சென்னை, மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டடத்தில் இறந்துபோன 61 ஏழைத் தொழிலாளிகளுக்கு, இந்திய நாடாளுமன்றமே இரங்கல் தெரிவித்துவிட்டது. எப்படித் தெரியுமா? “இடி, மின்னல், மழை காரணமாக இடிந்து விழுந்த கட்டடத்தில் பலியான...” என்று அந்தத் தீர்மானம் கூறுகின்றது.

moulivakkam tragedyஇடி, மின்னல், மழையில் அப்பகுதியில் இருந்த மண் வீடுகள் கூடச் சரிந்துவிடவில்லை. ஆனால் 11 மாடிக் கான்கிரீட் கட்டடம் தரை மட்டமாக இடிந்து போய்விட்டது. இடிந்ததற்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் அது குறித்துக் கவலை கொள்ளவில்லை. ‘இடி, மின்னல், மழை’யின் மீது பழிபோட்டு விட்டு, வேறு வேலைக்குப் போய்விட்டனர்.

மாநில அரசு, மீட்புப் பணிகளில் ஈடுபட்ட குழுவினருக்குப் பாராட்டு விழா நடத்துகின்றது. 61 பிணங்களை அடுக்கி வைத்துக் கொண்டு, பாராட்டு விழா நடத்திய ஒரே அரசு, தமிழக அரசாகத்தான் இருக்க முடியும். இதனை விடப் பெருங்கொடுமை இனி என்ன உள்ளது? தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம், இதற்கும் தமிழக அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்கிறார். அப்படியானால், விதிகளை எல்லாம் தளர்த்தி, அங்கே 11 மாடிக் கட்டடம் கட்டுவதற்கு அனுமதி கொடுத்தது ஜப்பானிய அரசா?

அமைச்சர் வைத்தியலிங்கம் ஏன் அவ்வளவு பதற்றப்படுகிறார்? அவரைப் பற்றியும், அவருக்கும் அந்தக் கட்டட உரிமையாளர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றியும் ஊடகங்கள் எழுதியுள்ளன. அதற்கு ஏன் அமைச்சர் எந்த விடையும் அளிக்கவில்லை? நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கக் கூடும் என்று ஊடகங்கள் சந்தேகிக்கின்ற இந்தக் கோரமான விபத்து குறித்து, துறை சார்ந்த அமைச்சராக இருந்தபோதும், வாயே திறக்கவில்லை அவர். உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளைத் விரைவுபடுத்தி இருக்க வேண்டிய பொறுப்பில் இருந்தும் தவறியிருக்கிறார். அவர் மீது பத்திரிகைகள் வைத்த குற்றச்சாட்டுக்கும் விடை அளிக்க வில்லை. எதிர்க்கட்சிகளுக்குப் பேசவே வாய்ப்பளிக்காத சட்ட மன்றத்திற்குள் அமர்ந்துகொண்டு, எதிர்க்கட்சியினரை ‘ஓடுகாலிகள்’ என்று தரக்குறைவாகப் பேசியிருக்கிறார்.

இடிபாடுகளில் சிக்கிய எல்லோரும் மீட்கப்பட்டுவிட்டனரா என்பதே இன்னமும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. கட்டடம் இடிந்தது ஒரு சனிக்கிழமை. தொழிலாளிகள் ஊதியம் பெறும் நாள். அதனால் அத்தனை தொழிலாளர்களும் அங்கு கீழ்த் தளத்தில்தான் இருந்திருக்கிறார்கள். தொழிலாளர்களின் குழந்தைகள் பலர் கீழே விளையாடிக் கொண்டிருந்திருக் கிறார்கள். ஆனால், தோண்டி எடுக்கப் பட்ட உடல்கள் 61 மட்டுமே. உயி ரோடு மீட்கப்பட்டவர்கள் 27 பேர் தான். அவ்வாறாயின் மற்றவர்கள் எல்லோரும் எங்கே?

இவ்வாறு பல கேள்விகள் நம்முன் நிற்க, பாராட்டுவிழாவைத் தமிழக அரசு நடத்தியிருக்கிறது. அதற்குத் தடபுடலாகப் பெரிய பெரிய பதாகைகள் சென்னையில் வைக்கப்பட்டன. அவற்றைத்தான் டிராபிக் இராமசாமி என்னும் மனிதர் தன்னந்தனியாக வந்து கிழித்து எறிந்தார். ‘அறிவில்லாத ஆளுங்கட்சியினர்’ என்றும் ஜெயலலிதா ஆள்வதற்குத் தகுதியற்றவர் என்றும் கடுமையாகத் தொலைக்காட்சிகளில் பேட்டியும் அளித்தார். ஆனாலும் எந்தப் பயனும் இல்லை. சட்டமன்றத்தில், தி.மு.க., தே.மு.தி.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல, இது குறித்து விவாதம் நடத்தக் கோரினர். அதற்கும் அவைத்தலைவர் அனுமதிக்கவில்லை. இது ஜனநாயக நாடுதானா?

ஆனால், ஆனந்த விகடன் (16.07.2014) இப்படிச் சொல்கிறது, “சி.எம்.டி.ஏ. மீது எந்தத் தவறும் இல்லை. அனுமதி எல்லாம் முறையாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கட்டடம் கட்டிய விதத்தில்தான் தவறு” என்று மாநில முதலமைச்சரையே நம்பவைத்து, பேட்டியும் கொடுக்கச் செய்யும் அளவுக்கு இந்த அதிகாரிகள் செல்வாக்கோடு இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது, அரசு இயந்திரத்தின் மீது பேரச்சம் எழுகிறது!”.

எப்படி முட்டுக்கொடுக்கிறது பாருங்கள் ஆனந்தவிகடன். தன் நிழலைக்கூட நம்பாதவர் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரியும். திருவள்ளூரில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 11 பேர் அநியாயமாக பலி யாகியுள்ளனர். அங்கு முதலமைச்சர் போய் மீட்புப் பணிகளைப் பார்வை யிடவில்லை. மவுலிவாக்கத்திற்குத் துறை அமைச்சரே போகாத நிலையில், மாநில முதல்வர் நேரடியாகக் களத்திற்குச் செல்வதும், பாராட்டுவிழா நடத்திப் பரிசுகள் வழங்குவதும் சிக்கலை திசை திருப்பும் செயலாக ஆனந்த விகடனுக்குத் தெரியவில்லையா?

நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணைக் குழு ஒன்றைத் தமிழக அரசே அமைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

மத்திய புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உடனே ஆணையிடப்பட வேண்டும் என்று கோரி 12.07.2014 அன்று தி.மு.கழகம் ஒரு பெரும் பேரணியை நடத்தியுள்ளது. தே.மு.தி.க.,வும் வேறு சில கட்சிகளும் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளன. நியாயமான இந்தக் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும் என்பதே வெகுமக்களின் விருப்பம்.

Pin It