நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், மக்களவையில் ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாகக் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதில் அறிக்கை தாக்கல் செய்தார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. அந்த அறிக்கையில் ‘நீண்ட காலத்திற்குத் தமிழர்கள் முகாம்களில் அடைபட்டுக் கிடப்பதை இந்தியா அனுமதிக்காது ’ என்று கூறியிருக்கிறார் அவர். இதில் இந்தியா அனுமதிக்காது என்ற சொற்றொடரில் ஓர் அழுத்தமும், இலங்கை மீதான ஓர் ஆளுமையும் இருப்பது போன்ற  ‘ தொனி ’ இருப்பதை உணரலாம்.

இந்த அழுத்தத்தையும், ஆளுமையையும் ஈழத்தில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இனவெறி இராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடந்த போது, இந்தியா இலங்கைமீது செலுத்தியிருந்தால் அங்கே இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருப்பது தடுக்கப்பட்டு இருக்கலாம். அன்று வராத இந்த அழுத்தமும் ஆளுமையும் இன்று வந்திருப்பது வியப்பாக இருக்கிறது.

தொடர்ந்து அமைச்சர் கிருஷ்ணா தன் அறிக்கையில், இலங்கைப் பிரச்சினையைத் தமிழர் பிரச்சனையாகக் குறுக்கிக் கொண்டு அணுக வில்லை. தேசியப் பிரச்சினையாக அணுகு கிறோம். அதனால்தான் தமிழர் பிரச்சினை என்றோ, மாநிலப்பிரச்சனை என்றோ தடாலடியாகப் பிரச்சினையை அணுகாமல், தேசியக் கண்ணோட்டத்தில் பிரச்சினை அணுகப்படுகிறது என்று ஒரு வியாக்கியானத்தை வழங்கியிருக்கிறார்.

இது தமிழர் பிரச்சினையா அல்லது தேசியப் பிரச்சினையா என்பதல்ல கேள்வி. முதலில் இது ஒரு மனிதநேயப் பிரச்சினை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். வட இலங்கையில் சுட்டுக் கொல்லப்படு வோரின் சடலங்களை எவ்வித நீதிவிசாரணையும் இன்றி ஆயுதப் படையினரே எரிக்கலாம் அல்லது புதைத்துவிடலாம் என்று இலங்கை அரசு 1983 ஆம் ஆண்டு ஜுலை 3ஆம் தேதி ஓர் அரசாணையை வெளியிட்டது.

இதனை அறிந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஜுலை 19 ஆம் தேதி, இந்திய வெளியுறவுத் துறை கூடுதல் செயலாளர் கிரிஜா சங்கர் வாஜ்பேயி மூலம், இலங்கைத் தூதர் பெர்னட் திலகரத்த னவை பாதுகாப்புத் துறை அமைச்சகத்திற்கே அழைத்து இந்தியாவின் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.இந்தக் கண்டனம் கொழும்பு நாடாளு மன்றத்தை உலுக்கியது.

ஜுலை 23ஆம் தேதி ஈழப் பிரச்சனை குறித்துப் பேச, நாடாளுமன்ற உறுப்பினர் எல்.கணேசன் இந்திரா காந்தியைச் சந்தித்த போது, “J.R. is not my friend, but I will speak to him”  என்று கடுமையாகக் கூறியிருக்கிறார். விளைவு? இந்திரா காந்தியின் கோபத்தினால் ஜே.ஆர். ஜெயவர்தன அரண்டு போய்விட்டார். அரசாணையும் கிடப்பில் போனது.

இங்கே இதை தமிழர் பிரச்சினையா, தேசியப் பிரச்சினையா என்று இந்திராகாந்தி பார்க்க வில்லை. முதலில் மனிதநேயப் பிரச்சினையாக இதைப் பார்த்தார். கடந்த மே மாதம் ஈழத்தில் போரின் உச்சகட்டம் மிகக் கடுமையாக இருந்தபோது, அங்கு அப்பாவிப் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கப்பட்டபோது, அது தமிழர் பிரச்சினையாகவோ, தேசியப் பிரச்சி னையாகவோ இந்தியா பார்க்கவில்லை.

மாறாக இலங்கையின் இறையாண்மையில் இந்தியா தலையிட முடியாது என்று    முகர்ஜி களும்,   மேனன்களும்  திரும்பத் திரும்ப சொல்லி கொண்டு இருந்தார்கள். இந்தப் பிரச்சினை தேசியக் கண்ணோட்டத்தில் அணுகப்படுவதாக கிருஷ்ணா கூறியிருக்கிறார்.

எந்தத் தேசியம்? இந்தியத் தேசியமா? இலங்கைத் தேசியமா? இரண்டும் இணைந்த தேசியமா? இந்திய இலங்கை அசைவுகள் சிங்களத் தேசியத்தை கண்முன் கொண்டு வருகிறது.

கொடுமையான  இனப்படுகொலையில் சமபங்கு வகிப்பவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவும், இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் என்பது உலகமே அறிந்த செய்தி. போர் மரபை மீறி இனப்படு கொலையால் கிடைத்தக் கேவலமான வெற்றி தனக்கே சொந்தம் என்று ராஜபக்சேவும், பொன்சேகாவும் தனித்தனியாக சொந்தம் கொண்டாடினர். காரணம் சிங்கள இனவெறி ஆதரவை வாக்கு களாக அறுவடை செய்து இலங்கையின் அதிபராகிவிடலாம் என்ற பதவி ஆசை.

இப்படிப்பட்ட சூழலில் ராஜபக்சே நேபாளப் புனிதப் பயணம் என்று திருப்பதி தரிசனத்திற்கு வந்தார். அவர் டில்லியில் இந்திய அமைச்சர்களைச் சந்தித்ததாகப் பத்திரிகைகளில் செய்திகள் உலவியது.

சரத் பொன்சேகா தன் பதவியைவிட்டு விலகியவுடன் பிரணாப் முகர்ஜி கொழும்புக்கு விரைந்தார். அவர் சென்று வந்த பிறகு சரத் பொன்சேகா டில்லிக்கு வந்தார். இந்தப் பயணங்கள் குறித்து இந்திய அரசின் விளக்கம் எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை. அங்கே முள்வேலி முகாம்களில் வதைபட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களின் மீது திடீர் கரிசனம் பொன்சேகாவுக்கு வந்து முதலைக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்.

வதை முகாம்களில் இருந்து தமிழர்கள் விடுவிக்கப்பட்டு அவரவர் வீடுகளுக்குச் செல்வதாக கணக்குக் காட்டிக் கொண்டிருக் கிறார் ராஜபக்சே. இந்திய அரசும் இதை வழிமொழிந்து கொண்டு இருக்கிறது.

“ உண்மையில் முகாம்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மன்னார், துணுக்காய்ப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் தேவாலயங்களில் மொத்தமாக, மந்தைக ளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் ஒரு பெரிய முகாமிலிருந்து மாற்றப்பட்டு இன்னொரு சிறிய மூடிய சிறைச்சாலை முகாமுக்குள் அடைக்கப்படுகின்றனர். இவர்க ளின் நிலைமை எண்ணெய்ச் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாகவே இருக்கிறது ” என்ற உண்மையை உடைத்து வெளிப்டையாகச் சொல்கிறார், ரணில் விக்கிரமசிங்கேவின் வலக்கர மாக இருப்பவரும், இலங்கையின் முன்னாள் அமைச்சரும், தற்போது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜெயலத் ஜெயவர் தனே ‡ இவர் ஒரு சிங்களர் என்பது குறிப்பிடத் தக்கது.

முள்வேலி வதை முகாமில் இருந்து உண்மையில் விடுவிக்கப்பட்டுச் செல்லும் தமிழர்கள் தம் இருப்பிடம் செல்லும் போது, அங்கே அவர்களின் நிலம், வீடு இவைகளைச் சிங்களர்கள் கைப்பற்றி இருப்பது தெரியவருகிறது.

கடந்த நவம்பர் 21 ஆம் தேதி 10 இளம்பெண்களும், 27 ஆம் தேதி 30 இளைஞர்களும் முகாமில் இருந்து காணாமல்போய் இருக்கிறார்கள். இவர்களை சிங்கள இராணுவம் அழைத்துச் சென்றதாக முகாமில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். இப்படி அழைத்துச் செல்லப்படுபவர்கள் கற்பழித்துக் கொல்லப்படுவதாக நெஞ்சம் பதறுகிறார் டாக்டர் ஜெயலத் ஜெயவர்தனா.

“ முள்வேலி முகாம்களில் தமிழர்களுக்கு உணவில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை. பிச்சை எடுத்து வாழ்பவனின் நிலையைவிட அவர்கள் மோசமான நிலையில்  வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். குடிக்கவே தண்ணீர் இல்லாத போது குளிப்பதைப் பற்றி நினைக்கவே முடியாது. முகாம்களில் உள்ள பெண்களின் கூந்தல் திரிந்து சடையாகிப் போயிருக்கிறது. எண்ணற்ற தோல் வியாதிகளும், தொற்று வியாதிகளும் பரவிக்கிடக்கின்றன. எம் பகைவனுக்குக்கூட இந்த முகாம்களில் தங்குகிற கொடூர நிலை வரக்கூடாது ” என்று (ஜுனியர் விகடன் 9.12.2009) ஜெயலத் ஜெயவர்தனாவின் நெஞ்சத்தில் மனிதாபிமானம் இருப்பது தெரிவது மட்டுமல்ல, முகாம்களில் நிலைமை இன்னும் கொடுமையானதாக இருப்பதும் தெரியவருகிறது.

இப்படிப்பட்ட நிலையில், ஈழ முள்வேலி முகாம் மக்களின் பிரச்சினையை, குறுகிய தமிழர் பிரச்சினை என்றும், தேசியப் பிரச்சினை என்றும், தேசியக் கண்ணோட்டம் என்றும் நாடாளுமன்றத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா அறிக்கை சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார். இந்த அறிக்கையைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், அமைச்சர் கிருஷ்ணாவின் அறிக்கை இலங்கை அரசின் நிலையைப் பிரிதிபலிப்பதாகக் குற்றம் சாட்டினார் நாடாளுமன்றத்தில்.

ஈழத்தில் முள்வேலி வதை முகாம் மக்கள், அங்கிருந்து வெளியேறி,   அந்த மக்களின் வாழ்வாதாரங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும்தான் அந்த மக்களுக்கு உடனடித் தேவை. அத்தகைய உதவிகளும் இலங்கை அரசின் மூலம் அல்லாமல், சர்வதேச தொண்டு நிறுவனங்களின் நேரடிப்பார்வையில் தான் செய்ய வேண்டும் என்பது மிக மிக அவசியம்.

துடித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, அவர்களின் துயரங்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, இலங்கை அரசின் நிலையை பிரதிபலிக்கும் தேசியம் பற்றிய அறிக்கையில் அந்த அப்பாவி மக்களுக்கு எந்தப் பயனும் விழையப் போவதில்லை என்பது மத்திய அரசுக்குத் தெரியாமல் இருக்கலாம்,

மனிதாபிமானம் உள்ளவர்களுக்குத் தெரியாமல் போகாது!

- எழில்.இளங்கோவன்

Pin It