகமாக எழுத முடியும் என்று நினைக்கிறேன். காந்தியாரைப் பற்றிய, இன்றைக்குத் தேவை இல்லாத பல விவாதங்களை எழுப்பும் இந்நூலின் உள்நோக்கம் புரியாமல், காந்தி பக்தர்கள் பலரே இந்நூலை என்னிடம் பரிந்துரைத்தனர் என்பதுதான், ஆகக் கூடுதலான கவலைக்குரிய செய்தி.

காந்தியும் காமமும் என்ற தலைப்பின் கீழ் 42 பக்கங்கள் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன. அப்பகுதியைப் படிக்கும் எவர் ஒருவரும், இன்றுவரை காந்தியாரின் மீது கொண்டிருந்த பல மதிப்பீடுகளை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துவிடுவர். ‘காந்தியாரின் புகழை உயர்த்துவதற்காக’, ஜெயமோகன் மிகவும் சிரமப்பட்டு, வெளிக்கொண்டுவந்துள்ள சில செய்திகளைக் கீழே பார்க்கலாம்:

“1946இல், டிசம்பர் இருபதாம் தேதி முதல், காந்தியும், உறவில் அவரது பேத்தியுமான மனுவும், ஒரே படுக்கையில் நிர்வாணமாக உறங்க ஆரம்பித்தார்கள் என்கிறார் பிக்குபரேக். காந்தி, மனுவிடம் இந்த விஷயத்தை அவளே தன் தந்தைக்குக் கடிதம் எழுதித் தெரிவிக்க ஆணையிட்டார். மேலும், மனு என்ன நினைக்கிறாள் என்பதை ஒவ்வொரு நாளும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் காந்தியிடம் காட்டிக் கையெழுத்துப் பெற வேண்டும் என்றார்.”

காந்தியார் பற்றிய சித்திரத்தை இத்துடன் நிறுத்தி நிறைவு கொள்ளவில்லை ஜெயமோகன். அவர்கள் எப்படி உறங்கினார்கள் என்பதைக் காந்தியாருடன் சேர்ந்து உறங்கிய இன்னொரு பெண்ணான சுசிலா நய்யாரின் கருத்தையும் அறிந்து எழுதுகின்றார்.

“காந்தியுடன் படுத்தவரான சுசிலா நய்யார், ‘அக்காலத்தில் எல்லாம் அதை ஓர் இயற்கை சிகிச்சை என்றே பாபு சொன்னார். அவரது முதுகின் மீது நாங்கள் படுத்துக் கொள்வோம். பாபு உடனே தூங்கி விடுவார். அன்றும் இன்றும் இதில் என்ன பிழை இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை’ என்று சொன்னார்.”

இவ்வாறெல்லாம் எழுதி, காந்தியாரின் வாழ்க்கை எவ்வளவு திறந்த புத்தகமாக உள்ளது பாருங்கள் என்கிறார் ஜெயமோகன். இதனைப் படிக்கின்றவர்கள் காந்தியாரின் புகழை உணராமல், தாங்களும் ‘இயற்கை சிகிச்சை’ நோக்கிச் சென்றுவிட்டால் என்ன செய்வது என்று அவர் சிந்திக்கவில்லை போலும்.

மேலும், காந்தியாரின் இச்செயலைக் கண்டு, அவருடைய வங்காள மொழிபெயர்ப்பாளர் நிர்மல்குமார் போஸ் அதிர்ச்சி அடைந்ததாகவும், அவரின் தனிச் செயலாளர் ஆர்.பி.பரசுராம் வேலையை விட்டே விலகி விட்டதாகவும் ஜெயமோகன் கூறுகின்றார். இவ்வளவும் காந்தியாரின் புகழை உயர்த்துவதற்குத்தானாம்.

இந்த இடத்தில், பெரியாரையும் அவர் துணைக்கு அழைக்கின்றார். வெளிநாடு சென்றிருந்தபோது பெரியார் நிர்வாண சங்கத்திற்குப் போய்ப் படம் எடுத்துக் கொள்ளவில்லையா என்கிறார். ஈ.வேராவின் மனநிலையும் அப்படிப்பட்டதே என்கிறார். சமண மதத்தின் நிர்வாண சாமியார்கள் பற்றியும் பேசுகின்றார். ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத செய்திகளைப் பெசுகின்றாரே என்று நமக்குத் தோன்றும். ஆனால் அவர் காரணத்துடன்தான் பேசுகின்றார். காந்தியார், பெரியார், சமணத் துறவிகள் எல்லோருமே ஆர்.ஆர்.எஸ். இயக்கத்தினருக்குப் பிடிக்காதவர்கள்தாமே!

அம்பேத்காரைப் பற்றிய வடிவமைப்பை உருவாக்குவதிலும் ஜெயமோகன் மிகக் கவனமாக இருக்கின்றார். அருண் ஷோரியைப் போல் மட்டையடி அடித்துவிடாமல், கவனமாகப் பதமாக அடிக்கின்றார். ஓர் இடத்தில்,

“நூற்றாண்டு காலச் சுரண்டல் மற்றும் இழிவிலிருந்து மெல்லக் கண்விழித்து உரிமைகளுக்காக எண்ணமிடும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் குரல் அவர்”

என்கிறார். அடடா, அம்பேத்காரைப் பற்றி இவ்வளவு தெளிவாகச் சொல்கின்றாரே என்று நம்மை மகிழ வைத்துவிட்டு, பிறிதோர் இடத்தில்,

“அம்பேத்காரைப் பற்றிய குற்றச்சாட்டு, அவர் என்றுமே அரசியலில் ஒரு மக்கள் தலைவராக இருக்கவில்லை என்பதே”

என்று எழுதுகின்றார். இவற்றுள் எதனை நாம் நம்புவது? மக்கள் தலைவராகவே இல்லாத ஒருவர், எப்படி அச்சமூகத்தின் குரலாக இருந்திருக்க முடியும்? இரண்டு குரலில் ஜெயமோகன் பேசினாலும், அவருடைய உண்மைக்குரல் பல இடங்களில் வெளிப்பட்டு விடுகின்றது. இன்னொரு இடத்தில், அம்பேத்காரைப் பற்றி அவர் கூறுவதைப் படிப்போம்:

“அவர் எப்போதுமே அரசியல் சதிகள், பேரங்களில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்தார்........ அம்மக்களின் எண்ண ஓட்டங்கள், வாழ்க்கை, பலவீனங்கள், சிக்கல்கள் எதுவுமே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்று சொல்கிறார்கள்.”

இதற்கு மேல் ஒரு தலைவரின் மீது எப்படிச் சேறு வாரி இறைக்க முடியும்? அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்று சொன்னால் கூடக் குற்றமில்லை. ‘தெரிந்திருக்கவில்லை என்று சொல்கிறார்கள்’ என்கிறார் ஜெயமோகன். யார் அவர்கள்? எப்போது ஜெயமோகனிடம் வந்து சொன்னார்கள்? போகிற போக்கில் சேறு வீசுவது என்பது இதுதான்.

இதே ஜெயமோகன்தான் இப்போது, அயோத்தி தாசப் பண்டிதர் குறித்து ஒரு நூல் எழுதி, தலித் மக்களிடம் கொண்டு சென்று கொண்டிருப்பதாக ஒரு நண்பர் கூறினார். அயோத்திதாசர் நிலைமை என்ன என்பதை அந்நூலைப் படித்துப் பார்த்தால்தான் தெரியும்.

காந்தியார், அம்பேத்கார், பெரியார் என எல்லோரையும் இழிவு செய்யும் ஜெயமோகன் எவரைத்தான் புகழ்ந்து பேசுவார்? திலகர், ஹெட்கேவார், கோல்வாக்கர், அத்வானி, மோடி என்று அவ்வரிசை நீளலாம்.

 (சுபவீ வலைப்பூவிலிருந்து)

Pin It