06.07.2011 தினமணி நாளிதழில்...

ஜெயலலிதாவிடம் ஆரம்பமே நன்றாக உள்ளது. ஆட்சிக்கு வந்தபின் கருணாநிதி கட்டிய கோட்டையில் நான் இருக்க மாட்டேன் என்று சொன்னபோது, இவர் இன்னும் மாறாமல் பழைய மாதிரியே இருக்கிறாரே என்று எண்ணினேன். ஆனால் தில்லியில் பத்திரிகையாளர்களிடம், கட்டடம் முழுமையாகக் கட்டி முடியாத நிலையில் சினிமாக்காரர்களை வைத்து செட் போட்டு திறப்பு விழா நடத்திய கட்டடத்தில் அனைத்து அரசு அலுவலகங்களையும் வைக்க முடியாது என்று அவர் அளித்த விளக்கம் பொருத்தமாக இருந்தது.

- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

****

கட்டி முடித்த கட்டிடம் எதுவுமில்லை

- திருச்சி செல்வேந்திரன், வெளியீட்டுச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்

இது அந்த ஈரோட்டுப் பேர்வழியின் தரத்திற்கான பதில் அல்ல. முதலமைச்சர் பொறுப்பிற்கான பதில்.

ஜெயா ஏற்கனவே, கலைஞர் எடுப்பித்த கட்டிடத்திற்குள் நுழைவதில்லை என்று எடுத்த முடிவிற்கான காரணங்களைத் தேடுகிறார். தேர்தல் முடிவிற்கு முன்னதாகவே, ஊடகங்கள், அவர் அங்கே போகமாட்டார் என்பதைத் தெரிவித்து விட்டன.

உலகிலேயே முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் என்று எதுவும் இல்லை. சக்கர வர்த்திகள் எடுத்த எகிப்தின் பிரமிடுகளிலே இருந்து, அண்மையில் ஜெயா போய்த் தரிசனம் செய்த திருவரங்கம் கோயில் வரைக்கும் இது பொருந்தும். அங்கேயே கட்டி முடிக்கப்படாத கோபுரங்கள் இருந்தன. ஆனால் அதற்கு முன்னதாகவே, அந்தக் கோயில் முழுமை பெற்றதன் அடையாளமாக, திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாக்கள் 400 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நடந்து முடிந்து விட்டன. அப்போது ஜெயாவைப் போல், சினிமா செட் உதாரணம் சொல்லுகிற அறிவாளிகள் எல்லாம் யாரும் இல்லை.

சென்னை ஓமந்தூரார் சட்டமன்ற வளாகம் மட்டுமல்ல, எத்தனையோ அரசு அலுவலகக் கட்டிடங்களில் ஒவ்வொரு பகுதியும் வேலை முடிய முடிய, பகுதி பகுதியாக அங்கே குடியேறியுள்ளார்கள். கடந்த காலங்களில் ஜெயா திறந்து வைத்த கட்டிடங்களிலேயும் இதுதான் நடந்திருக்கிறது. ஓமந்தூரார் வளாகக் கட்டிடத்திலேயும் முழுமையாகப் பணிகள் முடிந்துவிட்டாலும் கூட, அரசின் அத்தனை துறை அலுவலகங்களையும் அதற்குள் கொண்டு வந்துவிட முடியாது என்பது சராசரி அறிவாளிக்கே தெரியும். இந்தியாவின் பல்வேறு மாநிலச் சட்டமன்றங்களும், துறை அலுவலகங்களும், வெவ்வேறு இடங்களிலேதான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பிச்சைக்காரனுக்குச் சோறு போடக் கொடுத்த காசில், எச்சில் வாழ்வு வாழும் இழிபிறவிகள் முதலில் தங்கள் நிர்வாகங்கள் ஒழுங்காய்த்தான் நடக்கின்றனவா என்று தெரிந்து கொள்ளட்டும்.

சொந்த அம்மாவிடம் சொத்து வாங்குவதற்காக, இந்த அம்மாவுக்கு நல்ல பிள்ளை ஆவதற்கு, எதற்குக் குறுக்கு வழியில் எல்லாம் பாய வேண்டும்?

 ***

வார்டு கவுன்சிலராகக் கூட வரமுடியாதவர்!

 - வீர. வளவன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆரம்ப ஜால்ரா அரைவேக்கட்டுத்தனமானது. இவர் கூறியிருக்கும் கருத்து உள்நோக்கம் கொண்டது. உள்ளாட்சித் தேர்தலை மனத்தில் கொண்டு சொல்லப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஈழத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் கொச்சைப்படுத்திக் கருத்துக் கூறியவர் ஈ.வி.கே.எஸ். 2011 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசின் தேர்தல் குழுவில் புறக்கணிக்கப்பட்டதால், அவரின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்து, அவருக்குச் சீட்டுக் கிடைக்காமல் கவனமாய்ப் பார்த்துக் கொண்டனர். வரும் உள்ளாட்சித் தேர்தலிலாவது காஙகிரஸ் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து, வார்டு கவுன்சிலர் பதவியையாவது வாங்கிவிட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ஆரம்பகால ஜால்ரா.

1000 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து கட்டப்பட்ட எழில்மிகு தலைமைச் செயலகத்தை சினிமா செட் என்று சொன்ன அந்த முன்னாள் கதாநாயகிக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். அம்மாவின் ஆடசிக் காலத்தில் தலைமைச் செயலகம் கட்ட மீனவர் குயிருப்பு முதலில் அப்புறப்படுத்த முயற்சி நடைபெற்றது அது தடுக்கப்பட்டு, ராணி மேரிக் கல்லூரி குறிவைக்கப்பட்டுக் கல்லூரி மாணவிகளின் வீரமான போராட்டத்தினாலும், தி.மு.கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போன்றோர் போராட்டத்திற்கு அளித்த ஆதரவினாலும் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகமும் ஆய்வு செய்யப்பட்டது.

ஆனால் தி.மு.க. ஆட்சியில், யாருக்கும் இடையூறு இன்றி, சென்னையின் மையப்பகுதியில் எழில்மிகு தலைமைச்செயலகம் அமைக்கப்பட்டது. புதிய தலைமைச்செயலகத்தை அம்மா புறக்கணிப்பதன் மூலம், மக்களின் வரிப்பணம், மக்களின் உழைப்பு ஆகியவற்றை மதிக்கத் தவறிவிட்டார். மேலும் சினிமா செட் என்று சொல்லி சினிமா கலைஞர்களையும் அவமதித்து இருக்கிறார். மஞ்சள் காமாலைக்காரன் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தெரிவது போல, சினிமாக்கார அம்மையாருக்கு பார்ப்பதெல்லாம் சினிமா செட்டாகவே தெரிகிறது போலும்.

இந்த அவலங்களைப் பாராட்டும் இளங்கோவனுக்கு, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், காங்கிரீட் வீடு திட்டம் போன்ற நல்ல திட்டங்களைப் புறக்கணித்ததைச் சுட்டிக்காட்டும் நேர்மை இல்லை. இன்று அம்மாவிற்கு ஆரத்தி எடுக்கும் இதே இளங்கோவன்தான், முன்பு அம்மாவைக் குமாரி கோமளவள்ளி என்று கொச்சைப்படுத்திக் கொள்கை பேசிய கோமகன்.

Pin It